கொரோனா வைரஸால் இந்தியா மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் அதிகம் பாதிப்படைந்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மாநிலங்களைத் தவிர்த்து பிற மாநிலங்களிலும் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. அதில் கர்நாடகாவும் ஒன்று. இந்திய அளவில் பாதிப்பு எண்ணிக்கையில் நான்காவது இடத்தில் கர்நாடக மாநிலம் உள்ளது. இந்த நிலையில் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர், `நம்மைக் காப்பாற்ற கடவுள்தான் உதவ வேண்டும்’ என்று கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரங்களில் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு கொரோனா பாதிப்புகள் தொடர்பாக பேசுகையில், ``உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து வருகிறது. நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும், ஏழையாகயாக இருந்தாலும் கொரோனா வைரஸ் பாகுபாடு காட்டாது. அடுத்த இரண்டு மாதங்களில் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கும். வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதற்கு அரசாங்கத்தின் அலட்சியம் அல்லது அமைச்சர்களின் பொறுப்பற்ற தன்மைதான் காரணம் எனக் குற்றச்சாட்டுகளை பலரும் தெரிவிக்கலாம். ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையில் இருந்து நீண்ட தொலைவில் உள்ளன. கொரோனா வைரஸிடமிருந்து கடவுளால் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்” என்றார்.
Also Read: கொரோனா:`பயணிகள் நிழற்குடையில் 3 மணி நேரம் கிடந்த உடல்!’ - கர்நாடகா அவலம்
சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்துக்கு காங்கிரஸைச் சேர்ந்த டி.கே.சிவகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கர்நாடகாவை கடவுளால் மட்டுமே காப்பாற்ற முடியும் எனக் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவது என்பது எடியூரப்பாவின் பா.ஜ.க அரசு கொரோனா நெருக்கடியை மிகவும் மோசமாகக் கையாளும் திறனை பிரதிபலிக்கிறது. வைரஸ் நெருக்கடியைக் கையாள முடியாவிட்டால் எங்களுக்கு இந்த அரசு ஏன் தேவை? அரசாங்கத்தின் திறமையின்மை மக்களை, கடவுளின் கருணைக்கு தள்ளி விட்டுள்ளது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதைப்போல பலரும் அவரின் கருத்துக்கு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வந்தனர்.கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு
அதிகளவில் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து அமைச்சர் ஸ்ரீராமுலு தன்னுடைய கருத்துக்கு விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், ``மக்கள் எங்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதைத் தவிர கடவுளும் எங்களைப் பாதுகாக்க வேண்டும் என நான் கூறினேன். ஆனால், ஊடகங்கள் அதை திரித்து வெளியிட்டுவிட்டன. நான் சொன்னது என்னவென்றால், `தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை நம்மை கடவுளால் மட்டுமே காப்பாற்ற முடியும்’ என்பதுதான். இந்தக் கருத்தை தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது” என்று கூறியுள்ளார். எனினும், அவரது கருத்து தொடர்பான கண்டனங்கள் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்களை அலட்சியமாக கையாள்வது, மருத்துவமனைகளில் நிலவும் அலட்சியமான சூழல் தொடர்பாகவும் கர்நாடகாவின் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
இந்தியாவில் அதிகம் பாதிப்படைந்த மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அம்மாநிலத்தில் 3,176 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 47,253 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் சுமார் 83 பேர் இறந்துள்ளனர். இதனால், வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 928 ஆக உயர்ந்துள்ளது. இதனால், அம்மாநிலத்தில் அதிகம் பாதிப்புள்ள பகுதிகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், அமைச்சர் இவ்வாறு பேசுயுள்ளது பலரிடையேயும் அதிர்ச்சியையும் கவலையையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read: கொரோனா: `ஒரே குழியில் வீசப்பட்ட நோயாளியின் உடல்கள்!’ - கர்நாடகா அதிர்ச்சி
http://dlvr.it/Rbl6bw
Thursday, 16 July 2020
Home »
» கொரோனா:`கடவுளால் மட்டுமே காப்பாற்ற முடியும்!’ - கர்நாடக அமைச்சர் கருத்தால் சர்ச்சை