கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும் இயற்கை அழகு கொஞ்சும் பசுமையுடன் காணப்படும் பகுதி மூணாறு. தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படும் இங்குத் தேயிலை உற்பத்தியே முக்கியத் தொழிலாக உள்ளது. இப்படிப்பட்ட இடம் தற்போது பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. கேரளாவில் கடந்த 2 வாரங்களாகப் பெய்த கன மழையால் மூணாறில் டாடா குழுமத்தின் கண்ணன் தேவன் ஹில்ஸ் தோட்டத்துக்குச் சொந்தமான பெட்டிமுடி தேயிலைத் தோட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.மூணாறு
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்த இந்த விபத்தில் அங்கு கட்டப்பட்டிருந்த 40-க்கும் அதிகமான தொழிலாளர்களின் குடியிருப்புகள் மண்ணில் புதைந்தது. இதில், சுமார் 80 பேர் வரை புதைந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாள்களாகத் தொடர் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை 49 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 19 பேரின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள், இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 55 பேர் கொண்ட இந்தக் குழுவை ரேகா நம்பியார் என்ற பெண் அதிகாரி முன்நின்று வழி நடத்தி வருகிறார். தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முதல் பெண் கமாண்டிங் அதிகாரியாக இவர் செயல்பட்டு வருகிறார்.
Also Read: மூணாறு நிலச்சரிவு: `250 பேர் கொண்ட குழு; 6-வது நாள்!’ - மீட்புப் பணிகளில் தாமதம் ஏன்?
பெட்டிமுடி விபத்து தொடர்பாக இவர் கூறும் போது, ``இரண்டு மீட்பு படைகள் சம்பவ இடத்துக்கு வெள்ளிக் கிழமை மாலை வந்தன. தற்போது வரை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 83 பேர் வரை மண்ணில் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்த இடத்துக்கு அருகில் நதி இருப்பதால் உடல்கள் சேற்றில் சிக்கியிருக்கும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், ஆற்றின் கரையிலும் தேடுதல் தொடர்ந்து வருகிறது.மூணாறு
அந்த இடம் முழுவதும் பெரிய பாறைகள் இருப்பதால் அவற்றை அகற்ற வேண்டிய நிலை உள்ளது. எனவே, மீட்புப் பணிகளில் சிறு தாமதம் ஏற்படுகிறது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அதிக நீர் இருப்பதால் இறந்தவர்களின் உடல்களைத் தேட எங்களால் ஆழமாகத் தோண்ட முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
பெண் அதிகாரி ரேகா நம்பியார் கேரளாவின் வடகரையைப் பூர்விகமாகக் கொண்டவர். சென்னையில் பிறந்து, வளர்ந்து, மத்தியப் பாதுகாப்புப் படை அதிகாரியாகத் தகுதி பெற்றுள்ளார். 2015-ம் ஆண்டு வரை இவர் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக இருந்துள்ளார். பின்னர் அதே ஆண்டில் ரேகா, தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போதிலிருந்து சென்னை வெள்ளம், கேரள வெள்ளம் போன்ற பல பேரழிவு காலங்களில், தன் படையுடன் முன்நின்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
Also Read: மூணாறு நிலச்சரிவு: மோப்ப நாய்; ஒரே இடத்தில் 8 உடல்கள்... 42 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை
http://dlvr.it/RdWPds
Wednesday, 12 August 2020
Home »
» `சென்னை, கேரள வெள்ளம்; தற்போது மூணாறு’- மீட்புப் பணிகளில் கவனம் ஈர்த்த ரேகா நம்பியார்