இந்தியாவில் விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் மத்திய பா.ஜ.க அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. முதற்கட்டமாக லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், கௌஹாத்தி ஆகிய விமான நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அந்த விமான நிலையங்களை நிர்வகிக்கும் உரிமையை ஏலம்வழியாக அதானி நிறுவனம் பெற்றது. அரசு - தனியார் கூட்டு முயற்சி என்ற அடிப்படையில், இந்த விமான நிலையங்களைத் தனியாரிடம் மத்திய அரசு குத்ததைக்கு விடுகிறது.சென்னை விமான நிலையம்
இதற்கு, கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. ஏலத்தில் கேரள அரசின் நிறுவனம் பங்கேற்றது. ஆனாலும், அரசு நிறுவனத்துக்கு குத்தகை உரிமை கிடைக்கவில்லை. இந்த நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தைத் தனியாரிடம் குத்தகைக்குவிடும் முடிவைத் திரும்பப் பெறக் கோரி கேரள சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே, `திருவனந்தபுரம் விமான நிலையத்தைத் தனியாருக்கு குத்தகைக்கு விடக் கூடாது’ என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளார். கேரள அரசின் எதிர்ப்பு என்பது இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.
`விமான நிலையங்களை எதற்காக தனியாரிடம் கொடுக்க வேண்டும்?’ என்பது முக்கியமான கேள்வி. விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் மக்களுக்கு சேவை வழங்குவதை நோக்கமாகக்கொண்டவை. `இது போன்ற சேவைத்துறைகளிலிருந்து அரசு விலகிக்கொள்ள வேண்டும்’ என்று ஒரு சாரார் நீண்டகாலமாக சொல்லிவருகிறார்கள். மேலும், அரசால் நியமிக்கப்பட்ட பல குழுக்களும் தனியார்மயத்துக்கு ஆதரவான பரிந்துரைகளை அளித்து, அவற்றின் அடிப்படையில் `மக்களுக்கான சேவை’ என்கிற பொறுப்பை அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் கைகழுவிவருகிறது. அப்படித்தான் முழுக்க முழுக்க அரசின் வசம் இருந்துவந்த ரயில்வேதுறையில் மிகப்பெரிய அளவுக்கு தனியார்மயத்தை மத்திய அரசு கொண்டுவருகிறது. ரயில் நிலையங்களையும், ரயில்களையும் தனியாரிடம் கொடுப்பதற்கான நடவடிக்கையை மோடி அரசு தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.விமானங்கள்
அதுபோல இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களும் மத்திய அரசின் `இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏ.ஏ.ஐ)’ மூலமாக நிர்வகிக்கப்பட்டுவரும் நிலையில், ஆறு விமான நிலையங்களைத் தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவுசெய்தது. அவற்றில், ஐந்து விமான நிலையங்களை நிர்வகிப்பற்கான குத்தகையை அதானி குழுமம் பெற்றுள்ளது. அடுத்தகட்டமாக 20 முதல் 25 விமான நிலையங்களைத் தனியார்மயமாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விமான நிலையங்கள் தனியாரிடம் கொடுக்கப்படுவதை ஒரு சாரார் ஆதரிக்கிறார்கள். இது குறித்து பொருளாதார நிபுணர் ஷியாம் சேகரிடம் கேட்டபோது, ``அரசால் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்களில் வசதிகள் மிகவும் சுமாராகத்தான் இருக்கும். விமானப் போக்குவரத்தாக இருந்தாலும், ரயில் போக்குவரத்தாக இருந்தாலும் மக்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் செய்துதர வேண்டும். அந்த வசதிகளை அரசு சரியாகச் செய்யாது. ஏனென்றால், அதன் நோக்கம் லாபம் கிடையாது. லாபத்தை நோக்கமாகக்கொண்டிருந்தால்தான் `புதிய வசதிகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் உடனடியாகக் கொண்டு வர வேண்டும்’ என்ற உணர்வு ஏற்படும். ஆனால், அரசுக்கு லாப நோக்கம் கிடையாது என்பதால், பயணிகளுக்குத் தேவையான வசதிகள் பற்றி அரசு கவலைப்படுவதில்லை. அதானி, பினராயி விஜயன்
தனியாரிடம் கொடுத்தால்தான் இந்தப் பிரச்னைகளெல்லாம் சரியாகும். டெண்டர், தணிக்கை, சி.ஏ.ஜி போன்ற நடைமுறைகள் தனியாரிடம் இருக்காது. எனவே, ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டுமென்று நினைத்தாலும், தனியாரால் உடனடியாகவும் சுதந்திரமாகவும் அதைச் செய்துவிட முடியும். தனியாரிடம் இருந்தால்தான் அனைத்துப் பணிகளும் விரைவாக நடைபெறும். வேகமும் விறுவிறுப்பும் இருக்கும். அரசிடம் அதை எதிர்பார்க்க முடியாது’’ என்றார்.
விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையை ஏ.ஏ.ஐ ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக்குழு கடுமையாக எதிர்க்கிறது. தற்போது தனியாரிடம் கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்ட ஆறு விமான நிலையங்களும் லாபத்தில் இயங்கக்கூடியவை. `இவற்றை ஏன் தனியாரிடம் கொடுக்க வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பி, விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. `ஏற்கெனவே டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்டும், அதன் மூலமாக உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் மக்களுக்கோ, நாட்டுக்கோ பெரிதாக பலன் ஏதுமில்லை’ என்று கடிதத்தில் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், `தனியார்மய நடவடிக்கையால் குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரித்து, ஊழியர்களின் உழைப்பு சுரண்டப்பட்டு, பொதுமக்களுக்கு கூடுதல் சுமைதான் ஏற்படும்’ என்ற அச்சத்தையும் கவலையையும் ஏ.ஏ.ஐ ஊழியர்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.அதானியுடன் மோடி
`தனியார்மயத்தால் தங்கள் வேலைக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் காரணமாக, தனியார்மயத்தை விமான நிலைய ஊழியர்கள் எதிர்க்கிறார்கள்’ என்று சிலர் சொல்லலாம். அது உண்மைதான் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அந்த அச்சம் நியாயமற்றது என்றும் சொல்லிவிட முடியாது. ஊழியர்களுக்கான ஊதியம், வேலை நேரம் போன்ற சட்ட விதிகளைக் கடைப்பிடிப்பதில் பொதுத்துறை நிறுவனங்கள் முன்மாதிரியாக இருக்கின்றன. தனியார் நிறுவனங்களில் அவற்றை எதிர்பார்க்க முடியாது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் இருப்பதால்தான், கட்டண உயர்வும் கட்டுக்குள் இருக்கிறது. முதன்முதலில் தனியார் நிறுவனம்தான் செல்போனை அறிமுகப்படுத்தியது. அப்போது, இன்கமிங், அவுட்கோயிங் என இரண்டுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனம் செல்போன் சேவையை ஆரம்பித்த பிறகுதான் கட்டணம் குறைந்தது என்ற வாதத்தை தொழிற்சங்கத்தினர் முன்வைக்கிறார்கள்.
இது குறித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மூத்த தலைவரான நரேந்திர ராவிடம் பேசினோம். ``ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியா (ஏ.ஏ.ஐ) என்ற பொதுத்துறை நிறுவனத்தால், 18 சர்வதேச விமான நிலையங்களும் 78 உள்நாட்டு விமான நிலையங்களும் பராமரிக்கப்படுகின்றன. இவற்றில் லாபம் ஈட்டுபவை என்று 12 விமான நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அரசு - தனியார் கூட்டு முயற்சி அடிப்படையில் டெண்டர் மூலம் இவை தனியாருக்குக் கொடுக்கப்படுகின்றன. அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்த பிறகு, அந்தத் தனியார் நிறுவனம் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை அரசுக்கு கொடுக்கும். இதில், அரசுக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. பத்து வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டுவிட்டு, உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவது மாதிரி. எனவே, ‘லேண்டுலார்டு கான்செப்ட்’ என்று இதை நாங்கள் சொல்வோம்.சென்னை விமான நிலையம்
திருவனந்தபுரம் விமான நிலையத்தைத் தனியாரிடம் கொடுப்பதற்கு டெண்டர் விடப்பட்டது. அதானி பங்கேற்ற அந்த டெண்டரில், கேரள அரசும் பங்கேற்றது. மத்திய அரசு விடும் டெண்டரில் ஒரு மாநில அரசு பங்கேற்றால், மாநில அரசுக்குத்தானே அந்த விமான நிலையத்தைக் கொடுக்க வேண்டும்..! மத்திய அரசோ, மாநில அரசையும் தனியார் நிறுவனத்தையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கிறது. இது என்ன நியாயம்? கேரள அரசும், அந்த விமான நிலையத்தில் வரும் லாபத்தில் மத்திய அரசுக்கான பங்கைத் தருவதாகக் கூறுகிறது. எனவே, கேரள அரசுக்கு கொடுப்பதுதானே நியாயம்... ஆனால், மத்திய அரசு முடியாது என்கிறது.
எனவேதான், கேரள அரசு நீதிமன்றம் சென்றிருக்கிறது. அதானி குழுமத்துக்கே அத்தனை விமான நிலையங்களையும் கொடுத்துவிட்டால், அவர்கள் வைப்பதுதான் சட்டம், அவர்கள் நிர்ணயிப்பதுதான் கட்டணம் என்ற நிலை உருவாகிவிடும். மத்திய அரசு இதற்கு உடந்தையாக இருக்கலாமா? மேலும், விமான நிலையங்கள் பராமரிப்பில் அதானி நிறுவனத்துக்கு முன்அனுபவமே கிடையாது. அப்படிப்பட்ட நிறுவனத்துக்குத்தான் இதுவரை ஐந்து விமான நிலையங்கள் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. லாபத்தில் இயங்கும் விமான நிலையங்களை ஏன் தனியாரிடம் கொடுக்க வேண்டும்?” என்றார்.
Also Read: பய எலி பா.ஜ.க... தேசவிரோத தி.மு.க - பா.ஜ.க Vs தி.மு.க!கோவை விமான நிலையம்
தனியாரிடம் விமான நிலையங்கள் ஒப்படைக்கப்பட்டால், விமானங்களுக்கு ரன்வே ஸ்லாட் கொடுப்பதில் மிகப்பெரிய அளவுக்கு பாரபட்சம் இருக்கும். அரசு நிறுவனங்களின் விமானங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாது. விமானக் கட்டணங்களும் சேவைக் கட்டணங்களும் பல மடங்கு உயரும். இதனால், சாமானிய நடுத்தர மக்களால் விமானத்தில் செல்ல முடியாத நிலை உருவாகும். அரசு வேலைவாய்ப்புகள் இருக்காது. வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு இருக்காது. சமூகநீதி பாதிக்கப்படும்’’ என்றார்.
http://dlvr.it/RfWZPt
Friday, 28 August 2020
Home »
» தனியார்மயமாகும் விமான நிலையங்கள்... லாபம் யாருக்கு?