கேரளாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த கோழிக்கோடு விபத்து மற்றும் ராஜமலை நிலச்சரி உள்ளிட்டவைகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசினார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், ``ராஜமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப்பணி நடந்துவருகிறது. இறந்தவர்களின் உடல்களை விரைந்து போஸ்ட்மார்ட்டம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும். இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களை தேடும்பணி தொடர்கிறது. அமைச்சர்கள் சந்திரசேகரன், எம்.எம்.மணி ஆகியோர் அங்கு இருந்து மீட்புப்பணிகளை துரிதபடுத்தி வருகிறார்கள். தண்ணீர் வடிந்துவருவதால் மீட்புப்பணியில் சிரமம் உள்ளது. கேரளத்தில் மழை காரணமாக 3,530 குடும்பங்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இப்போது 11,446 பேர் முகாம்களில் உள்ளனர்.கோழிக்கோடு விமான விபத்து
கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலைய விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசு ஏற்கும். விபத்தில் சிக்கிய 190 பேரில் 18 பேர் இறந்துள்ளனர். அதில் 4 குழந்தைகளும் உண்டு. காயம் அடைந்த 149 பேர் கோழிக்கோடு மலப்புரம் மாவட்டங்களில் உள்ள 16 மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். அதில் 23 பேர் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். 23 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் தமிழகம் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்களும் காயமடைந்துள்ளனர். அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இறந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. விபத்து நடந்ததும் பொதுமக்கள் விரைந்து மீட்புப்பணியில் இறங்கினர். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Also Read: AirCrash: `பதறிய குழந்தைகள்; ரத்தம் படிந்த துணிகள்!’ - நேரில் பார்த்தவர்கள் விவரித்த துயரம்
இந்த விபத்தில் விமானம் கீழே வந்தபிறகு முன்பகுதி உடைந்து தனியாக போகிறது. முன்பகுதி காம்பவுண்டில் போய் இடித்து கிடக்கிறது. அதனால்தான் பைலட்டும், துணை பைலட்டும் மற்றும் சிலரும் இறந்திருக்கிறார்கள். அதிகமானபேரின் உயிர் காக்கப்பட்டிருக்கிறது. விபத்துக்கு பிறகு விமானம் தீப்பிடிக்காமலும், வெடிக்காமலும், இருந்தது பெரிய ஆறுதலான விஷயம். இந்த விபத்து குறித்து டி.ஜி.சி.ஏ விசாரணை நடத்துகிறது.ராஜமலை நிலச்சரிவு நடந்த இடம்.
ராஜமலையில் விபத்தில் இறந்தவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாயும், கோழிக்கோடு விமான விபத்தில் இறந்தவர்களுக்கு 10 லட்சமும் வழங்கப்படுவது பற்றி விமர்சனங்கள் கூறுகிறார்கள். இரண்டும் இரண்டு விதமான விபத்து. ராஜமலையில் முதற்கட்டமாகத்தான் நிதி உதவி அறிவிக்கப்படுள்ளது. அங்கு மீட்புப்பணி இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் உயிரையும் வசிப்பிடத்தையும் இழந்துள்ளனர். மீண்டும் அவர்களுக்கு வசிப்பிடம் போன்றவற்றை உறுதி செய்யும் கடமை அரசுக்கு உண்டு. மீட்புப்பணி முடிந்தபிறகு அவர்களுக்கு உதவுவதுடன், அவரது வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பாகவும் இருப்போம்.
Also Read: மூணாறு நிலச்சரிவு: `15 பேரின் உடல்கள் மீட்பு..!’ - மீட்புப் பணியில் குறுக்கிடும் மழை
அதுபோல, கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் பார்க்க போனதையும், ராஜமலையில் நேரில் செல்லவில்லை எனவும் சிலர் பிரசாரம் செய்கிறார்கள். ராஜமலைக்கு சென்று சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மூனாறுக்கு ஹெலிகாப்டரில் போகலமா என ஆலோசித்தபோது காலநிலை மோசமாக இருந்ததால் போகவில்லை. இதெல்லாம் இடத்தின் நிலையை பொறுத்து முடிவு எடுக்கிறோம்" என்றார்.
http://dlvr.it/RdHF3f
Sunday, 9 August 2020
Home »
» கேரளா: ராஜமலை, கோழிக்கோடு விபத்து; இரட்டை நிலைப்பாடா? - பினராயி விஜயன் விளக்கம்