தேர்தலில் தோற்றாலும், அதிபர் பதவியை விட்டுத்தரமாட்டேன் என அதிபர் ட்ரம்ப் அடம்பிடித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்ட அதிபர் ட்ரம்பும், ஜோ பைடனும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதலாவது நேரடி விவாதம் இன்று நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடனும் பங்கேற்றனர். 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் ட்ரம்பும் ஜோ பைடனும் அனல் தெறிக்க மோதிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியை கிஸ் வாலஸ் என்பவர் தொகுத்து வழங்கினார். கொரோனா பரவலால் பார்வையாளர்கள் இன்றி, கைக்குலுக்கல், வாழ்த்து பரிமாற்றங்களின்றி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி நியமனம், கொரோனா தொற்று, பொருளாதாரம், இனவெறி வன்முறை உள்ளிட்ட ஆறு முக்கிய தலைப்புகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். தேர்தல் பணி ஆரம்பித்த பின் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதா? என ஜோ பைடன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப், 4 ஆண்டுகள் நாட்டை ஆள உரிமை பெற்ற தனக்கு நீதிபதியை நியமிக்க உரிமை இருப்பதாக வாதிட்டார். தொடர்ந்து பேசிய ஜோ பைடன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். கொரோனா நெருக்கடியிலும் சிறப்பாக செயல்பட்டுவருவதாக ஆளுநர்களே பாராட்டியுள்ளனர் என ட்ரம்ப் தற்புகழ் பாடினார். எந்த அளவுக்கு பொருளாதாரத்தை சிதைக்க முடியுமோ அந்த அளவிற்கு ட்ரம்ப் சிதைத்துவிட்டார் என சாடிய ஜோ பைடனுக்கு பதிலடி கொடுத்த ட்ரம்ப், சீன வைரஸே பொருளாதாரத்தை சீர்குலைத்தது என்றும், ஒரு கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்பை தந்துவிட்டோம் என்றும் தெரிவித்தார். ட்ரம்ப் ஒரு கோமாளி என விமர்சித்த ஜோ பைடனிடம், தன்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் என அதிபர் ட்ரம்ப் கடிந்து கொண்டார். ட்ரம்ப் கறுப்பினத்தவர்களுக்கு எதிரானவர் என விமர்சித்தார் ஜோ பைடன். இதற்கு, "ஆப்பிரிக்க அமெரிக்கர்களை, வேட்டையாடுபவர்கள் என பைடன் கூறவில்லையா என ட்ரம்ப் எதிர் கேள்வி எழுப்பினார். தேர்தலில் தோற்றுவிட்டால் அமைதியான முறையில் பதவி விலகமாட்டேன் என்றும், தபால் மூலம் வாக்களிப்பது மோசடிக்கு வழிவகுக்கும் என்றும் அதிபர் ட்ரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டினார். பல்லாயிரக்கணக்கான வாக்குகளை தனக்கு ஆதரவாக பைடன் மாற்ற முயற்சிப்பதாக தெரிவித்த ட்ரம்ப், தேர்தலில் மோசடி நடந்தால் உச்சநீதிமன்றம் வரை செல்வேன் என்றும் அதிரடியாக தெரிவித்தார். தொடர்ந்து ஜோ பைடனை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அதிபர் ட்ரம்பும், ட்ரம்ப் வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என பைடனும் மாறி மாறி குற்றஞ்சாட்டியதால் விவாத அரங்கம் போர்களமானது. விவாதத்திற்கு பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, 10இல் 6 பேர் ஜோ பைடன் நியாயமாக வாதிட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர். முதல் விவாதமே அதிபர் ட்ரம்புக்கு எதிராக திரும்பியுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது விவாதங்கள் அக்டோபர் மாதம் 15, 22 ஆம் தேதி நடைபெறவுள்ளன.
http://dlvr.it/RhjF8G
Thursday, 1 October 2020
Home »
» "தோற்றாலும் அதிபர் பதவியை விட்டுத்தரமாட்டேன்"-அடம்பிடித்த ட்ரம்ப் !