ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி, விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 9 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சீசனின் முதல் பாதியை மோசமாகக் கடந்துள்ள சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளின் பலம் மற்றும் பலவீனம்... நடப்பு சீசனில் மீண்டும் ஒரு ஹாட்ரிக் தோல்வி காண்பதை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மகேந்திர சிங் தோனியின் சென்னை படை. பேட்டிங்கில் அதிரடிக்கான சுவடே தென்படாததால், இலக்குகளைக் கடக்க சிரமப்பட்டு வருகிறது சென்னை. பேட்டிங்கில் வாட்சன், டூபிளசி மற்றும் ராயுடு சுமாரான ஃபார்மில் உள்ளனர். களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஜெகதீசன் ஜொலித்துள்ளது சென்னைக்கு நல்ல செய்தி. மத்திய வரிசையில் நம்பிக்கையளிக்கும் அளவிற்கு பேட்ஸ்மேன்கள் இல்லாதது அணிக்கு பலவீனமாக உள்ளது. 12 சீசன்களாக தூணாக வலம் வந்த கேப்டன் தோனி, வளமையான ஆட்டத்தை வெளிப்படுத்த சிரமப்பட்டு வருகிறார். பந்து வீச்சில் இறுதி ஓவர்களில் ரன்களை அதிகளவில் விட்டுக்கொடுப்பது அணிக்கு பெரும் சிக்கலாக உள்ளது. ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, சாம் கரண், பிராவோ ஆகியோர் அழுத்தமான நம்பிக்கையைக் கொடுக்க தவறி வருகின்றனர். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கண்ட தோல்வியால் அதிர்ச்சியில் உள்ளது ஹைதராபாத். கேப்டன் வார்னர், பேர்ஸ்ட்டோவ், வில்லியம்சன், மணீஷ் பாண்டே ஆகியோர் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக வலம் வருகின்றனர். அபிஷேக் சர்மா, விஜய் சங்கர் ஆகிய ஆல்ரவுண்டர்களும், இளம் வீரர் பிரியம் கார்க் ஆகியோர் மத்திய வரிசைக்கு கூடுதல் வலு சேர்க்கின்றனர். பந்து வீச்சில் நடராஜன், கலீல் அகமது, சந்தீப் சர்மா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ரன்களை வாரி வழங்குவது பின்னடைவே. ரஷீத் கானின் மாயாஜால பந்து வீச்சு அணிக்கு மிகப்பெரிய பலம். இனி வரும் போட்டிகள் அனைத்தையும் 'வாழ்வா சாவா' என்னும் அழுத்தத்துடன் சந்திக்கவுள்ளதால், இரு அணிகளும் வித்தியாசமான வியூகங்களை வகுத்தே களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.
http://dlvr.it/RjTtB9
Tuesday, 13 October 2020
Home »
» நெருக்கடியில் சிஎஸ்கே... புது வியூகம் வகுப்பாரா தோனி?