13 ஆண்டு கால ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்த 2 போட்டிகளில் சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற மெச்சத்தக்க சாதனையைப் படைத்துள்ளார் ஷிகர் தவன். நேர்த்தியான கிரிக்கெட்டிங் ஷாட்கள், தெறித்து பறந்த பவுண்டரிகள் என பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் தனது அனுபவத்தால் அரங்கையே அலங்கரித்தார் ஷிகர் தவன். சென்னைக்கு எதிரான போட்டியில் தனது 13 ஆண்டு கால சதம் அடிக்கும் தாகத்தை தீர்த்துக் கொண்ட தவன், பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட 106 ரன்களை விளாசினார். இந்த சதத்தின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 13 ஆண்டுகளாக படைக்கப்படாத சாதனையையும் தன் வசமாக்கினார் அவர். இதற்கு முன்பு எந்த ஒரு வீரரும் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசியதே இல்லை. 2013 ஆம் ஆண்டு ஷேன் வாட்சன் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் மற்றும் 98 ரன்கள் விளாசியதே முந்தைய சாதனையாக இருந்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவன், ஐபிஎல்லில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த 5 ஆவது வீரர் என்ற மைல்கல்லையும் எட்டினார். இதுவரை 169 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், சராசரியாக ஒரு போட்டிக்கு 34 ரன்கள் வீதம் 5 ஆயிரத்து 43 ரன்களைக் குவித்துள்ளார். சீசனின் தொடக்கத்தில் சற்றே சறுக்கிய தவன், தற்போது அணியின் ஆணிவேராகவே உருவெடுத்துள்ளார். இனி வரும் போட்டிகளிலும், தவனே அணியின் முக்கிய துருப்புச் சீட்டாகவே வலம் வருவார் என்றால் அது மிகையாகாது.
http://dlvr.it/Rk1PHJ