``நாங்கள் பா.ஜ.க.-வுக்கு எதிரானவர்களே அன்றி, இத்தேசத்திற்கு எதிரானவர்கள் இல்லை, ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தினை ரத்து செய்ததினை எதிர்த்து, அதனை திரும்பப் பெறுவதற்காக அமைத்துள்ள மக்கள் கூட்டணி என்பது தேச விரோதமானது என்று மத்திய பா.ஜ.க. அரசு பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது” என்று ஜம்மு & காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் கூட்டணித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 -ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் ஏற்படும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக அம்மாநிலத்தின் அரசியல் கட்சித் தலைவர்களான ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உட்பட பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர்.ஃபரூக் அப்துல்லா
விடுதலைக்குப் பின்னர், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தினை ரத்து செய்ததினை எதிர்த்து, தங்கள் கருத்துக்களைப் பதிவுசெய்ததோடு அதனை திரும்பப்பெறுவதற்கான முயற்சிகள் மாநிலத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து தேசிய மாநாடுக் கட்சியின் தலைவரான ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். ஜம்மு காஷமீருக்கான சிறப்பு அந்தஸ்தினை உறுதி செய்யும் குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணித் தலைவராக பரூக் அப்துல்லாவையும், துணைத் தலைவராக மக்கள் ஜனநாயக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தியையும், செய்தித் தொடர்பாளராக மக்கள் மாநாட்டுக் கட்சியின் சஜித் அலோயும், ஒருங்கிணைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான முகமது தாரிகாமியையும் தேர்வு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, “காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தினை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து கூட்டாட்சிக் கட்டமைப்பை மத்திய பா.ஜ.க. அரசு உடைத்துவிட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தகர்த்து இந்தியாவில் பிளவு உண்டாக்கி வருகின்றனர். இதைத்தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி பார்த்தோம்.
குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணியை தேசத்திற்கு விரோதமானது என்று பா.ஜ.க. பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது. எங்கள் அமைப்பு பா.ஜ.க.-வுக்கு எதிரானதே தவிர தேசவிரோதமானது அல்ல. ஜம்மு - காஷ்மீர், லடாக் மக்களின் உரிமைகளைப் பெறுவதே எங்கள் போராட்டத்தின் நோக்கம். மதத்தின் பெயரைக் கூறி பா.ஜ.க ஜம்மு - காஷ்மீரின் மக்களைப் பிரிக்க நினைக்கும் செயல் வெற்றிபெறாது” என்று கூறினார்.
http://dlvr.it/RkJJpK
Sunday, 25 October 2020
Home »
» `நாங்கள் இத்தேசத்துக்கு எதிரானவர்கள் அல்ல; பா.ஜ.க-வுக்கு எதிரானவர்கள்!' - ஃபரூக் அப்துல்லா