விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு ஏற்ற அடிப்படை ஆதார விலை கிடைக்காததுதான் விவசாயம் நலிவடைய காரணம். இதைப் பல முன்னோடி விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் அடிக்கடி கூறி வந்தும் அதை அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக 16 விதமான காய்கறிகளுக்கு அடிப்படை ஆதார விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``கேரள மாநிலத்தில் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்கிறோம். இந்தியாவில் முதன்முதலில் ஒரு மாநிலம் காய்கறி விவசாயிகளுக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தும் விதமாகக் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்கிறது. வருடக்கணக்கில் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்க்கை நடத்துபவர்களுக்கு அக்கறையுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் விவசாயிகள் மிகவும் அதிருப்தியில் இருக்கும் காலகட்டம் இது. அதன் அடிப்படையில் பல போராட்டங்களை நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தி வருகின்றனர். விவசாயிகளை முன்னிலைப்படுத்தி பல நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்துள்ளது. அதில் குறிப்பிட்ட ஒரு மைல்கல்தான் இந்த ஆதார விலை நிர்ணயம்.காய்கறிகள்
16 வகையான காய்கறிகளுக்கு முதன்முதலில் அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கு, அன்னாசிப் பழம், நேந்திரம் வாழைப்பழம், வெள்ளரிக்காய், பாகற்காய், புடலை, தக்காளி, பீன்ஸ் என நம் மாநிலத்தில் உற்பத்தி செய்கிற எல்லா காய்கறிகளையும் இந்த விலை நிர்ணயத்தில் உட்படுத்தியுள்ளோம். இந்தக் காய்கறிகளுக்கு உற்பத்திக்கு ஆகும் தொகையை விட 20 சதவிகிதம் அதிக விலை வழங்கப்படும். மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தாலும் அடிப்படை ஆதார விலை விவசாயிகளின் அக்கவுன்டில் செலுத்தப்படும். அடிக்கடி காய்கறிகளின் விலைகளை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்கறிகளுக்கான விலைகளை உள்ளாட்சி அமைப்புகள் நிர்ணயம் செய்துகொள்ளும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயி ஒரு சீஸனில் 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் காய்கறிகளை விற்பனை செய்யும் விதத்தில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தங்கள் விவசாய நிலத்தை இன்ஷூரன்ஸ் செய்த பிறகு, விவசாயத்துறையில் பெயர் பதிவு செய்பவர்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன்கள் வழங்கப்படும். நவம்பர் 1-ம் தேதி முதல் இதற்கான முன் பதிவு தொடங்கும். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் காய்கறிகள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். நம் கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுடன் அதிக தொடர்பில் உள்ளன. எனவே, இவற்றின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.காய்கறிகள்
இந்தத் திட்டத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விவசாயத்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவை செய்யும். அதிக அளவில் பொருள்கள் வந்தால் அவை கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறிகளை தேவையான இடங்களுக்குக் கொண்டு செல்ல குளிரூட்டப்பட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்தல் போன்ற நடவடிக்கைகளும் இதன் தொடர்ச்சியாக எடுக்கப்படும். விவசாயத்துறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுத்தப்போகிறது இந்தத் திட்டம். சில இடங்களில் அதிக விளைவிளைச்சல் ஏற்பட்டால் அந்தப் பொருள்களை அங்கிருந்து எடுத்து மற்ற பகுதிகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதிக விளைச்சல் வந்தால் நஷ்டம் ஏற்படும் என்ற விவசாயிகளின் அச்சம் இதன் மூலம் அகலும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கேரளத்தில் தரிசாகக் கிடந்த பல பகுதிகள் விவசாய நிலமாக மாறியுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 1,96,000 ஹெக்டேர் நெல் விவசாயம் இருந்தது. இப்போது அது இரண்டேகால் லட்சம் ஹெக்டேர் ஆக உயர்ந்துள்ளது. எங்கள் ஆட்சிக்கு முன்பு காய்கறி உற்பத்தி 7 லட்சம் மெட்ரிக் டன் ஆக இருந்தது. இப்போது இரண்டு மடங்கு அதிகரித்து 14.72 மெட்ரிக் டன்னாக காய்கறி உற்பத்தி உயர்ந்துள்ளது. குழந்தைகளும், தாய்மார்களும் விவசாயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளால் விவசாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில் தேடி வெளிநாட்டுக்குச் சென்ற பலரும் இங்கு திரும்பிவந்து விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த ஆண்டு ஒரு லட்சம் மெட்ரிக் டன் காய்கறிகளும், ஒரு லட்சம் மெட்ரிக் டன் கிழங்குகளும் கூடுதலாக உற்பத்தி செய்ய தீர்மானித்துள்ளோம்" என்றார்.
http://dlvr.it/RkcyJ5
Friday, 30 October 2020
Home »
» நாட்டில் முதல் முறையாக காய்கறிகளுக்கும் ஆதார விலை... கேரளாவின் `பலே' அறிவிப்பு!