கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலுள்ள யுனைடெட் அரபு அமீரக (யு.ஏ.இ) தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் முக்கியக் குற்றவாளியாக இருப்பவர் ஸ்வப்னா சுரேஷ். இவருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன். கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராகவும், ஐ.டி துறைச் செயலாளராகவும் இருந்தவர் சிவசங்கரன். தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடமும் என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசு ஏஜென்சிகள் விசாரணை நடத்தின.
இதையடுத்து சிவசங்கரனை சஸ்பெண்ட் செய்தது கேரள அரசு. சிவசங்கரனிடம் மட்டும் சுமார் 100 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சகாக்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக திருவனந்தபுரத்தில் சிவசங்கரன் தனி பிளாட் எடுத்திருந்தது தெரியவந்தது. மேலும், ஸ்வப்னா சுரேஷ் வங்கி லாக்கரில் பணம் மற்றும் தங்க நகைகளைப் பதுக்கிவைத்திருப்பதாகவும் சிவசங்கரன் தகவல் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து ஸ்வப்னாவின் வங்கி லாக்கர்களிலிருந்து சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய், ஒரு கிலோ தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.ஸ்வப்னா சுரேஷ்
விசாரணையின் இறுதிக்கட்டமாக சிவசங்கரனை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை முயன்றது. அந்தச் சமயத்தில் நெஞ்சுவலி என்றும் உடல்நிலை மோசமாக இருப்பதாக சிவசங்கரன் கூறினார். மேலும், திருவனந்தபுரத்தில் ஓர் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார் சிவசங்கரன். தொடர்ந்து சிகிச்சையில் இருந்துவந்த சிவசங்கரன், அங்கிருந்தபடியே கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார்.
Also Read: `ஸ்வப்னாவுடன் நட்பில் இருந்த சிவசங்கரன் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட்!’ - பினராயி விஜயன் அதிரடி
முதற்கட்ட விசாரணை நடத்திய நீதிமன்றம் அவரை கைதுசெய்யக் கூடாது எனக் கூறியது. மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. விசாரணை முடிவில் சிவசங்கரனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரைக் கைதுசெய்ய, தடை எதுவும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. சிவசங்கரனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிவசங்கரன் சிகிச்சைக்காக சேர்ந்த ஆயுர்வேத மருத்துவமனைக்குச் சென்றனர்.கைது செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன்
தொடர்ந்து சிவசங்கரனை கஸ்டடியில் எடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கொச்சிக்கு அழைத்துச் சென்றனர். கொச்சியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சுமார் ஆறு மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றியதாக ஏற்கெனவே சிவசங்கரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இதையடுத்து நேற்று இரவு சிவசங்கரன் கைதுசெய்யப்பட்டார். கேரள முதல்வர் பினராயி விஜயனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலிலும் புயலைக் கிளப்பியிருக்கிறது.
http://dlvr.it/RkZ76M
Thursday, 29 October 2020
Home »
» கேரளா தங்கம் கடத்தல்: ஸ்வப்னாவுடன் சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் கைது!