உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம் பெண் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு, நாக்கு துண்டான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த இரண்டு வாரத் தொடர் சிகிச்சைக்குப் பிறகு நேற்று முன் தினம் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இந்த பெண்ணின் மரணம் மொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. மேலும் இவரின் பெற்றோரின் அனுமதியில்லாமலேயே காவலர்கள் அவரது உடலைத் தகனம் செய்ததாக ஒரு தகவலும், அப்படி எதுவும் இல்லை தகனம் செய்யப்பட்ட இடத்தில் பெண்ணின் தந்தை இருந்தார் என்ற மாறுபட்ட தகவல்களும் சொல்லப்படுகின்றன. Rahul gandhi
உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடந்துவருவதாக தேசிய குற்றவியல் அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் எனப் பல அரசியல் தலைவர்களும் பொது மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாகப் பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. ``முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இந்த கொடூரச் செயலை மூடி மறைக்கப் பார்க்கிறது. ஹத்ராஸின் நிர்பயாவை சரியாகச் சிகிச்சை பெற விடவில்லை.
அந்த பெண் இறந்ததுக்கு மாநில அரசின் அலட்சியமும் பொறுப்பற்ற செயலும்தான் காரணம். அப்பெண் உயிருக்குப் போராடிய போதும் அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்காமல், இறந்த பின்னும் அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்களை குடும்பத்தைச் செய்ய விடாமல், போலிசார்களே உடலை எரித்துள்ளனர். இறக்கும் போதும் அவருக்கு மரியாதை அளிக்காமல் அனாதைபோல் நடத்தியுள்ளனர். அவரின் குடும்பத்திற்கும் அழுகும் அவர் தாயாருக்கும் அவர்களின் மகளைக் கடைசியாக பார்க்ககூட முடியாதவாறு செய்துவிட்டனர். இது மிகப் பெரிய பாவம். இது போன்ற அநீதிகளைப் பார்த்து இந்த நாடு அமைதியாக இருக்காது. கேள்விகள் கேட்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதே சம்பவம் தொடர்பாகப் பேசிய கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ``பாதிக்கப்பட்டவரையும் அவர் குடும்பத்தையும் பாதுகாக்காமல் இந்த அரசு அவரின் இறப்பின் போதுகூட மனிதநேயத்துடன் நடத்த மறுத்திருக்கிறது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன் பதவியிலிருந்து விலக வேண்டும்” என்று கூறியுள்ளார். Priyanka gandhi and Rahul gandhi
இந்த சம்பவத்துக்குப் பிறகு மொத்த உத்தரப்பிரதேசமும் கொதிப்பில் உள்ளது. உயிரிழந்த பெண்ணுக்கு நீதிகேட்டு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட எல்லைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டன.
இருந்தும் ராகுலும், பிரியங்காவும் இன்று பிற்பகல் ஹத்ராஸ் பகுதிக்கு காரில் வந்துள்ளனர். பாதி வழியிலேயே அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் காரை விட்டு இறங்கி இருவரும் சாலையில் நடந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நீடிக்கிறது. ``காவலர்கள் என்னைத் தள்ளுகிறார்கள் என் மீது லத்தி சார்ஜ் செய்து கீழே தள்ளுகிறார்கள். எனக்கு ஒன்று தெரியவேண்டும், இந்த நாட்டில் பிரதமர் மோடி மட்டும் சாலையில் சுதந்திரமாக நடக்க வேண்டுமா? சாதாரண மனிதர்கள் நடக்கக்கூடாதா. என்னுடைய வாகனம் நிறுத்தப்பட்டது. அதனால் நான் இறங்கி நடந்து செல்கிறேன். ஆனால், அதற்கும் போலீஸார் அனுமதி மறுக்கின்றனர்” என்று ராகுல் காந்தி பேசியுள்ளார். Rahul gandhi
ஹத்ராஸில் இருந்து 142 கிலோ மீட்டர் தொலையில் உள்ள கிரேட்டர் நொய்டாவிலேயே ராகுல் காந்தியின் கார் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து காங்கிரஸ் தொண்டர்களுடன் இருவரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாகக் கூறி அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உத்தரப்பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
http://dlvr.it/Rhkjd7
Thursday, 1 October 2020
Home »
» ஹத்ராஸ்: பெண்ணின் குடும்பத்தைச் சந்திக்க சென்ற ராகுல், பிரியங்கா... தடுத்து நிறுத்தப்பட்டு கைது!