நவராத்திரி விழாவுக்காக கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனை அருகிலுள்ள சரஸ்வதி கோயிலிலிருந்து சரஸ்வதி தேவி திருவனந்தபுரம் செல்வது வழக்கம். ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கும் விழாவில் சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, குமாரகோவில் முருகன் ஆகிய சுவாமிகள் யானை மற்றும் பல்லக்கில் திருவனந்தபுரம் செல்வது வழக்கம். இந்தப் பயணத்துக்கு மூன்று நாள்கள் வரை ஆகும். அதற்கு முன்னர் பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து மன்னரின் உடைவாள் வழங்கும் நிகழ்வு நடைபெறும்.
கொரோனா காரணமாக இந்த ஆண்டு, `ஒரே நாளில் சுவாமிகளை திருவனந்தபுரம் கொண்டு வர வேண்டும்’ என்று கேரள அரசு கூறியிருக்கிறது. எனவே, சுவாமிகளை டெம்போ போன்ற வாகனத்தில் எடுத்துச் செல்ல குமரி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு குமரி மாவட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. `இது ஊர்வலம் அல்ல, வழிபாட்டுமுறை. எனவே இதை மாற்றக் கூடாது’ என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியிருக்கிறார்.பத்மநாபபுரம் அரண்மனை
இது பற்றி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ``கோயிலுக்குச் செல்லும் அளவுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கிலும், எல்லா ஆலையங்களிலும் முறைப்படி வழிபாடுகள், பூஜைகள் நடப்பதற்கு எந்தத் தடையும் இதுவரை வந்ததில்லை. குமரியில் அதி முக்கிய விழாவான விஜயதசமி, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. குமரி மாவட்டத்தில் அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விழாக்களைக் கொண்டாடுவார்கள்.
சரஸ்வதி பூஜைக்கு அடிப்படையாக அமைந்தது பத்மநாபபுரம் அரண்மனையிலிருக்கும் சரஸ்வதி தேவி. இந்த சரஸ்வதி தேவி, சுசீந்திரம், முன்னுதித்த நங்கை, குமாரகோயில் முருகன் ஆகிய சுவாமிகள் 1700-ம் ஆண்டிலிருந்து திருவனந்தபுரம் சென்று நவராத்திரி பூஜையில் கலந்துகொள்வது நடந்திருக்கிறது. 1839-ல் ஸ்வாதி திருநாள் மஹாராஜா இந்த விழாவில் சில முறைப்படுத்தல்களைச் செய்திருக்கிறார்.
கம்பரால் வழிபாடு செய்யப்பட்ட சரஸ்வதி சிலைதான் பத்மநாபபுரத்தில் இருக்கிறது. பின்னர், குலசேகர பெருமாளிடம் கொடுக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டுவருகிறது. வழக்கமாக பெண் தெய்வங்கள் பல்லக்கில் செல்வது வழக்கம். ஆனால் சரஸ்வதி தேவி யானை மீது செல்வார்கள். அவரை எடுத்துச் செல்லக்கூடியவர்கள் கிருஷ்ணவகை சமுதாய மக்கள். திருவிதாங்கூர் மன்னர் கார்த்திகை திருநாள் ராமவர்மா மஹாராஜா காலத்தில் சகல மரியாதைகளுடன் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த வழிபாட்டில் கோயிலுக்குள் உண்டான வழிமுறைகள், கோயிலுக்கு வெளியேயுள்ள வழிமுறைகள் என இருக்கின்றன.பொன்.ராதாகிருஷ்ணன்
இந்த தெய்வங்களை மூன்று ஆறுகளையும் கடந்து திருவனந்தபுரம் அழைத்துப் போவார்கள். அதனால் சுமந்து சென்றவர்களுக்கு அன்று மூன்று தங்க எலுமிச்சைப்பழங்களை மன்னர் கொடுத்திருக்கிறார். கொரோனா காலத்தில் கோயிலுக்கு உள்ள முறைகள் தடுக்கப்படவில்லை. பூசாரிகள் பூஜை செய்தனர். அதுபோல, சரஸ்வதி சுவாமி நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்வது ஊர்வலம் அல்ல; வழிபாட்டு முறை. 1700 முதல் வகுக்கப்பட்ட இந்த முறையை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. அந்த விதிமுறையை மாற்றுவது சரியான விஷயம் அல்ல.
Also Read: `அ.தி.மு.க தலைமையின் கீழ், எங்கள் கூட்டணி!’ - பொன்.ராதாகிருஷ்ணன்
இன்று கேரள அரசாங்கம் சில காரணங்களைச் சொல்லி ஒரே நாளில் எடுத்து வர வேண்டும் என்கிறார்கள். வாகனத்தில் எடுத்துச் சென்றால் இரண்டு மணி நேரத்தில் செல்லலாம். இது டிராவல்ஸ் சர்வீஸ் அல்ல. சுவாமியை அழைத்துச் செல்வதும் பூஜை முறைகளில் ஒன்றுதான். வழியில் குழித்துறை தாமிரபரணி ஆறு மற்றும் கரமனை ஆற்றில் சுவாமிக்கு ஆராட்டு நடக்கும். எனவே, இதில் கேரள அரசு கொரோனா காரணங்களைக் காட்டக் கூடாது. எல்லா ஆண்டும்போல இந்த ஆண்டும் நவராத்திரி பவனி நடக்க வேண்டும். இது தேரோட்டம்போலக்கூட அல்ல. இது இப்படி ஆரம்பித்து, இப்படித்தான் முடிக்க வேண்டும் என நடமுறைகள் உள்ளன. எனவே, `இந்த முறைகளை மாற்றாதீர்கள்’ என கேரள முதல்வருக்கு என்னுடைய வேண்டுகோளை வைக்கிறேன்.கேரள முதல்வர் பினராயி விஜயன்
சுவாமிக்கு நடக்க வேண்டிய பூஜைகள் நடக்கட்டும். கேரள முதல்வர் நவராத்திரி பவனியைத் தடுப்பதற்கு கொரோனா அச்சம் காரணமாக இருக்கலாம் அல்லது அரசியல் அச்சம் காரணமாக இருக்கலாம். கேரளத்தில் சட்டமன்றத் தேர்தல் வருவதால், சாமி வந்தால் ஆசாமிகள் வெளிபட்டுவிடுவார்களோ என அச்சப்படுகிறார்கள்" என்றார்.
http://dlvr.it/RjRL8h
Monday, 12 October 2020
Home »
» `சாமி வந்தால் ஆசாமிகள் வெளிப்பட்டுவிடுவார்களோ?’ - பினராயி விஜயனைச் சீண்டிய பொன்.ராதாகிருஷ்ணன்