ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதல் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்களான பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சிறப்பான அடித்தளத்தை கொடுத்தனர். இருவரும் 6 ஓவர்களிலேயே 65 ரன்களை கடந்து பார்ட்னர்ஷிப் செய்தனர். அப்போது முகமத் சிராஜ் வீசிய ஓவரில் 23 பந்துகளில் 42 ரன்களை எடுத்திருந்த பிருத்வி ஷா விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து உதானாவின் ஓவரில் ஷிகர் தவான் 32 (28) ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் 11 (13) ரன்களில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நடையைக்கட்ட டெல்லி அணிக்கு நெருக்கடி உண்டாகும் நிலை ஏற்பட்டது. அப்போது கைகோர்த்த ரிஷாப் பண்ட் மற்றும் ஸ்டொயினிஸ் ஜோடி பிரமாதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 25 பந்துகளில் 37 ரன்களை எடுத்திருந்தபோது ரிஷாப் பண்ட் விக்கெட்டை இழந்தார். இதில் 2 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். இதற்கிடையே அதிரடியாக பேட்டிங் செய்த மார்கஸ் ஸ்டொயினிஸ் இறுதி வரை அவுட் ஆகாமல் 26 பந்துகளில் 53 ரன்களை விளாசினார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ஹெட்மெயர் தனது பங்கிற்கு 11 (7) எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது. டெல்லி பேட்டிங்கில் பிருத்வி ஷாவின் தொடக்கம் அணிக்கு பெரும் பலம். களத்தில் நிலைத்து நின்று ரன்களை சேர்த்தாலும் 32 ரன்களை அடிக்க 28 பந்துகளை தவான் எடுத்துக்கொண்டது மந்தமான ஒன்றாக தெரிந்தது. ஸ்கோரை உயர்த்த வேண்டிய நேரத்தில் ஸ்ரேயாஸ் அவுட்டாகிச் சென்றது அணிக்கு நெருக்கடி சூழலை உருவாக்கியிருந்தது. ரிஷாப் பண்ட் மற்றும் ஸ்டோயினிஸ் பார்ட்னர்ஷிப் கேம் சேஞ்சிங்காக அமைந்தது. இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 89 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை 179 வரை கொண்டு சென்றது வெற்றிக்கு பாதை அமைத்தது. ஸ்டொயினிஸின் அரை சதம் மிகத் தேவையான ஒன்றாக இருந்தது. பெங்களூரின் பவுலிங்கில் வலுவாக ஒருவர் கூட பந்துவீசவில்லை. முகமது சிராஜ் மட்டும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். ஆனால் அவரும் ரன்களை பெரிதாக கட்டுப்படுத்தவில்லை. நவ்தீப் சைனி 3 ஓவர்களுக்கு 48 ரன்களை வாரிக்கொடுத்து, விக்கெட்டையும் கைப்பற்றாதது சொதப்பலானது. ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தாலும் 4 ஓவர்களுக்கு 40 ரன்களை வாரிக்கொடுத்த உதானா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. சைனி வீசிய 15வது ஓவரின் கடைசி பந்தில் ஸ்டொனியிஸ் கேட்ச்சை தவறவிட்டது பிழையாக அமைந்தது. இருப்பினும் பெங்களூரின் ஃபீல்டிங் சிறப்பாகவே இருந்தது. இலக்கை எதிர்த்து ஆடிய பெங்களூர் அணியில் தொடக்க வீரரான படிக்கல் 4 (6) ரன்களில் அவுட்டாக, 14 பந்துகளை சந்தித்த ஆரோன் ஃபின்ச், 3 முறை கேட்ச்களை தவறவிட்டு டெல்லி அணி வாய்ப்பளித்தபோதும் 13 ரன்களில் வெளியேறியது சொதப்பல். அதிரடியாக ஆட வேண்டிய நேரத்தில் டி வில்லியர்ஸ் 9 (6) ரன்களில் ஆட்டமிழந்தது பெங்களூர் அணிக்கு நெருக்கடியானது. களத்தில் நிலைத்து நின்று நம்பிக்கையை ஏற்படுத்திய விராட் கோலி 43 (39) ரன்களில் விக்கெட்டை இழந்தது அணியின் வீழ்ச்சியை உறுதி செய்தது. அதன்பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லிக்கு ரபாடாவின் பந்துவீச்சு பெரும் பலமாக அமைந்தது. 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே கொடுத்திருந்த அவர் 4 விக்கெட்டுகளை சாய்த்து பெங்களூரை சுருட்டினார். மறுபுறம் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்ஸர் படேல் 4 ஓவர்களுக்கு 18 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தியது டெல்லிக்கு கூடுதல் பலமாக அமைந்தது. 4 ஓவர்களுக்கு 26 ரன்கள், ஒரு விக்கெட் என அஸ்வினும் தனது தரப்பிலிருந்து சிறப்பாக பந்துவீசியிருந்தார். இதுதவிர வேகப்பந்து வீச்சாளர் நோர்க்யா 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார். மொத்தத்தில் பவுலிங்கில் கோட்டை விட்ட பெங்களூர் அணி, பேட்டிங்கிலும் சொதப்பியதால் டெல்லி கேபிடல்ஸ் அணி எளிமையான வெற்றியை பதிவு செய்தனர்.
http://dlvr.it/Rj1zhQ
Tuesday, 6 October 2020
Home »
» டெல்லியின் பந்துவீச்சில் பணிந்த பெங்களூர் : மேட்ச் ரிவ்யூ