கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் காரணமாகவும், அரசுகள் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளின் காரணமாகவும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. தொடர்ந்து, படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்புக்குநிலைக்கு நாடுகள் திரும்பிவருகின்றன. 'அப்பாடா... கொரோனா ஓய்ந்தது' என சற்று நிம்மதிப் பெருமூச்சுவிட்ட நிலையில், தற்போது இரண்டாம் அலை அடிக்கத் தொடங்கியிருக்கிறது என்கிற செய்தி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
பிரான்ஸில் குறைந்திருந்த கொரோனா தாக்கம், தற்போது வேகமெடுக்கத் தொடங்கியதையடுத்து, அங்கு மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை சற்றுக் குறைந்திருந்த கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்திருக்கிறது. நாளொன்றுக்குப் புதிதாக 80,000 முதல் ஒரு லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.பள்ளி மாணவர்கள்
தமிழகத்தைப் பொறுத்தவரை, தொடக்கத்தில் அதிகரித்துக் காணப்பட்ட பாதிப்பு சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. 7,000 வரை சென்ற ஒருநாள் பாதிப்பு தற்போது 2,000-ஆகக் குறைந்திருக்கிறது. தமிழகம் மெல்ல மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கும்நிலையில், மத்திய அரசு புதிய ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அந்த அறிவிப்பில், கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை, அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. மேலும், பள்ளிகளைத் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தது.
Also Read: `தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி!' - தமிழக அரசு உத்தரவின் முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் முடிவு
மத்திய அரசு அறிவிப்புக்குப் பிறகு, தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தியது. அதன் பிறகு, வரும் நவம்பர் 16-ம் தேதி முதல், 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பலைகள் கிளம்பத் தொடங்கின. இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை தனது முடிவை மீண்டும் பரிசீலனை செய்ய முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிவிப்பு பின்வருமாறு:அறிவிப்பு அறிவிப்பு
`மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும், தனியார்ப் பள்ளிகளின் நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துகளைப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 9-ம் தேதி தமிழகம் முழுவதுமுள்ள பள்ளிகளில், பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இந்த கருத்துக் கேட்புக் கூட்டங்களில், 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாகத் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசால் முடிவெடுக்கப்படும்’ என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆபத்தில் தவிக்கும் ஆந்திரா
மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்பட்டது. அதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் நவம்பர் 2-ம் தேதி முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அந்த ஒரு நாளும் பள்ளியானது அரைநாள் மட்டும் செயல்படும் என்றும் ஆந்திர அரசு அறிவித்திருந்தது. அதையடுத்து, ஆந்திரா முழுவதும் பள்ளிகள் செயல்படத் தொடங்கின. இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் 150 ஆசிரியர்களுக்கும், 10 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் மூன்று நாள்களில் ஆந்திர மாநிலம் முழுவதும் 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன்
தமிழகத்தின் நிலை என்ன?
தமிழக அரசின் செயல்பாடுகளை வைத்துப் பார்க்கையில், பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களைத் திறப்பதில் ஒரு குழப்பமான மனநிலையில் அரசு இருப்பது தெரிகிறது. பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டால் அது, தமிழகத்தில் இரண்டாம் அலை உருவாகக் காரணமாக அமையும் என்று தொற்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். `ஆந்திராவில் நடந்ததை வைத்துப் பார்க்கையில், அதேநிலை தமிழகத்துக்கு ஏற்படாது என்பதற்கு என்ன நிச்சயம்? இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பாதுகாப்பு காரணம் கருதி மாணவர்களின் பெற்றோர்களும் ஆன்லைன் வழிக் கல்வியையே விரும்புகிறார்கள். தமிழக அரசு, பள்ளிகளைத் திறக்க அவசரப்படுவதற்குக் காரணம் என்ன' என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Also Read: கொரோனா: ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முழு ஊரடங்கு... 'அன்லாக் இந்தியா' நிலை இனி என்னாகும்?
இது குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் பேசினோம். ``தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்க அவசரப்படுவது தனியார் பள்ளிகள் அடுத்த தவணை கல்விக் கட்டணத்தை வசூலிப்பதற்காகத்தான். தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கிடைப்பதுபோல, தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகக் கல்வி கிடைப்பதில்லை. தற்போதுள்ள சூழலில், கல்வியைவிட மாணவர்களின் உடல்நலனில்தான் அக்கறை செலுத்த வேண்டும்.கல்வியாளர் நெடுஞ்செழியன்
தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அது கிடைப்பதில்லை. இப்படியான ஒரு சூழலில் எதன் அடிப்படையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வை நடத்தப் போகிறார்கள்? உண்மையில், இந்த அரசுக்கு மாணவர்களின் கல்வி மீது அக்கறை இருந்திருந்தால், தமிழகம் முழுவதும் இதுவரை மாணவர்கள் ஆன்லைன் கல்வியில் கற்றது என்ன... பெற்றது என்ன... இந்த ஆன்லைன் கல்வி பயனளிக்கிறதா என்பது குறித்து அனைத்துத் தரப்புக் கருத்துகளையும் கேட்டிருக்க வேண்டும். எங்கு கல்வியில் அரசியல் கலக்கிறதோ, அங்கு கல்வி சிறந்து விளங்க முடியாது. அரசியல் அல்லாத தன்னிலையான கல்வி அமைப்பே சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கிட முடியும்" என்று கூறினார்.
http://dlvr.it/Rl6cmN
Friday, 6 November 2020
Home »
» அச்சுறுத்தும் கொரோனா 2-வது அலை... பள்ளிகள் திறக்கும் முடிவைத் திரும்பப் பெறுமா தமிழக அரசு?