இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் என்றாலே எப்போதும் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பரபரப்பு கபில் தேவ் காலம்தொட்டு விராட் கோலி காலம் வரை நீடிக்கிறதென்றால் அது மிகையல்ல. இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகள் அது ஆஸ்திரேலியாவில் நடந்தாலும் சரி இந்தியாவில் நடந்தாலும் சரி எப்போதும் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதோ மீண்டும் ஒரு இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி தன்னுடைய முழு பலத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் இந்தியாவுக்கு எப்போதும் பெரிய வெற்றிகளை கொடுத்ததில்லை. 1970 முதல் 2003 வரை ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியிருந்தது. முதல்முறையாக ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடர் வெற்றியை 2003 இல் தடுத்து நிறுத்தியது அனில் கும்பளே தலைமையிலான இந்திய அணி. அதன்பின்பு 2018 இல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்தது. அந்தத் தொடரில் முக்கிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாதது இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக கூறப்பட்டாலும், அந்தத் தொடரில் இந்தியா அசத்தியது என்பதை மறுக்க முடியாது. ஏறக்குறைய 71 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது விராட் கோலியின் படை. இந்நிலையில் மீண்டும் இம்முறையும் தொடரை வெல்லும் முனைப்போடு களமிறங்குகிறது கோலியின் அணி. இந்நிலையில் 2018 சுற்றுப் பயணத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் குறித்து சற்றே திரும்பிப் பார்க்கலாம். விராட் கோலி ஆஸ்திரேலிய தொடர் முழுவதுமே ஆக்ரோஷமான கேப்டனாக இருந்தார். கடந்த டெஸ்ட் தொடரில் 282 ரன்களை குவித்தார். மிக முக்கியமாக 2ஆவது டெஸ்ட் போட்டியில் 123 ரன்களை சேர்த்து அசத்தினார். ஆனாலும் அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. பெர்த் டெஸ்ட்டில் தன்னுடைய 25 ஆவது சதத்தையும் அடித்தார் கேப்டன் கோலி. இப்போது விமர்சிக்கப்பட்டாலும் அப்போதைய ஆஸ்திரேலியா தொடரில் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்டார் ரிஷப் பன்ட். பேட்டிங் சிறப்பாக விளையாடினாரோ இல்லையா ஸ்டம்ப் பின்னாடி நின்றுக் கொண்டு "ஸ்லெட்ஜிங்"மூலம் ஆஸி வீரர்களை கலாய்த்துக்கொண்டு இருந்தார் பன்ட். ஆனால் தொடரின் முக்கியமான 4ஆவது டெஸ்ட்டில் விஸ்வரூபம் எடுத்த ரிஷப் பன்ட் 159 ரன்களை எடுத்தார். மொத்தமாக அந்தத் தொடரில் 350 ரன்களை எடுத்து நல்ல பிள்ளை என பெயரெடுத்தார். ராகுல் டிராவிட்டிற்கு பின்பு ஆஸ்திரேலியா தொடரில் சுவராக இருந்து காப்பாற்றினார் புஜாரா. அந்தத் தொடரில் 4 போட்டிகளில் மொத்தம் 521 ரன்களை குவித்தார் புஜாரா. அந்தத் தொடரில் இந்திய பேட்ஸ்மன்களில் அதிக ரன்களை எடுத்தவர் புஜாரா மட்டுமே. ஒரு டெஸ்ட் போட்டியில் 193 ரன்களை எடுத்து அசத்தினார். மேலும் அந்தத் தொடரின் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் புஜாரா. பந்துவீச்சை பொறுத்தவரை 2018 - 2019 தொடரில் பும்ரா ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தார். அந்தத் தொடரில் மொத்தம் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ராவுக்கு உறுதுணையாக இருந்து முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் முறையே 16, 11 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
http://dlvr.it/Rm0C7w
Thursday, 19 November 2020
Home »
» எதிர்பார்ப்புடன் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: கடந்த முறை நடந்தது என்ன?