நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதற்கிடையே, நிவர் புயல் கரையை நெருங்கும் நிலையில், சென்னை மக்களின் உதவிக்காக தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மழையால் ஏற்படும் சேதங்களை உடனுக்குடன் சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தூர்வாரும் வாகனங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், 176 நிவாரண மையங்கள், 109 படகுகள், 44 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் அருகே உள்ள ரிப்பன் மாளிகையில் அனைத்து துறை அலுவலர்களுடன் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 044-25384530, 044-25384540 என்ற உதவி எண்களை மக்கள் தொடர்புகொண்டு மழை தொடர்பான புகார்களை அளிக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், கழிவுநீர் கால்வாய் அடைப்பு, கழிவு நீர் தேக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து 044-45674567 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளித்தால் உடனடியாக சீரமைக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
http://dlvr.it/RmMy1M
Wednesday, 25 November 2020
Home »
» நிவர் புயல்: சென்னைக்கான உதவி எண்கள் அறிவிப்பு