பாரதிய ஜனதா நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. வேல் யாத்திரையை நாளை திருத்தணியில் தொடங்கி, டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்ய பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பக்தர்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க விநாயகர் சதுர்த்தி, மொகரம் உள்ளிட்ட மத விழாக்கள் நிறுத்தப்பட்ட நிலையில், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வேல் யாத்திரை நிறைவடைய இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், தமிழக டிஜிபி, பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு தெரிவித்துள்ளது.
http://dlvr.it/Rl1jym