தேர்தல் பரப்புரை எப்போது என்பது குறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். சென்னை அடையாறில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. டி.ராஜேந்தர் - தேனாண்டாள் முரளி தலைமையில் 2 அணிகள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் களத்தில் உள்ளன. இதில் இதுவரை 942 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தேர்தலில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக பாஜக கூட்டணி ஏற்கெனவே தெரிந்த செய்திதான். அதை தற்போது உறுதிபடுத்தியுள்ளார்கள். மருத நாயகத்தில் வரும் பாடல் 17-ஆம் நூற்றாண்டு காலத்தை குறிப்பிட்டு எடுக்கப்பட்டதால் அதில் மனுநீதியை பற்றி குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அப்புத்தகம் புழக்கத்தில் இல்லாதது என்பது உண்மை. அப்புத்தகம் தேவையில்லை என்பது இன்னொரு மிகப்பெரிய உண்மை. அதற்கான ஏற்பாடுகளைத்தான் நாம் ஒரு சமூகமாக கூடி செய்து கொண்டிருக்கிறோம். வேகம் போதாது என்பது நமது மனக்குறை. நியாயமான மனக்குறைதான். கூட்டணி குறித்து சொல்லவேண்டிய நேரம் இது இல்லை. பல கூட்டணிகள் உருவாகலாம். பல கூட்டணிகள் உடையலாம். அனுமதி கிடைத்தவுடன் தேர்தல் பரப்புரையை தொடங்குவேன். அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். ஊடகத்தின் தேவை எங்களுக்கும் இருக்கிறது. எங்களின் தேவை உங்களுக்கும் இருக்கிறது. எல்லோரும் கொஞ்சம் கவனமாக இருப்போம். இதை தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
http://dlvr.it/RmDXFd