கேரளாவில் எந்தவொரு வழக்கின் விசாரணையையும் நடத்த மாநில அரசிடம் சி.பி.ஐ முன் அனுமதி பெற வேண்டும் எனவும், சி.பி.ஐ-க்கு வழங்கப்பட்டிருந்த பொது அனுமதியைத் திரும்பப் பெறுவதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தூதரகம் மூலம் ஸ்வப்னா சுரேஷ் கும்பல் தங்கம் கடத்திய வழக்கு, ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் கேரள அரசின் லைஃப் மிஷன், போதைப்பொருள் வழக்கில் சி.பி.எம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷணனின் மகன் கைது செய்யப்பட்ட வழக்குகள் தீவிரமாகியுள்ள நிலையில், கேரள அரசு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதற்கு கேரள எதிர்கட்சிகளான காங்கிரஸும், பா.ஜ.க-வும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ``தவறு செய்கிறோம் என்பது தெரிந்ததால்தான் பினராயி விஜயன் அரசு மத்திய அரசு ஏஜென்சிகளைக் கண்டு பயப்படுகிறது. அதனால் மத்திய அரசு ஏஜென்சிகளின் நடவடிக்கைகளை முடக்க முயற்சிக்கிறது. செய்த செயல்கள் சட்டபூர்வமாகவும், உண்மையாகவும் இருந்திருந்தால், எந்த விசாரணையையும் எதிர்கொள்ள அரசு தயாராக இருந்திருக்கும். ஆட்சி அதிகார நிழலில் நடக்கும் ஊழல், மோசடி குறித்து விசாரிக்க மாநில காவல்துறையோ, விஜிலென்சோ தயாராக இல்லை. `இனி மத்திய அரசு ஏஜென்சிகளையும் விசாரணை நடத்த அனுமதிக்கமாட்டோம்’ எனக் கூறுவதன் மூலம், தங்கள் விரும்பியபடி செயல்படலாம், கேள்வி கேட்க யாரையும் அனுமதிக்கமாட்டோம் என்ற சந்தோஷத்தை பினராயி அரசு மக்களுக்குத் தெரிவிக்கிறது.கேரள முதல்வர் பினராயி விஜயன்
ஆளும் கட்சியின் மாநிலச் செயலாளர் மகனின் போதைப்பொருள் கடத்தல் வழக்கு பற்றி பினராயி விஜயன் அமைதியாக இருப்பது மிகப்பெரிய குற்றம். தலைமுறைகளை அழிக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கு சி.பி.எம் மாநிலச் செயலாளரின் மகன் வருடக்கணக்கில் தலைமை தாங்கியது மிகவும் மோசமான நிலை. ஆட்சி அதிகாரத்தின் நிழலில் நடக்கும் போதைபொருள் பிசினஸ் உள்ளிட்ட மறைவான நடவடிக்கைகளை வெளியே கொண்டுவந்ததால் கட்சிக்கும், அரசுக்கும் மத்திய அரசு ஏஜென்சிகள் மீது வெறுப்பு வந்து சேர்ந்துள்ளது.
Also Read: `இனி அனுமதியில்லாமல் சி.பி.ஐ விசாரிக்க முடியாது!' - பொது ஒப்புதலை ரத்து செய்த கேரளா
விசாரணை ஏஜென்சிகள் உண்மையை கண்டறிய முயலும்போது அதற்கு முட்டுக்கட்டைபோடும் நடவடிக்கைகள் ஜனநாயகத்துக்கு எதிரானது. நடுநிலையாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்தும் ஏஜென்சிகளை தடுக்க முயல்வது சமூகத்திற்கு மிகவும் தவறான புரிதலை ஏற்படுத்தும்" என்றார்.
இதுகுறித்து கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், ``தங்கம் கடத்தல் வழக்கு மற்றும் லைஃப் மிஷன் ஆகியவற்றில் முதல்வர் பினராயி விஜயனை விசாரணை செய்வார்கள் என்ற பயத்தால்தான், `சி.பி.ஐ விசாரணை கேரளத்தில் வேண்டாம்’ என தீர்மானம் எடுத்திருக்கிறார்கள்.கேரள பி.ஜே.பி தலைவர் கே.சுரேந்திரன்
முதல்வர் பினராயி விஜயன் மீதும், சி.பி.எம். மாநிலச் செயலாளர் மீதும் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சி.பி.எம் செயலாளர் மற்றும் அவரது மகனின் மீதாக குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்ப மத்திய அரசு ஏஜென்சிகளின் விசாரணையை தடைசெய்ய முயற்சிக்கின்றன. லைஃப் மிஷன் குறித்து சி.பி.ஐ முறைப்படி விசாரித்தால் இறுதியில் வழக்கு, பினராயி விஜயனை சென்றடையும். முதலமைச்சர் மிரண்டு நிற்கும் நிலை இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. எனவே, பயமுறுத்தி மத்திய ஏஜென்சிகளின் விசாரணையை முடக்க முடியாது" என்றார்.
http://dlvr.it/Rl5hn0
Friday, 6 November 2020
Home »
» `உண்மையாக இருந்திருந்தால் விசாரணையை எதிர்கொள்ள அரசு தயாராக இருந்திருக்கும்!’ - சென்னிதலா காட்டம்