உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் எட்டு வயது சிறுவனைக் கடத்திக் கொலை செய்த வழக்கில், குழந்தையை கடத்தி வைத்திருந்த நபர், அக்குழந்தையின் தந்தைக்கு ரூபாய் 2 லட்சம் கேட்டு குறுஞ்செய்தி (SMS) அனுப்பியுள்ளார். அந்த எஸ்.எம்.எஸ். யில் போலீஸ் என்ற வார்த்தையை ‘புலிஷ்’ என்றும், சீதாப்பூர் என்ற வார்த்தையை ‘சிதா-புர்’ என்றும் பிழையோடு அனுப்பியுள்ளார். குறுஞ்செய்தியை அடிப்படையாகக் கொண்டு பத்து நபர்களை வாக்கியம் ஒன்றை எழுதச்சொன்ன காவல்துறை அதிகாரிகள் கொலையாளியை கண்டுபிடித்து சிறையிலடைத்தனர்.
எட்டு வயது சிறுவன் கடத்தி கொலைசெய்யப்பட்ட வழக்கு குறித்து தெரிவித்த ஹர்டோய் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனுராக் வட்ஸ் (Anurag Vats), "கடந்த நவம்பர் 4 ம் தேதி பெனிகஞ்ச் (Beniganj) காவல் நிலையத்தில், எட்டு வயது சிறுவன் தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்றபோது காணவில்லை, அக்டோபர் 26 முதல் இன்று வரை அச்சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சிறுவனின் பெற்றோர்கள் புகாரளித்தனர். நவம்பர் 4 -ம் தேதி இரவு 11.30 மணியளவில், சிறுவனின் தந்தைக்கு ஒரு குறுஞ்செய்தி (SMS) வந்தது.
அந்த குறுஞ்செய்தியில், "குழந்தையை உயிருடன் மீட்டு அழைத்து செல்ல ரூபாய் 2 லட்சம் பணத்துடன் சீதாப்பூருக்கு வாருங்கள். போலீசாருக்கு தெரிவிக்க வேண்டாம் தெரியப்படுத்தினால் உங்கள் மகன் கொல்லப்படுவான்" (Do lakh rupay Seeta-Pur lekar pahuchiye. Pulish ko nahi batana nahi to haatya kar denge) என்று வந்த எஸ்.எம்.எஸ். யில் போலீஸ் (Police) என்ற வார்த்தை புலிஷ் (Pulish) என்றும், சீதாப்பூர் என்ற வார்த்தை சிதா-புர் (Seeta-pur) என்றும் தவறாக வார்த்தை பிழையோடு இருந்ததை கவனித்தோம்.
உடனடியாக, கடத்தப்பட்ட சிறுவனைக் கண்டுபிடிக்க குழுக்களை உருவாக்கியதோடு, குறுஞ்செய்தி வந்த எண்ணிற்கு அழைத்தோம், ஆனால் அந்த எண் உபயோகத்தில் இல்லை. சைபர் கண்காணிப்பு குழுவின் உதவியோடு, மேற்கொண்ட விசாரணையில் குற்றவாளி, கல்வியறிவற்றவராகவும் எஸ்.எம்.எஸ். எழுத தெரியாத நபர் என்பதும் தெரியவந்தது. பின்னர், சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 10 பேரை சந்தேகித்து அவர்களை அழைத்து வந்தோம்" என்றார் ஹர்டோய் எஸ்.பி அனுராக்.சிறை
சந்தேகத்தின் பெயரில் அழைத்து வரப்பட்ட பத்து நபர்களையும், "எனக்கு போலீஸ் வேலை வேண்டும். என்னால் ஹர்டோயிலிருந்து சீதாப்பூர் வரை ஓட முடியும் (Main police main bharti hona chahta hun” and “Main Hardoi se Sitapur daud kar ja sakta hun) என்ற வாக்கியத்தை எழுத சொல்லியுள்ளனர் காவல்துறை அதிகாரிகள். அப்போது, குழந்தையின் தூரத்து உறவினரான சாண்டிலாவை சேர்ந்த ராம் பிரதாப் சிங், குழந்தையின் தந்தை பெறப்பட்ட குறுஞ்செய்தி (SMS) யில் பிழையோடு இருந்த இரண்டு தவறான வார்த்தைகளை மீண்டும் ‘புலிஷ்’ என்றும் சிதா-புர் என்றும் எழுதியுள்ளார்.
இதன் அடிப்படையில், அந்த எஸ்.எம்.எஸ். அனுப்பியது ராம் பிரதாப் சிங் என ஊர்ஜிதப்படுத்திய காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
http://dlvr.it/RlJjJn
Monday, 9 November 2020
Home »
» உ.பி: `போலீஸுக்கு புலிஷ்...’ வார்த்தை பிழை எஸ்.எம்.எஸ்! - சிக்க வைத்த காவல்துறை