மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 2 நாட்களில் 3 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுலின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான சுவேந்து ஆதிகாரி சமீபத்தில் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். அத்துடன், நேற்று முன்தினம் தனது எம்எல்ஏ பதவி, கட்சி பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். விரைவில் இவர் பாஜகவில் இணையலாம் எனக் கூறப்படுகிறது. இப்போது சுவேந்து ஆதிகாரியைத் தொடர்ந்து இன்னும் சில தலைவர்கள் ராஜினாமா செய்யத் தொடங்கியுள்ளனர். இது, சட்டப்பேரவைத் தேர்தலை விரைவில் எதிர்கொள்ளவுள்ள திரிணாமுல் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பண்டேஸ்வர் எம்.எல்.ஏ ஜிதேந்திர திவாரி தனது கட்சியை முதலில் ராஜினாமா செய்தார். இதையடுத்து, திரிணாமுல் தொண்டர்கள் இவரின் அலுவகலகத்தை சூறையாட, தற்போது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து சில்பத்ரா தத்தா, பாராக்பூரைச் சேர்ந்த டி.எம்.சி எம்.எல்.ஏவும் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல், தென் வங்காள மாநில போக்குவரத்துக் கழகத்தின் (எஸ்.பி.எஸ்.டி.சி) தலைவரான கர்னல் தீப்தங்சு சவுத்ரியும் தனது பதவியில் இருந்து விலகினார். இதனைத் தடுக்க அதிருப்தி தலைவர்களுடன், குறிப்பாக எம்.பி, எம்எல்ஏக்களுடன் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, மூத்த தலைவர்கள் ஃபிர்ஹாத் ஹக்கீம், அருப் பிஸ்வாஸ் ஆகியோர் பேச முயற்சித்து வருகின்றனர். அசான்சோல் பகுதியில் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்கவர் ஜிதேந்திர திவாரி. இவர் கட்சியில் இருந்து வெளியேறுவதைத் தடுக்க மம்தா இன்று ஒரு கூட்டத்தைத் திட்டமிட்டார். ஆனால், அதற்கு முன்னர் திவாரி ராஜினாமா செய்தார். இவரின் ராஜினாமாவுக்கு காரணம், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சரான ஃபிர்ஹாத் ஹக்கீம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அசன்சோல் நகருக்கு மத்திய அரசு ஒதுக்கிய 3,500 கோடி ரூபாய் நிதியை அமைச்சரான ஃபிர்ஹாத் ஹக்கீம் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தியதால், அசன்சோலின் வளர்ச்சி தடைபடுகிறது எனக் குற்றம்சாட்டி பதவி விலகியுள்ளார். இது தொடர்பாக 'தி பிரிண்ட்'டிடம் பேசியுள்ள திவாரி, ``தற்போதைய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சரான ஃபிர்ஹாத் ஹக்கீம் ஒருபோதும் அசான்சோலில் எந்த வளர்ச்சியையும் அனுமதிக்க மாட்டார். அசன்சோல் மக்களுக்கு நான்தான் பொறுப்பு. முதல்வர் என்னிடம் பேசினார். ஆனால் நான் எழுப்பிய பிரச்சினைகள் அமைச்சரால் தீர்க்கப்படவில்லை. எனவே, எங்கள் முதல்வரை சங்கடப்படுத்த நான் விரும்பவில்லை. நான் ராஜினாமா செய்கிறேன், அவரை மீண்டும் அமைச்சராவதைத் தடுக்கும் எந்தவொரு சக்தியையும் ஆதரிப்பேன்" என்று கூறியுள்ளார். இதேபோல், கர்னல் தீப்தங்சு சவுத்ரியும், ``தற்போதைய தலைவர்கள் கீழ் செயல்பட முடியாது. நாங்கள் எப்போதும் தீதியைப் பார்த்து, ஒதுக்கப்பட்டபடி வேலை செய்தோம். நான் எம்.எல்.ஏ அல்லது எம்.பி. அல்ல. நான் அரசியல் பதவிகளுக்கு ஏங்கவில்லை. ஆனால் நான் ஒரு தொழில்முறை நிபுணராக வேலை செய்தேன். நான் எஸ்.பி.எஸ்.டி.சி யை லாபகரமாக்கினேன், குறை தீர்க்கும் களத்தை உருவாக்கிய பிறகு சரிசெய்தலில் நான் மிகவும் கடினமாக உழைத்தேன்" என்றவர், பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தொடர்பாக பேசினார். அதில், ``வாடகை நிறுவனம் எல்லாவற்றிலும் தலையிடத் தொடங்கியது. எங்களுக்கு ஒருபோதும் பாராட்டு கிடைக்கவில்லை, எங்கள் பணி இழிவுபடுத்தப்பட்டது. தீதி இப்போது பிஷி (அத்தை) ஆகிவிட்டார். இந்த தற்போதைய தலைவர்களின் கீழ் நாங்கள் பணியாற்ற முடியாது" என்று கூறியுள்ளார். ஆனால் இந்த ராஜினாமாக்களை பற்றி பேசியுள்ள திரிணாமுல் கட்சி தரப்பு, ``திரிணாமுல் காங்கிரஸ் மிகப் பெரிய குடும்பம். ஒரு சில மக்கள் விலகினால் அது எங்கள் கட்சியை பாதிக்காது. நாங்கள் அனைவரும் திரிணாமுலில் ஒரு குறிக்கோளுடன் மற்றும் ஒரு சித்தாந்தத்துடன் இணைந்தோம். பலர் ஆடைகளை மாற்றுவது போன்ற கட்சிகளை மாற்றலாம், ஆனால் அவர்களுடைய சித்தாந்தத்துடன் சமரசம் செய்ய முடியுமா? காந்திஜியைக் கொன்ற கட்சியில் அவர்கள் எவ்வாறு சேர முடியும்?" என்று கூறியுள்ளனர். இதற்கிடையே, ராஜினாமா செய்த அனைவரும் நாளை மேதினிபூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்தும் பேரணியின்போது பாஜகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மேலும் ட்விஸ்ட்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை போல குறைந்தது நான்கு முதல் ஐந்து எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு எம்.பி. திரிணாமுல் கட்சியிலிருந்து விலகி நாளை அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைவார்கள் என அக்கட்சி தரப்பில் பேசப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பர்த்வான், கிழக்கு மிட்னாபூர், மால்டா, முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானா ஆகிய மாவட்டங்களின் பல மூத்த நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் நகராட்சிகளின் பல கவுன்சிலர்கள் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறிய நிலையில், தொடர்ந்து நடக்கும் ராஜினாமா படலம் திரிணாமுல் தரப்பில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/Rnvmm7
Friday, 18 December 2020
Home »
» மேதினிபூர் பிளான்: 2 நாட்களில் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா... கலக்கத்தில் மம்தா!