உள்ளாட்சித் தேர்தலில் பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறது கேரளம். உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு என்பது முன்பே கொண்டுவரப்பட்டுவிட்டது. அதிலும் இந்த ஆண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட இளம் தலைமுறையினருக்கு போட்டியிட அதிக வாய்ப்பு கொடுத்தன அம்மாநிலக் கட்சிகள்.
அதிக இடங்களை வென்ற சி.பி.எம் கூட்டணி பல பகுதிகளில் ஊராட்சித் தலைவர், நகராட்சி, மாநகராட்சி, யூனியன் தலைவர்கள் பதவியை யாரும் எதிர்பாராத நபர்களுக்கு வழங்கி பெரும் ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறது. மேயர் ஆர்யா ராஜேந்திரன்
Also Read: ``ஆர்யா என ஏன் பேர் வெச்சோம் தெரியுமா?" - திருவனந்தபுரம் இளம் மேயரின் பெற்றோர் பெருமிதம்
21 வயதான ஆர்யா ராஜேந்திரனை திருவனந்தபுரம் மாநகராட்சித் தலைவராக ஆக்கி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதற்கும் ஒருபடி மேலாக, கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணி செய்துகொண்டிருந்த ஆனந்தவல்லியை, அதே ஊராட்சி ஒன்றியத் தலைவராக ஆக்கி அழகு பார்த்துள்ளது சி.பி.எம் கட்சி.
பத்தனாபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவராகப் பொறுப்பேற்ற ஆனந்தவல்லியிடம் பேசினோம். ``10 வருடங்களாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக இருந்தேன். தினக்கூலி அடிப்படையில் அங்கு வேலை செய்தேன். 200 ரூபாய் கூலியாகக் கிடைக்கும். பத்தனாபுரம் யூனியனில் 10-வது வார்டான தலவூர் பகுதியில் போட்டியிட, சி.பி.எம் தலைமை எனக்கு வாய்ப்பு அளித்தது. அதில் வெற்றிபெற்றேன். மொத்தம் 13 கவுன்சிலர்களைக் கொண்ட பத்தனாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 7 இடங்களில் சி.பி.எம் கூட்டணி வென்றது. அதைத் தொடர்ந்து என்னை ஊராட்சி ஒன்றிய சேர்மன் வேட்பாளராகவும் அறிவித்து, சேர்மன் ஆக்கியுள்ளது.குடும்பத்தினருடன் ஆனந்தவல்லி
என் கணவர் மோகனன் பெயின்டிங் வேலை செய்கிறார். எனக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் மிதுன் மோகன் டிகிரி படிக்கிறான், இளையவன் கார்த்திக் ப்ளஸ் டூ படிக்கிறான். என் கணவர் சி.பி.எம் லோக்கல் கமிட்டி உறுப்பினராக இருக்கிறார். நானும் சி.பி.எம் உறுப்பினராக இருக்கிறேன்.
இந்த வெற்றி என்னுடையது அல்ல, கட்சி மீதான மக்களின் நம்பிக்கை. அதுதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கட்சி என்னிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது. எனவே, கட்சி பேதம் இல்லாமல் நான் செயல்படுவேன்.தூய்மைப் பணியாளராக வேலைபார்த்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலேயே தலைவராகப் பொறுப்பேற்ற ஆனந்தவல்லி
உள்ளாட்சியில் வார்டு கவுன்சிலர் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டதும், இரு கரங்களையும் நீட்டி மக்கள் என்னை வரவேற்றனர். 564 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறவும் வைத்தார்கள். யூனியனில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அவ்வளவு அனுபவம் இல்லை. எனவே, அதுபற்றி விரைவில் எல்லாம் அறிந்துகொண்டு, மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்வேன். அடித்தட்டு மக்களையும் முன்னுக்குக் கொண்டுவரும் பணியை கேரளத்தின் சி.பி.எம் அரசு செய்து வருகிறது" என்றார்.
ஆனந்தவல்லி யூனியன் சேர்மன் ஆனதில் அவரது குடும்பமும், ஊர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநிலம் தாண்டியும் இது சிறப்புச் செய்தியாக உள்ளது.
http://dlvr.it/RpgdLC
Thursday, 31 December 2020
Home »
» ``மக்களுக்கு என் நன்றி! - `தூய்மைப் பணியாளர் டு யூனியன் சேர்மன்' ஆனந்தவல்லியின் மகிழ்ச்சி