மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிலம் வழங்கப்பட்டு விட்டது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருக்கும் நிலையில், நிலத்தைக் கொடுப்பதில் ஒருசில பிரச்னைகள் இருப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியிருக்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியபிறகு, அதற்கான முயற்சிகள் எடுக்கப்படாதது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், வருவாய்த்துறை அமைச்சரும், முதல்வரும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்தை தெரிவித்திருக்கின்றனர். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், ‘’எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட வருவாய்த்துறை அலுவலகத்திலும், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகத்திலும் உறுதிசெய்துவிட்டுத்தான் வருவாய்த்துறை அமைச்சர் என்ற முறையில் நான் தெரிவிக்கிறேன். வருவாய்த் துறையிலிருந்து மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள்(மத்திய) எத்தனை ஏக்கர் கேட்டாலும் கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால்தான் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கியது. இல்லாவிட்டால் அத்துமீறல் என்றாகிவிடும்’’ என்றார். ஆனால் இன்று அரியலூரில் பேசிய முதல்வர் அதற்கு முரண்பாடான கருத்தை கூறினார். அவர் பேசியபோது, ‘’எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் சில வகைமாற்றம் செய்யவேண்டி இருக்கிறது. விரைவில் செயல்பட்டு அந்த நிலம் வழங்கப்படும். ஏற்கெனவே அறிவித்தபடி நிலம் வழங்கப்படும். வங்கியின் மூலமாக மத்திய அரசு லோன் வாங்கும் முயற்சியில் உள்ளதால் நிதி வழங்குவதில் சற்று கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது. நிலம் வழங்குவதில் எந்தவகையான இடர்பாடும் இல்லாமல் இருக்க அரசு நடவடிக்கையை மேற்கொள்ளும். இருக்கும் சில பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு உரிய நேரத்தில் நிலம் வழங்கப்படும்’’ என்றார்.
http://dlvr.it/RntCxl
Friday, 18 December 2020
Home »
» மதுரை எய்ம்ஸ்: முரண்பட்ட கருத்தை மாறி மாறி தெரிவித்த முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர்