ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் தற்கொலையில் ஈடுபடும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துவருகின்றன. ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் அதில் ஏற்பட்ட தொடர் தோல்வியின் காரணமாக கடன் சுமை பெருகியதால், தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதையடுத்து, நேற்று (01.12.2020) நிகழ்ந்த ஆந்திரா சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை முற்றிலும் தடை செய்வதற்கான தனி மசோதாவை அம்மாநில அரசாங்கம் நிறைவேற்றியிருக்கிறது.ஆன்லைன் சூதாட்டம்
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ``சமீபத்தில் இளைஞர்கள் சிலர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதையடுத்து தற்போது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சட்டவிதிகளை மீறுவோர் யாராக இருந்தாலும், அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படும். நமது அரசு மிகவும் வெளிப்படையான முறையில் செயல்பட்டுவருகிறது. சமீபத்தில், நமது அமைச்சரவை சகா ஒருவரின் உறவினர், இது போன்ற செயலில் ஈடுபட்டுவருவது தெரியவந்ததுடன், உடனடியாக அவருக்கு எந்தவித பாரபட்சமுமின்றி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஆந்திர உள்துறை அமைச்சரான சுச்சாரிதா இம்மசோதா குறித்து கூறுகையில், ``ஆன்லைன் மூலம் நிகழ்த்தப்படும் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. இந்தச் சட்டத்தின் மூலம் அதைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம். ஆன்லைனில் போலியான தளங்களின் மூலம் நிகழும் பணமோசடிச் சம்பவங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
Also Read: ஒழிக்கப்பட வேண்டிய ஆன்லைன் சூதாட்டம்!
இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு முதற்கட்டமாக ரூ.5,000 அபராதமாக விதிக்கப்படுவதோடு, ஓராண்டுச் சிறைத் தண்டனையும் வழங்கப்படும். அடுத்தபடியாக, தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை அதிகரிக்கப்படுவதோடு அபராதமும் அதிகரிக்கப்படும். அத்தோடு இதில் கைதாகும் நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட மாட்டாது” என்று கூறினார்.
http://dlvr.it/RpD0Hg
Wednesday, 23 December 2020
Home »
» `ஓராண்டுச் சிறை; ஜாமீன் கிடையாது!’- ஆன்லைன் சூதாட்டத்துக்கு செக் வைத்த ஆந்திரா