இந்தியத் தேர்தல் களமும், கூட்டணியும் எப்போதும் பல விசித்திரங்களை கொண்டவை. எந்தக் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்று எப்போதும் எளிதில் கணிக்க முடியாது. மாறி மாறி வசைபாடிக்கொண்டிருந்த தலைவர்கள், கூட்டணியின்போது கைகோத்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது வாடிக்கைதான். 1991-ஆம் ஆண்டு முதல்முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, 1998-ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இதனையடுத்து 1998 நாடாளுமன்றத் தேர்தலில் புதிய வியூகத்தை கையில் எடுத்தார். அதாவது, அந்தத் தேர்தலில் பாஜக, பாமக, மதிமுகவுடன் ஒரு புதிய கூட்டணியை அறிவித்தார் ஜெயலலிதா. இது அப்போது பெரும் பேசுபொருளானது. மேலும் பாஜகவுக்கு தமிழகத்தில் பலமாகவும் அமைந்தது. ஜெயலலிதாவின் அந்த முடிவுதான் 1998 தேர்தலில் 20-க்கும் அதிகமான சிறிய கட்சிகளை இணைத்து வாஜ்பாய் ஆட்சி அமைக்க துணைபுரிந்தது. ஆனால், அது நிலைக்கவில்லை. 13 மாதங்களில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்தார் ஜெயலலிதா. தொடர்ந்து பாஜக - திமுக கூட்டணி ஏற்பட்டு, நிலையான ஆட்சியை கொடுத்தது பாஜக. கொள்கை அளவில் பாஜகவும் திமுகவும் நேரெதிர். ஆனால், அதிமுகவும் பாஜகவும் அப்படி அல்ல. ஜெயலலிதாவின் சித்தாந்தங்கள் பெரும்பாலும் பாஜகவோடு ஒத்துபோகும் என்பது அரசியல் நோக்கர்களின் பார்வை. ஆனாலும், அப்போது மத்திய பாஜக அரசில் அங்கம் வகித்தது திமுகதான். தொடர்ந்து 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி திமுக, காங்கிரஸூடன் இணைந்தது. இதனையடுத்து அதிமுகவுடன் கூட்டணி வைத்தது பாஜக. ஆனால், அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து மதமாற்ற தடை சட்டத்தை திரும்ப பெறுதல், காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் கைது போன்ற ஜெயலலிதாவின் நடவடிக்கைகளின் எதிரொலியால் பாஜக - அதிமுக இடையே விரிசல் விழுந்தது. 2014 தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்து சந்தித்துவிட்டுச் சென்றார். ஆனாலும், 39 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை களமிறக்கினார் ஜெயலலிதா. தேர்தல் பிரசாரத்தில்கூட "மோடியா இந்த லேடியா" என கேட்டார் ஜெயலலிதா. அதில் 37 தொகுதிகளில் அதிமுக வெற்றிப் பெற்றது. அதிமுகவின் முகமாக இருந்தவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் இப்போது இல்லை. அதேபோல், திமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இப்போது இல்லை. இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி எப்படியாவது தமிழகத்தில் அழுத்தமாக கால்பதிக்க வேண்டும் என்ற நிலையில் பாஜக இருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஆதரவு தெரிவித்தே வருகிறது. வேளாண் சட்டங்களுக்கான ஆதரவு வரை இது தொடர்கிறது. இதற்கு காரணம், அப்போதுதான் நலத்திட்டங்களை பெற முடியும் என்பதாகவே இருக்கிறது அதிமுக தலைமைகளின் பேச்சு. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும், மத சார்பற்ற கட்சிகள் என்ற பெயரில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியும் களம் கண்டன. அதில் அதிமுக கூட்டணி பலத்த அடி வாங்கியது. ஒபிஎஸ் மகனான ரவீந்திரநாத் மட்டுமே அதிமுக கூட்டணியின் ஒற்றை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், திமுக கூட்டணி மற்ற அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. தற்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதிலும், தேசிய ஜனநாயக கூட்டணி என்றே இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. அதனால், தமிழக பாஜக தலைவர்கள் கூட்டணி குறித்து சரமாரியாக பேசிவருகின்றனர். ஆனால், அதற்கு முன்னதாகவே சுதாரித்துக்கொண்ட அதிமுக தலைமை, அமித் ஷா வருகையின்போதே கூட்டணி குறித்து அறிவித்துவிட்டது. அமித் ஷா நெருக்கம் காட்டினாலும், அமைதியையே பதிலாக தந்து வந்தார். சென்னைப் பயணத்தை முடித்துக்கொண்டு அமித் ஷா டெல்லி சென்றபின்தான் தமிழக பாஜக தலைவர்களின் குரல் அழுத்தமாக எழும்ப தொடங்கியது. எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பாஜகவை முன்னிலைப்படுத்துவதோடு, அதிகப்படியான சீட்டுக்களும், எம்.எல்.ஏ, அமைச்சர் போன்ற பதவிகளையும் முன்வைத்தே பேசி வருகின்றனர். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வரை பாஜக தலைமை அறிவிக்கும் எனக் கூறி, அவ்வப்போது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது தமிழக பாஜக. ஆனாலும், தற்போது அதிமுடன் கூட்டணியில் இருப்பதாக அவர்கள் சொல்லத் தவறுவதில்லை. சில நாட்களுக்கு முன்பு பேசிய தமிழக பாஜகவின் துணைத் தலைவர் அண்ணாமலை, "ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம்" என்றார். அண்மையில் அரியலூரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், "யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். முதல்வர் வேட்பாளர் அதிமுக தலைவராக இருப்பினும், அது குறித்தான அறிவிப்பை பாஜக தலைமையே அறிவிக்கும்" எனத் தெரிவித்தார். இவை அனைத்தையும் பார்க்கும்போது அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே கண்கூடாகத் தெரிகிறது. இந்த நிலையில்தான் நேற்று அதிமுகவின் தேர்தல் பரப்புரை தொடக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கருத்து மோதல் குறித்தோ, தேசிய கட்சிகள் குறித்தோ அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசவில்லை என்பது சற்று வியப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், எல்லோருக்கும் வியப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தேசிய கட்சிகளை கடுமையாக சாடினார். அவரின் அனல்பறக்கும் பேச்சுக்களால் அதிமுக தனது பலத்தை நிரூபிக்க முயன்று வருவதாகவே பார்க்கப்படுகிறது. நேற்று மேடையில் பேசிய கே.பிமுனுசாமி, "அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தலைமையில்தான் கூட்டணி. எந்த தேசிய கட்சி இப்படி பேசி கூட்டணிக்கு வந்தாலும், அவர்கள் அதிமுகவுக்கு தேவையில்லை. ஜெயலலிதா, கருணாநிதி என்ற ஆளுமைகள் இல்லாத தமிழகத்தில் இடையில் புகுந்து பலன் பெறலாம் என சிலர் நினைக்கின்றனர். எந்த தேசிய கட்சிகளும் உள்ளே வரவிட முடியாமல் தமிழகத்தை காத்தது திராவிட இயக்கம். தற்போது சில சூழ்ச்சி செய்து உள்ளே வர பார்க்கின்றனர். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்" என காட்டமாக பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என பாஜக நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்து வரும் நிலையில், 'கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை' என கே.பி.முனுசாமி பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக பாஜகவின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், "அதிமுகவுக்கு ஆபத்து இருப்பது போலவும், அச்சம் இருப்பது போலவும் தோன்றுகிறது. அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள், நிர்வாகிகள் பேசியதை பார்க்கும்போது அச்சத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. அதிமுக யாருக்கும் பயப்பட தேவையில்லை. தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி நீடித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியையும் வலுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு கட்சியினரும் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக சில விஷயங்களைப் பேசுகிறார்கள். இதைக் குற்றம் என்று சொல்ல முடியாது. அதிமுக அமைச்சர்களும் அதுபோல் பேசியிருக்கலாம். அதிமுகவினர் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதை ஏற்றுக்கொள்வது குறித்து எங்களது கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும்" என்றார். அதிமுகவின் இருபெரும் தலைமைகளே 'அமைதி' காக்கும் நேரத்தில், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கறாராகப் பேசியிருப்பது, பாஜகவுடன் கூட்டணி இல்லாமலும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் காணும் முடிவா? அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து தோல்வியடைந்ததை கருத்தில்கொண்டு, இந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக ஒத்துவராது என எப்படியாவது அந்தக் கூட்டணியிலிருந்து பிரிந்துவரும் திட்டமா? அல்லது முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக ஏற்படுத்தி வரும் சலசலப்புகளால் அதிமுக ஆத்திரமடைந்துவிட்டதா? - இப்படி பல கேள்விகள் எழாமல் இல்லை. இந்த பரபரப்பான கட்டத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். இதனால் எழும் கேள்விகள் அனைத்திற்கும் விரைவில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://dlvr.it/RpTlHS
Monday, 28 December 2020
Home »
» கறார் காட்டிய கே.பி.முனுசாமி; 'அமைதி' தலைமைகள்... ஆட்டம் காண்கிறதா அதிமுக - பாஜக கூட்டணி?