வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனது பங்கும் நிச்சயம் இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்திருக்கிறார். அவரதுஇந்த திடீர் 'அணுகுமுறை' தமிழக அரசியலில் பல்வேறு வியூகங்களுக்கு வித்திட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தவருமான மு.க.அழகிரி, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாகக்கூறி கடந்த 2004-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதற்கு பின் மு.க.அழகிரியின் அரசியல் நடவடிக்கைகள் சற்று ஓய்ந்திருந்தன. பின்னர் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, சேப்பாக்கத்தில் இருந்து மெரினா வரை ஒரு அமைதிப் பேரணி நடத்தினார். அதன்பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்து வந்த அழகிரி, தற்போது மீண்டும் அரசியல் பரபரப்புக்கு வந்துள்ளார். மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி கூறும்போது, “பாஜகவில் நான் இணையப்போவதாக வந்த செய்திகள், அனைத்தும் வதந்திகளே. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கும் இருக்கும்” என்றார். புதியக் கட்சி தொடங்குவது தொடர்பான கேள்வியை எழுப்பியபோது “அது போக போகத்தான் தெரியும். அது சம்பந்தமான முடிவை ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பிறகு கூறுவேன்” என்று கூறினார். அழகிரியின் இந்த பேட்டி பேசுபொருளான நிலையில், இது குறித்து அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமான தராசு ஷ்யாம் கூறும்போது “கடந்த மூன்று ஆண்டுகளாகவே அவருக்கு அரசியலில் பின்னடைவுதான். குறிப்பாக கருணாநிதி இறப்பு மற்றும் அதன்பின் அழகிரி நடத்திய அமைதிப் பேரணிக்கு பின்னர் அவருக்கான ஆதரவு என்பது காணாமல் போய்விட்டது. அவருக்கு தற்போது இருக்கும் ஒரே அந்தஸ்து அவர் கருணாநிதி மகன் என்பதுதான். பாஜகவில் அவரால் சேர இயலாது. ஒருவேளை சேர்ந்தால் அந்த அந்தஸ்தும் போய்விடும். ஆகையால் மு.க.அழகிரி, தற்போது அரசியலில் தனது இருப்பை காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார்” என்றார். இது குறித்து அரசியல் விமர்சகர் கணபதி கூறும்போது “அழகிரியை வெளியேவிட்டால் நிச்சயம் திமுகவிற்கு பாதிப்பு உருவாகும் என்பது அவர்களுக்கு தெரியும். ஆகையால் திமுக தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்குவார்கள். அழகிரியை பொருத்தவரை தனது மகனுக்கு கட்சியில் பொறுப்பை கொடுக்குமாறு நிர்பந்திக்கலாம். பாஜகவில் அவர் சேரமாட்டார் என்றே நான் நினைக்கிறேன். அப்படி ஒருவேளை அவர் இணைவதாக இருந்தால், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதோ அல்லது அதற்கு முன்போ அவர் இணைந்திருக்கலாம். பாஜகவின் ஆதரவில் அவர் தனிக்கட்சி தொடங்குவாரா என்பது கணிக்க முடியாததாக இருக்கிறது. மு.க.அழகிரியின் இந்தப் பேட்டி குறித்து திமுக மூத்த தலைவர்களிடம் கேட்டபோது, அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு மூத்த நிர்வாகிகளுக்கும், திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தில் இருப்பவர்களுக்குமே விருப்பமில்லை என தெரிவிக்கின்றனர்.
http://dlvr.it/RmrTxL
Wednesday, 2 December 2020
Home »
» மு.க.அழகிரியின் அடுத்த அரசியல் 'இன்னிங்ஸ்' எப்படி இருக்கும்? - ஒரு பார்வை