கேரள மாநிலம் கொச்சியை அடுத்த நெடும்பாசேரி பகுதியில், யூஸப் என்பவர் தனது வீட்டில் வளர்த்த நாயை காரின் பின்புறம் கயிற்றால் கட்டி ரோட்டில் இழுத்துக்கொண்டு சென்ற சம்பவம் சில நாள்களுக்கு முன்பு நடந்தது. பைக்கில் சென்ற அகில் என்ற இளைஞர் தனது மொபைல்போனில் இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்தார். மேலும், காரை நிறுத்தி யூஸப்பிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் அந்த நாயை அவிழ்த்து விட்டுவிட்டு சென்றார் யூஸப். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து யூஸப்பை கைது செய்தனர். தனது குடும்பத்தினருக்கு அந்த நாய் பிடிக்காததால் வெளியே விடுவதற்காகக் காரில் கட்டி இழுத்துச் சென்றதாக யூஸப் தெரிவித்தார். ரத்தக் காயத்துடன் மீட்கப்பட்ட அந்த நாயை 'தயா' என்ற விலங்குகள் நல அமைப்பின் துணைத்தலைவர் கிருஷ்ணன் என்பவர் தத்தெடுத்து 'அபாக்க' எனப் பெயரிட்டு வளர்த்து வருகிறார். காரின் பின்னால் கட்டி இழுக்கப்பட்ட நாய்
இந்நிலையில், வளர்ப்பு நாயை காரில் கட்டி இழுத்த சம்பவத்தை மேற்கோள்காட்டி கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
ரமேஷ் சென்னிதாலாவின் ஃபேஸ்புக் பதிவில், "வளர்ப்பு நாயை காரில் கட்டி இழுத்த சம்பவம் பற்றி, நான் கண்ணூரில் தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோது அறிந்தேன். அது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. காசர்கோட்டில் இறுதிக்கட்ட பிரசாரம் முடித்துவிட்டுத் திருவனந்தபுரம் வீட்டுக்கு வந்தபோது, எனது வீட்டில் வளர்க்கும் நாய் ஸ்கூபி ஓடிவந்து என்னிடம் அன்புகாட்டியது. இளைய மகன் ரமித் இரண்டரை ஆண்டுக்கு முன்னால் ஸ்கூபியை எங்கள் வீட்டில் உறுப்பினராக்கினான். எங்களுடன் அந்த நாய் விரைவில் அன்பானது.
'ஸ்கூபி' எனச் சத்தமாக அழைத்தால் அது வேகமாக வந்து என் மனைவி அனிதாவின் காலில் இடித்து நிற்பதைக் கவனித்தோம். கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோதுதான் ஸ்கூபிக்கு பார்வை இல்லை என்ற விஷயம் தெரியவந்தது. முதலில் வருத்தமாக இருந்தது. பின்னர், இன்னும் அன்புடன் ஸ்கூபியைக் கவனித்துக்கொண்டோம். ஏதாவது, ஒரு குறை இருந்தால் அதை மற்றொரு வகையில் கூடுதலாகக் கடவுள் கொடுப்பார் என்ற உண்மையை ஸ்கூபி விஷயத்தில் கண்டுகொண்டோம். தனது கூர்மையான செவித்திறன் மற்றும் முகர்ந்துபார்க்கும் திறன் மூலம், பார்வை இல்லை என்ற குறையைக் கடந்து வந்துள்ளது ஸ்கூபி.தனது வீட்டில் வளர்க்கும் ஸ்கூபி நாயுடன் கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா
தன்னைவிட தன் உரிமையாளரை அதிகமாக நேசிக்கும் பிராணிதான் நாய். சக உயிரினங்களிடம் அன்புடன் நடந்துகொள்ளுங்கள். நாம் அன்புகாட்டினால், அதை இரண்டு மடங்காகத் திருப்பித்தரும் இந்த மிருகங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். இந்தப் பூமிக்கு மனிதர்கள் மட்டுமல்ல, அவர்களும் உரிமை உள்ளவர்கள்தான்" என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் ரமேஷ் சென்னிதாலா.
கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலாவின் வழக்கமான அரசியல் பதிவுகளைவிட அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது அவரது வளர்ப்பு நாய் குறித்த இந்தப் பதிவு. நெட்டிசன்கள் உருக்கத்துடன் அதற்குப் பின்னூட்டம் இட்டு வருகின்றனர்.
நாங்களும் லவ் யூ ஸ்கூபி!
http://dlvr.it/RnhSVc
Tuesday, 15 December 2020
Home »
» ``ஸ்கூபிக்கு பார்வை கிடையாது!' - நெட்டிசன்களை நெகிழவைத்த ரமேஷ் சென்னிதாலாவின் `குட்டி ஸ்டோரி'