கன்னியாகுமரி மாவட்டம், பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த பிரடி என்பவருக்கு சொந்தமான செயின்ட் ஆன்டனி என்ற விசைப்படகில் இரையுமன்துறையைச் சேர்ந்த கிளைமன்ஸ், கில்சரியான், ஹில்லாரி, பிரான்சிஸ், ஜான்சன், முத்தப்பன், பூத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மார்டின், மிக்கேல் அடிமை மற்றும் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் மூதகரையைச் சார்ந்த ஜலஸ்டின் ஆகிய 11 மீனவர்கள் கேரளா மாநிலம் கொல்லம் கடல் பகுதியில் 15.2.2012 அன்று மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த இத்தாலி நாட்டைச் சார்ந்த 'என்ரிகா லாக்ஸி' என்ற எண்ணெய் சரக்குக் கப்பலிலிருந்த இத்தாலி நாட்டுப் படை வீரர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டதில் அஜிஸ்பிங்க் மற்றும் ஜலஸ்டின் ஆகிய மீனவர்கள் கொல்லப்பட்டனர்.
உடனிருந்த மற்ற ஒன்பது மீனவர்களும் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்துக்குக் காரணமான இத்தாலி கப்பலின் மாலுமிகளான மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே ஆகிய இருவர் மீதும் கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம், நீண்டகரை கடலோர காவல் குழுமத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.கேரள கூடுதல் முதன்மைச் செயலாளரிடம் மனு
இது சம்பந்தமான வழக்கு எர்ணாகுளத்திலுள்ள கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்தது, பின்னர் இத்தாலி மேல்முறையீடு செய்ததால் உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்தநிலையில், இத்தாலி அரசு, நெதர்லாந்து நாட்டில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தை நாடி `இந்தத் துப்பாக்கிச்சூடு 22 கடல் மைல் தூரத்தில் நடந்திருக்கிறது; இந்திய கடல் எல்லை 21 கடல் மைல் மட்டுமே’ என்று வாதிட்டது. இந்திய அரசு, `200 கடல் மைல் வரை இந்தியாவின் சிறப்புப் பொருளாதார கடல்பகுதி. ஆகவே, இந்த வழக்கை விசாரிக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு’ என வாதிட்டது. சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு கடந்த 21.5.2020 அன்று வெளியானது. அதில் 200 நாட்டிக்கல் மைல் வரை இந்தியாவின் சிறப்புப் பொருளாதார கடல் பகுதி என சர்வதேச நீதிமன்றம் உறுதி செய்தது.
மேலும், `இந்தியக் கடலுக்குள் நுழைந்து, இந்திய மீனவர்களை துப்பாக்கியால் சுட்டது குற்றம்’ எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், `கொல்லப்பட்ட மீனவர்களுக்கும், காயம்பட்ட மீனவர்களுக்கும் உரிய இழப்பீட்டை இந்திய அரசு, இத்தாலி அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், ஒரு வருடத்துக்குள் இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடினால் இழப்பீட்டை இத்தாலி அரசிடமிருந்து பெற்றுக் கொடுக்கப்படும் அல்லது வழக்கு முடிந்ததாகக் கருதப்படும்’ என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து இத்தாலி அரசிடமிருந்து இந்திய அரசு 10 கோடி ரூபாயை இழப்பீடாகப் பெற்றிருக்கிறது.தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில்
இந்தநிலையில், தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் இத்தாலி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினர், கேரளா மீன்வளத்துறை அமைச்சர் மேர்சிகுட்டி அம்மா மற்றும் கேரளா கூடுதல் முதன்மைச் செயலாளர் டி.கே.ஜோஸ் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்திருக்கிறார்கள். அந்த மனுவில், `சர்வதேச தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தல்படி, இந்திய அரசு இத்தாலி அரசிடமிருந்து பத்து கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு என நஷ்டஈடாக வாங்கியது. அந்தப் பணத்தை இறந்த மீனவர்கள் இருவருக்கும் தலா 4 கோடி ரூபாய் வீதம் 8 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது. மீதமுள்ள 2 கோடி ரூபாயைப் படகு உரிமையாளருக்கும் வழங்கத் திட்டமிட்டிருக்கிறது. ஆனால், உடனிருந்த மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்காமல் இந்திய அரசு மீனவர்களைக் கைவிட்டுவிட்டது.
பிரடி-யின் விசைப்படகு மிகவும் பழைமையானது. அதன் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் மட்டும்தான் இருக்கும். துப்பாக்கிச்சூட்டில் விசைப்படகுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என சக மீனவர்கள் கூறியுள்ளனர். படகு உரிமையாளருக்கு ஏற்கெனவே 17 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. மீண்டும் படகு உரிமையாளருக்கு பணம் கொடுப்பதுடன், மற்ற மீனவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்காதது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, தமிழக மீனவர்களுக்கு உரிய நஷ்ட ஈடை இந்திய அரசு வழியாக கேரளா அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது. இது குறித்து கேரள மீன்வளத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதாக தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் தெரிவித்தார்.
http://dlvr.it/RqgzDn
Saturday, 16 January 2021
Home »
» துப்பாக்கிச்சூட்டில் இறந்த மீனவர்கள்; இத்தாலி வழங்கிய ரூ.10 கோடி! - இழப்பீடு பிரித்ததில் சிக்கல்?