கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். கேரளா ஃபேஷன் ஜுவல்லர்ஸின் உரிமையாளரான இவர் கேரள மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள பிற நகைக் கடைகளுக்கும் மொத்தமாக நகைகள் விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று காலை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்துவிட்டு ரூ.76.40 லட்சம் பணத்துடன் காரில் கேரளாவுக்குப் புறப்பட்டுள்ளார். தக்கலை அருகே உள்ள காரவிளை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருக்கும்போது மற்றொரு சொகுசு காரில் கேரளா போலீஸின் உடையணிந்து நின்ற இருவர் மற்றும் அவர்களுடன் சாதாரண உடையில் இருந்த இருவர் என நான்கு பேர் சம்பத்தின் காரை நிறுத்தியுள்ளனர். பின்னர் வாகன சோதனை செய்வதாகக் கூறி சம்பத்திடம் இருந்த 76 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள்
இதனால் அதிர்ச்சியடைந்த சம்பத், தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் வழிகாட்டுதல்படி நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் கேரள போலீஸ் உடையில் வந்தவர்கள் கொள்ளையர்கள் என தெரியவந்தது. இதையடுத்து தமிழக - கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் உள்ள சி.சி.டி.வி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் சொகுசு காரில் கேரள போலீஸ் உடை அணிந்த நபர்கள் பயணித்தது தெரியவந்தது.
இதையடுத்து திருவனந்தபுரம் சென்ற போலீஸார் கொள்ளையன் ஒருவரின் வீட்டுக்குச் சென்று அங்கு பதுங்கி இருந்த நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற பணம், போலீஸ் யூனிஃபார்ம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் சம்பத்தின் டிரைவரான கோபகுமார் கொடுத்த ஆலோசனையின்படி அவரது நண்பர்கள் சுரேஷ்குமார், கண்ணன், ராஜேஷ்குமார், மனு என்ற சஜின்குமார் ஆகியோர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஐந்து பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.பறிமுதல்செய்யப்பட்ட போலீஸ் உடைகள் மற்றும் பணம்
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் கூறுகையில்,``இந்த வழக்கில் பெரிய அளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும், அதுவும் போலீஸ் யூனிஃபார்மில் கொள்ளையடித்திருப்பதாலும் சீரியசாக விசாரணை நடத்தினோம். சி.சி.டி.வி கேமராதான் குற்றவாளிகளைப் பிடிக்க முக்கிய துருப்புச் சீட்டாக அமைந்தது. திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு குற்றவாளி வீட்டிலிருந்துதான் பணத்தைக் கைப்பற்றியிருக்கிறோம். பணத்துக்கு முறையாக வரி செலுத்தப்பட்டிருக்கிறதா என்பதுபற்றி ஐ.டி துறை முடிவு செய்யும்.
போலீஸார் எப்போதுமே பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு போகமாட்டார்கள். பணத்துடன் இருக்கும் உரிமையாளரையும் அழைத்துக்கொண்டுதான் காவல் நிலையத்துக்குச் செல்வார்கள். இதை பொதுமக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவம் நடந்தால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். மேலும், வாகன சோதனையின்போது பொதுமக்கள் எங்களுக்கு சப்போர்ட் பண்ண வேண்டும்.
Also Read: சென்னை: `உங்க வீட்ல துப்பாக்கி இருக்கறதா புகார் வந்திருக்கு!' - தொழிலதிபரை அதிரவைத்த கொள்ளை
இந்த சம்பவம் காலை 8 மணிக்கு நடந்தது. ஆனால் அவர்கள் காலை 11 மணிக்குத்தான் தகவல் கொடுத்தார்கள். அதனால்தான் கைது செய்ய 15 மணி நேரம் ஆனது. உடனே தகவல் கொடுத்திருந்தால் நாங்கள் சோதனைச் சாவடியிலேயே மடக்கிப் பிடித்திருப்போம். கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் 24 செக்போஸ்ட்டுகள் உள்ளன. அதில் 6 மெயின் செக்போஸ்ட்களில் சி.சி.டி.வி வைக்கப்பட்டுள்ளது. 24 செக்போஸ்டுகளும் அமைந்துள்ள 41 சாலைகளிலும் கண்காணிப்பு கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
http://dlvr.it/RqzCz2
Wednesday, 20 January 2021
Home »
» `கேரள போலீஸ் உடையில் ரூ.76 லட்சம் கொள்ளை; 15 மணி நேரத்தில் மீட்ட காவல் துறை’ - என்ன நடந்தது?