ராமர் பாலத்தின் தோற்றம், வயது குறித்து தொல்லியல் ஆய்வு நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. 48 கிலோமீட்டர் நீளம் கொண்ட சுண்ணாம்பு கற்களால் ஆன இந்த பாலம், பல மர்மங்களை தன்னுள் உள்ளடக்கியது. ராமர் பாலம் எப்படி உருவானது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன இலங்கை அரசன் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்கச் சென்றபோது கடலை கடந்து செல்வதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டது என்றும் ராமருக்காக வானர படையினர் அந்த பாலத்தை கட்டியதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ராமர் பாலத்தை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர். இந்துக்களின் அடையாளமாகவும், நம்பிக்கை சார்ந்த விஷயமாகவும் இருப்பதால் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராமர் பாலம் எப்போது உருவானது, எப்படி உருவானது என்பது குறித்த தொல்லியல் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் கீழ் உள்ள தொல்பொருளியல் தொடர்பான மத்திய ஆலோசனைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) மற்றும் தேசிய கடல்சார் நிறுவனம் (என்.ஐ.ஓ) ஆகிய இரு அமைப்புகளும் அறிவியல் ஆராய்ச்சிக்காக ராமர் சேது பாலத்தை ஆய்வு செய்ய அனுமதி கோரியதன் அடிப்படையில் தொல்லியல் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக கடல்சார் ஆய்வு நிறுவனத்தின் சிந்து சாதனா அல்லது சிந்து சங்கல்ப் ஆராய்ச்சிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நீருக்கடியில் வண்டல் மண் மாதிரிகள், பாலத்தில் உள்ள பழமையான கற்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து அவற்றின் வயதை ரேடியோமெட்ரிக் தொழில்நுட்ப முறையில் கணக்கிடப்பட உள்ளது இந்த ஆய்வு வெற்றியடைந்தால் ராமர் பாலம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://dlvr.it/RrJ0gK
Monday, 25 January 2021
Home »
» ராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது? - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்!