அமேஸான் நிறுவனத்தின் மொபைல் ஆப்பில் விருப்ப மொழியாக இந்தி, தமிழ், மலையாளம் போன்ற இந்திய மொழிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அதில் மராத்தி இடம் பெறவில்லை. எனவே, அமேஸான் மொபைல் ஆப்பில் மராத்தி இடம் பெற வேண்டும் என்று கூறி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா நிர்வாகி அகில் சித்ரே, அமேஸான் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதினார். ராஜ்தாக்கரே
அமேஸான் நிறுவனமும் இது குறித்து மும்பையிலுள்ள தங்களது அலுவலகத்தில்வைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கடந்த அக்டோபர் மாதம் பதில் கடிதம் அனுப்பியது. ஆனால், அதன் பிறகு இது குறித்து அமேஸான் கண்டுகொள்ளவே இல்லை. ராஜ்தாக்கரே கட்சியும் இது தொடர்பாக பலமுறை கடிதம் எழுதி, பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
ஆனால், அமேஸான் நிறுவனம் வேறு சட்ட வழிகளில் இறங்கியது. நவநிர்மாண் நிர்வாகிகளோ, கட்சித் தொண்டர்களோ மும்பையிலுள்ள தங்களது அலுவலகத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி ராஜ்தாக்கரே, அகில் ஆகியோர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ராஜ்தாக்கரே ஜனவரி 5-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதனால், `ராஜ்தாக்கரேவுக்கு அனுப்பப்பட்ட சம்மனைத் திரும்பப் பெற வேண்டும்’ என்றும், `மராத்தி மொழியை அமேஸான் ஆப்பில் சேர்க்க வேண்டும்’ என்றும் `இல்லையென்றால் மகாராஷ்டிராவில் அமேஸான் தொழில் செய்ய முடியாது’ என்றும் நவநிர்மாண் சேனா எச்சரிக்கை செய்தது. மேலும், நவநிர்மாண் சேனாவினர் மும்பை, புனே உட்பட மகாராஷ்டிரா முழுவதுமுள்ள அமேசான் குடோன்களில் புகுந்து டெலிவரி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பொருள்களை அடித்து உடைத்தனர்.
Also Read: `ரீடெயில் ராஜாவாகுமா ரிலையன்ஸ்?' ஃப்யூச்சர் டீலும், அமேசான் முட்டுக்கட்டையும்!
இதனால் இப்போது அமேஸான் இறங்கிவந்திருக்கிறது. ராஜ்தாக்கரே மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறப்போவதாக மும்பை சிவில் கோர்ட்டில் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறாது. இது குறித்து கருத்து தெரிவித்த ராஜ்தாக்கரே கட்சி வழக்கறிஞர் விஜய் தாக்குர், அமேஸான் நிறுவனத்தின் முடிவை ஏற்பது குறித்து வரும் 12-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். வழக்கைத் திரும்பப் பெற்றதோடு மட்டுமல்லாமல், மொபைல் ஆப்பில் மராத்தி மொழியைச் சேர்த்து ராஜ்தாக்கரே கட்சியின் கோரிக்கையையும் நிறைவேற்றியிருக்கிறது அமேஸான். 2022-ம் ஆண்டு மும்பை மாநகராட்சிக்குத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் ராஜ்தாக்கரே, மண்ணின் மைந்தர்கள் கோரிக்கையை கையில் எடுத்திருக்கிறார். தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்துவரும் நவநிர்மாண் சேனா கட்சிக்குப் புத்துயிர் ஊட்டும் வகையில் மராத்தி என்ற ஆயுதத்தைக் அக்கட்சி கையில் எடுத்திருக்கிறது.
http://dlvr.it/Rq1rTz
Wednesday, 6 January 2021
Home »
» மராத்தி மொழி பிரச்னை; ராஜ் தாக்கரேவுக்கு எதிரான வழக்கு வாபஸ்! இறங்கிவந்த அமேஸான்