`படிக்காதவன்' திரைப்படம் முதல் எத்தனையோ அண்ணன், தம்பி பாசக் கதைகளை பார்த்திருக்கிறோம். அண்ணன்கள் தாயாகி தம்பிகளை தாங்க நினைத்தாலும், வாழ்க்கை அவர்களை வேறு திசையில் விரட்டும் துன்பம், திரையில் மட்டுமல்ல பலர் வாழ்விலும் நடக்கிறதுதான். `அவன் அப்படி தவிக்குறத பார்த்து மனசு கெடந்து துடிக்குதுதான், ஆனாலும் என்னால இதுக்கு மேல ஒரு உதவியும் செய்ய முடியலையே' என்ற கையறு நிலையில் தங்கள் பாசத்தை கட்டுப்படுத்திக்கொள்ளும் நிலை பல அண்ணன்களுக்கும் ஏற்படுகிறது.
ஆனால் விபினின் பாசப் போராட்டம் இந்த விதியை உடைத்துப் பாயும் அன்பு வெள்ளம். `என்ன ஆனாலும் அவன் என் தம்பி' என, 14 ஆண்டுகளாகப் படுக்கையில் இருக்கும் தம் தம்பிக்காக விபின் இழந்திருப்பது நிறைய நிறைய.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலையில் வாடகை வீட்டில், தன் மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் விபின். படுத்த படுக்கையாக வென்டிலேட்டர் உதவியால் வாழ்ந்துகொண்டிருக்கும் 33 வயது ஆன தன் தம்பி லிஜோவையும் குழந்தைபோல பராமரித்து பாதுகாத்து வருகிறார்.
லிஜோவுக்கு என்ன ஆனது? விபினிடம் பேசினோம். ``14 வருஷத்துக்கு முன்னாடி லிஜோவுக்கு 19 வயது. பி.டெக் படிக்க கல்லூரிக்குப் போகத் தயாராகி வந்தார். அன்னைக்கு அவருக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் வந்தது. உடனே மருத்துவமனையில சேர்த்தோம். சிகிச்சை அளித்தாங்க. ஆனால், அவனது உடல் செயல் இழந்துவிட்டது. பேச மட்டுமே முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எப்படியாவது தம்பியை பழைய நிலைக்குக் கொண்டு வந்திரலாம்ங்கிற ஆசையில திருவனந்தபுரம் ஸ்ரீ சித்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில சேர்த்தோம். அங்கேயே ஒன்றரை வருஷம் தங்கியிருந்து லிஜோவுக்கு சிகிச்சை எடுத்தோம். ஆனாலும், உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.தம்பி லிஜோவை அருகில் இருந்து கவனிக்கும் விபின்
சிகிச்சைக்காக பல லட்சம் ரூபாய் செலவு ஆச்சு. பாறசாலையில இருந்து திருவனந்தபுரம் போறது ரொம்ப கஷ்டமா இருந்ததுனால லிஜோவை, பக்கத்தில காரக்கோணத்தில் ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றினோம். அங்க ஐ.சி.யு-வில வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு மூன்றரை ஆண்டுகள் சிகிச்சை கொடுத்தாங்க. பணம் செலவு ஆனதே தவிர லிஜோவுக்கு உடல் நலத்தில எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சிகிச்சை செலவுக்கு என்கிட்டயிருந்த பணத்தை எல்லாம் கணக்குப் பார்க்காமல் கட்டிக்கிட்டிருந்தேன். அந்த நேரத்துல தம்பி லிஜோ என்கிட்ட, `நம்ம சொத்துகளை விற்றாவது என்னை காப்பாத்து அண்ணா. என்ன கைவிட்டுராத'ன்னு சொன்னான். என் தம்பியை நான் எப்படிக் கைவிடுவேன்? என் உயிர் உள்ளவரை தம்பியைப் பாதுகாப்பேன்னு அப்பவே நான் முடிவு செய்தேன். `நான் உன்னை பார்த்துக்குவேன், நீ தைரியமா இரு தம்பி'னு சொன்னேன்.
என் தம்பிக்கு வென்டிலேட்டர், மருத்துவ செலவுன்னு பணம் அதிகமா செலவு செய்ய வேண்டிய நிலை. அதுக்காக என் வீடு, சொத்து எல்லாத்தையும் வித்துட்டேன். எட்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க அம்மா, அப்பாவும் இறந்துட்டாங்க. அதுக்குப் பிறகு வாடகை வீட்டுல என் தம்பியை வெச்சு பாதுகாத்துட்டு வர்றேன். பலர்கிட்ட கடன் வாங்கித்தான் தம்பிக்காக வீட்டிலேயே வென்டிலேட்டர் கருவி பொருத்தினேன்.லிஜோ
பகல்ல பெரும்பாலும் நான் பக்கத்திலேயே இருக்கிறதால என்ன தேவைன்னாலும் என் தம்பி கேட்பான். ராத்திரி நேரத்தில நான் அசதியில தூங்கிட்டேன்னா, அந்த நேரம் தம்பிக்கு ஏதாவது அவசர உதவி தேவைப்படலாம். அதனால், மைக் செட் வைத்து வீட்ல ஆங்காங்கே ஸ்பீக்கர் பொருத்தி வெச்சிருக்கேன். அவனுக்கு ஏதாவது தேவைன்னா மைக்ல குரல் கொடுப்பான். உடனே நான் போய் உதவி செய்வேன்.
லிஜோவுக்குப் பக்கத்துல எப்பவும் ஒருத்தர் இருந்து கண்காணிக்கணும். நான்தான் பக்கத்துல இருந்து கண்காணிக்கிறேன். அதுக்காக, தனியார் கம்பெனியில பார்த்த வேலையையும் விட்டுட்டேன். பிசினஸ் பண்ணிக்கிட்டிருந்த நண்பர், என் நிலைமையை புரிஞ்சுக்கிட்டு சில சலுகைகளுடன் அவரோட அலுவலகத்தில் எனக்கு வேலை கொடுத்தார். தம்பிக்கான பணிவிடைகளை செஞ்சுட்டு, பக்கத்துல இருக்குற அந்த ஆபீஸூக்கு போயிட்டு வர்ற மாதிரி வேலைகொடுத்து உதவினார். ஆனா கொரோனாவால அவர் தொழில் முடங்க, எனக்கும் வேலையில்லாம போயிடுச்சு.
இப்ப வாடகைக்கு இருக்கும் வீட்டுக்கு, ஒரு வருஷமா வாடகை கொடுக்க முடியல. தம்பியைக் கவனிக்குறதுக்காக வாங்குன கடன் தலைக்கு மேல போயிடுச்சு. 20 லட்சம் ரூபாய். கடன் தொல்லையைத் தாங்க முடியாம என் மனைவிக்கு மன உளைச்சல் ஏற்பட்டு மன நோயாளியாவே மாறிட்டாங்க. இப்போ சிகிச்சை எடுத்துட்டு இருக்காங்க. எங்க பிள்ளைங்க ட்வின்ஸ். பள்ளியில் படிக்கிற மகனுக்கும் மகளுக்கும் பீஸ் கட்ட முடியல" என்றவரின் கண்கள் குளமாயின.தம்பிக்கு அருகில் இருக்கும் விபின்
லிஜோவுக்கு விபினைத் தவிர, மேலும் ஒரு சகோதரனும், இரண்டு சகோதரிகளும் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் இங்கு வருவது இல்லையாம். வென்டிலேட்டர் கருவி 24 மணி நேரமும் செயல்படுவதற்காக வீட்டில் இன்வெர்ட்டர் வைத்திருக்கிறார் விபின். ஒரு மாத மின் கட்டணம் குறைந்தபட்சம் 6,000 ரூபாய் வரை ஆகிறதாம். லிஜோவின் நிலையை மின்சார வாரியத்துக்குத் தெரிவித்த சில சமூக ஆர்வலர்கள் பணம் கட்ட தாமதம் ஆனாலும் மின் இணைப்பை துண்டிக்காமல் இருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்கள். சில நேரம் மின் வெட்டு ஏற்பட்டால் இன்வெர்ட்டர் மூலம் வென்டிலேட்டர் இயங்கும். ஆனால், ஒரு நாள் முழுவதும் பவர் கட்டானால் இன்வெர்ட்டர் தாக்குப்பிடிக்காது என்பதால், அன்றைய தினம் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து வென்டிலேட்டரை இயங்க வைக்கிறார் அண்ணன் விபின்.
விபின் பற்றி மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு சமீபத்தில் தெரியவர, குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கவும், மின்சார வாரியம் இவர்கள் வீட்டுக்கான மின் கட்டணத்துக்கு விலக்கு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுத்திருக்கிறார்.
கொரோனா வேலையின்மை காரணமாக உணவுக்குக்கூட வழி இல்லாத நிலை விபின் குடும்பத்துக்கு இப்போது. அக்கம், பக்கம் தெருவில் உள்ளவர்கள் அந்தக் குடும்பத்துக்கு காலை உணவு அளிக்கிறார்கள். `அம்மா உணவகம்'போல கேரளாவில் செயல்படும் `ஜனகீய ஹோட்டல்' அரசுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மதிய உணவை பெற்றுக்கொள்கிறது விபினின் குடும்பம். இரவு உணவுக்கு சில சமூக ஆர்வலர்கள் உதவுகிறார்கள். விபினுக்கு அரசோ, தொண்டு உள்ளம் கொண்டவர்களோ உதவி செய்ய வேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீஜேஸ் என்பவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
விபினின் நண்பர்கள், ``என்னதான் தம்பினாலும், மனைவி, பிள்ளைங்களையும் அவர் பார்க்கணும்லனு சிலருக்குத் தோணலாம். ஆனா, விபினோட இடத்துல இருந்து பார்க்குறவங்களுக்குத்தான் அவரோட போராட்டம் தெரியும். வேற ஏதாச்சும் பிரச்னைனாகூட, ஒரு விடுதி, இல்லம்னு சேர்த்துவிட்டுட்டு இவர் தன்னோட குடும்பத்தைப் பார்க்கலாம். ஆனா, 24 மணி நேரமும் வென்ட்டிலேட்டர் ஓட வேண்டிய தம்பியை எங்க போய் அவர் ஒப்படைப்பார்? வீட்டுல வெச்சு பார்க்கும்போதே, `பவர் கட், வென்ட்டிலேட்டர் பிரச்னைனு ஏதாச்சும் விபரீதம் நடந்து, என் தம்பிக்கு ஏதாச்சும் ஆகிடுச்சுன்னா' பரிதவிக்கிறவர் விபின். பாவம், ஒரு பக்கம் தம்பியையும் விட முடியாம, இன்னொரு பக்கம் தன் குடும்பத்தையும் பார்க்கமுடியாம அவர் படுற கஷ்டங்களை வார்த்தைகள்ல சொல்ல முடியாது'' என்றனர் வருத்தத்துடன். தம்பி லிஜோவை அருகில் இருந்து கவனிக்கும் விபின்
``தம்பியோட வென்ட்டிலேட்டர் கருவியில அப்பப்போ ஏதாவது பிரச்னை ஏற்படுது. அதை சரிசெய்ற அவகாசம் வரைக்கும் மருத்துவமனையில அவனைச் சேர்க்க வேண்டியிருக்கு. அதனால, தம்பிக்கு ஒரு புது வென்ட்டிலெட்டர் கிடைச்சா, மாற்றி மாற்றி பயன்படுத்த வசதியா இருக்கும்'' - இப்போதும்கூட தம்பியைத் தாண்டி வேறு எந்த உதவியும் கேட்கத் தோணவில்லை விபினுக்கு.
சொத்துக்காக உடன் பிறந்தோரை கொலை செய்யத் துணியும் இந்தச் சமூகத்தில், தம்பியின் உயிரை காக்க 14 ஆண்டுகளாகப் போராடும் இந்த அண்ணனின் தாயுள்ளத்துக்கு இணையேது.
விபினின் நெடுங்கால போராட்டத்துக்கு ஆசுவாசம் அளிக்கும் விதமான உதவிகள் ஏதேனும் கிடைக்குமா என்று எதிர்பார்த்திருக்கிறார்கள் அவரை சுற்றியிருப்பவர்கள்.
Note
தினந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் லிஜோ - விபினுக்கு உதவ முன்வரும் வாசகர்கள், `help@vikatan.com' என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். விபின் குறித்த தகவல்கள் உங்களுக்கு உடனடியாகத் தரப்படும். உங்கள் உதவியை விபினுக்கு கொண்டு சேர்க்கும் பணியை விகடன் ஒருங்கிணைக்கும்.
http://dlvr.it/RsB6kJ
Sunday, 7 February 2021
Home »
» கேரளா: தம்பி 14 ஆண்டுகள் படுக்கையில்; சொத்தையெல்லாம் விற்று சிகிச்சை... அண்ணனின் பாசப்போராட்டம்!