பார்வையாளர்களை கவரும் விதமாக வீடியோக்களை தயாரித்து அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை யூடியூப் நிறுவனம், பதிவேற்றுபவர்களுடன் பகிர்ந்த் கொள்கிறது. வீடியோ ரீச் பொறுத்து பணம் கிடைக்கும். பெண்களும் அதிகளவில் யூடியூப் சேனல் ஆரம்பித்து தங்களின் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து, அதனை பதிவேற்றி சம்பாதிக்கின்றனர். சிலர் இந்த யூடியூப் சேனலை தவறான வழிகளில் பயன்படுத்துகின்றனர்.
கொரோனா காலத்தில் வருமானம் இழந்த பலர் என்னென்னவோ தொழில் செய்து சம்பாதித்தனர். இதில் 3 இளைஞர்கள் சேர்ந்து யூடியூப்பை தவறாக பயன்படுத்தி கோடிகளில் சம்பாதித்துள்ளனர். மும்பையை சேர்ந்த 3 பேர், பொது இடங்களில் தனியாக வரும் இளம்பெண்களிடம் ஆபாசமாக அத்துமீறுவதுடன், அதனை தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்து, ஆபாசமாக பேசி யூடியூப்பில் பதிவேற்றம் செய்து சம்பாதித்து வந்துள்ளனர். கொரோனா காலத்தில் வேலை இல்லாத காரணத்தால் முகேஷ் குப்தா என்ற வாலிபர் தனது நண்பர்கள் ஜிதேந்திர குப்தா, குமார் ஆகியோரை சேர்த்துக்கொண்டு இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளார்.சித்தரிப்பு படம்
பாந்த்ரா, ஜுகு, அக்ஷா பீச், மெரைன் லைன் மற்றும் முக்கிய கார்டன்களில் இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளது. தனியாக வரும் பெண்களிடம் திடீரென அத்துமீறுவர். அதனை ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருப்பார். அப்போது எதாவது பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தால், யூடியூப்பில் போடுவதற்காகவும் பொழுதுபோக்கு நோக்கத்தில் இந்த வீடியோ எடுக்கப்படுவதாக சொல்லி சமாளித்து விடுவர்.
அதோடு தனியாக வரும் பெண்களிடம் நயமாக பேசி யூடியூப் சேனலுக்கு நடித்துக் கொடுத்தால் எதிர்காலத்தில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை தெரிவிப்பர். அவர்களின் வலையில் விழும் பெண்களிடம் அத்துமீறுவதுடன் ஆபாசமாக பேசி அதனை அப்படியே யூடியூப் சேனல் மற்றும் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துவிடுவர். 7 முதல் 8 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோக்களுக்கு பெண்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை பணமும் கொடுத்துள்ளனர். இதன் மூலம் முகேஷ் குப்தா 2 கோடி வரை சம்பாதித்துள்ளார். மொத்தம் 300 வீடியோக்களை பதிவேற்றம் செய்து இருக்கிறார்கள்.
இந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்ய 17 யூடியூப் சேனல்கள் மற்றும் பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி இருக்கின்றனர். அவர்களின் யூடியூப் சேனல்களை 15 கோடி பேர் பார்த்துள்ளனர். அதோடு வீடியோ எடுப்பதாக ஆசை வார்த்தை கூறி மானபங்கம் செய்ததாக மைனர் பெண் ஒருவர் உட்பட 5 பெண்கள் மூன்று பேருக்கும் எதிராக போலீஸில் புகார் செய்தனர். ஆபாசம் மற்றும் ஆபாசமான வார்த்தைகள் கொண்டு வீடியோக்களை எடுத்து பதிவேற்றம் செய்துள்ளனர். யூடியூப்
போலீஸாரின் சைபர் பிரிவு உடனே விசாரணையில் இறங்கினர். இதில் முகேஷ்குப்தாவும் அவரது இரண்டு கூட்டாளிகளும் பிடிபட்டுள்ளனர். குப்தா தானேயில் வசிக்கிறார். அவர்களின் கூட்டாள்கள் இரண்டு பேரும் கல்லூரியில் படித்துவிட்டு குராரில் தங்கி இருக்கின்றனர். குப்தா இது போன்ற காரியத்தில் ஈடுபட்டு இருப்பது அவரது வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை.
குப்தா சொந்தமாக டியூசன் சென்டர் ஒன்றை நடத்தி வந்தார். அதில் 300 பேர் படித்து வந்தனர். அவரது டியூசனில் படித்த மாணவிகளையும் வீடியோ எடுக்க பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் டியூசன் சென்டரை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. யூடியூப் வருமானத்தின் அனைத்து பகுதியும் குப்தாவிற்கு சென்றுள்ளது.
போலீஸார் முகேஷ் குப்தா மற்றும் அவரது கூட்டாளிகள் ஜிதேந்திர குப்தா மற்றும் குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 5 லேப்டாப், மொபைல் போன்கள் மற்றும் கேமரா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் யூடியூப் சேனல்களை முடக்க போலீஸார் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளனர். முகேஷ் குப்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 10வது வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Rtg9BB
Sunday, 28 February 2021
Home »
» மகாராஷ்டிரா: பொது இடங்களில் பெண்களிடம் அத்துமீறல்; யூடியூபில் ஆபாச வீடியோ! - சிக்கிய 3 பேர்