கேரளாவில் அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவப்பு காது ஆமை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதனை மீண்டும் நீர் நிலைகளில் விட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் கேரள வன ஆராய்ச்சி நிறுவன அதிகாரி ஒருவர்.
சில நாட்களுக்கு முன் கேரளாவின் களத்தோடைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் அங்குள்ள நீர் நிலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு நடுத்தர அளவிலான சிவப்பு காது ஆமை (Red-eared slider turtle) ஒன்று கிடைத்துள்ளது. அதனை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்ததைப் பார்த்த கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சந்தீப் தாஸ், அந்த ஆமையை மீண்டும் நீர் நிலைகளில் விட வேண்டாம் என எச்சரித்துள்ளார்.சிவப்புக் காது ஆமை
அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த சிவப்புக் காது ஆமைகளின் அறிவியல் பெயர் Trachemys Scripta Elegans. இந்த ஆமைகள், செல்லப்பிராணி பிரியர்களிடையே மிகவும் பிரபலம், குறிப்பாகச் சிறுவர்களிடத்தில். அதற்குக் காரணம், இதன் வண்ணமும், இதன் சிறிய தோற்றமும். ஆனால், இந்த ஆமைகள் நம் நாட்டின் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்காது. இவற்றால் இந்தியைவைப் வாழ்விடமாகக் கொண்ட உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும். குறிப்பாக இந்தியாவை வாழ்விடமாகக் கொண்ட ஆமைகளுக்கு.
Also Read: Solarwinds attack... அமெரிக்காவை அதிர வைத்த சைபர் தாக்குதல், பின்னணியில் ரஷ்யாவா?
இந்த ஆமைகள், விரைவில் முதிர்வடையும் தன்மையுடையவை. அளவில் சிறியதாக இருந்தாலும், வேகமாக வளரும். இனப்பெருக்கமும் அதிகம். முரட்டுத்தனமானவையும் கூட. இவை அதிக அளவில் பெருக்கம் அடைந்தால், இந்தியாவைச் சேர்ந்த ஆமைகளின் வாழ்விடம், இனப்பெருக்க சூழ்நிலை மற்றும் உணவு ஆகியவற்றை இந்த ஆமைகள் அபகரித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். அது இந்திய உயிர்களின் சுற்றுச்சூழலை பாதிக்கும்.Red-eared slider turtle
இந்த ஆமைகள் இந்தியாவிற்குள் கொண்டு வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்த ஆமைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், செல்லப்பிராணி பிரியர்கள் இதனை அதிக அளவில் வாங்குவதால் இவை சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுகின்றன. இதனை வாங்குவோர், குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் இவற்றை இயற்கை நீர் நிலைகளில் விட்டுச் செல்கின்றனர்.
இவற்றைக் கண்டறிபவர்கள் அங்கிருக்கும் வன உயிரின சரணாலயத்தில் அவற்றை ஒப்படைக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரும் போது கைப்பற்றப்பட்ட ஆமைகள் வண்டலூர் பூங்காவில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. தற்போது வண்டலூர் பூங்காவில் இருபதுக்கும் மேற்பட்ட சிவப்பு காது ஆமைகள் உள்ளன.
http://dlvr.it/RtCXBr
Monday, 22 February 2021
Home »
» கேரளாவில் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்காவின் சிவப்பு ஆமை... இந்திய சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?