மும்பையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை ஒரு கும்பல் மிரட்டி பணம் பறித்து வருவதாக போலீஸாருக்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணியில் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்கள் போன்ற முக்கிய பிரமுகர்களை சிக்கவைத்து ஆபாச படம் எடுத்து, அதன் மூலம் பிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். இம்மோசடி தொடர்பாக ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்
இக்கும்பலிடம் விசாரித்த போது அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. இக்கும்பல் முதலில் பெண்கள் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலி ஐடியை உருவாக்குவது வழக்கம். அதன் பிறகு பார்க்க மிகவும் அழகாக இருக்கும் பெண்களின் படத்தை அதில் பதிவேற்றம் செய்வர். அதனை தொடர்ந்து யாரை மிரட்டி பணம் பறிக்கவேண்டும் என்பது குறித்து முடிவு செய்து கொண்டு, அந்த நபருக்கு சமூக வலைத்தளத்தில் பிரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்புவர். அந்த நபர் ஏற்றுக்கொண்டால், அவரிடம் பெண் போன்றே சாட்டிங் செய்வது வழக்கம்.
சில நாள்கள் கழித்து ஆபாசமாக சாட்டிங் செய்யத் தொடங்குவர். இதிலும், குறிப்பிட்ட நபர் சிக்கிக்கொண்டால் உடனே இந்த கும்பல் அடுத்த அஸ்திரத்தை எடுப்பது வழக்கம். அதாவது வீடியோ காலில் வந்து ஆபாச வீடியோவை காட்டுவர். அதனை பார்க்கும் நபர் ஆபாச படத்தை பார்த்துவிட்டு ஏதாவது ஆபாச செயலில் ஈடுபட்டால், உடனே அதனை வீடியோவாக பதிவு செய்துகொள்வது வழக்கம். வீடியோவாக பதிவு செய்தவற்றை எடிட்டிங் செய்து மீண்டும் சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி, சிறிய தொகையைக் கூறி அதனை கொடுக்கவேண்டும் என்றும் அப்படி கொடுக்கவில்லையெனில் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டுவர்.
அப்படி மிரட்டியதும் வீடியோவில் இருக்கும் நபர் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டால், உடனே அந்த நபரிடம் அடுத்தடுத்து பணம் கேட்டு மிரட்டுவது இந்த கும்பலின் வழக்கம். இதில் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்து போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் நடத்திய விசாரணயில் மேற்கண்ட தகவல்கள் கிடைத்தது. இது குறித்து போலீஸ் இணை கமிஷனர் மிலிந்த் கூறுகையில், ``முக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் பறிக்க பயன்படுத்தப்பட்ட 175 ஃபேஸ்புக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. இது தவிர பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் வாங்க பயன்படுத்தப்பட்ட 58 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார். இந்த மோசடியில் மேலும் எத்தனை பேருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Also Read: மும்பை விடுதி அறையில் சடலமாகக் கிடந்த எம்.பி! - கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸ்
இதற்கிடையே இதே போன்ற முறையை பயன்படுத்தி மும்பை தொழிலதிபரிடம் ரூ.50,000 மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் போன்றே ஃபேஸ்புக்கில் தெற்கு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ஆக்ராவை சேர்ந்த அனுப்சிங் (23) என்ற நபர் ஃபிரண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பியிருக்கிறார். தொழிலதிபர் அதை ஏற்றவுடன் சில நாள்களுக்கு மேற்கண்ட அதே முறையில் தொழிலதிபரிடம் ரூ.50,000 மிரட்டி பணம் பறிக்க முயன்றார் அனுப். ஆரம்பத்தில் தொழிலதிபர் 5,000 ரூபாயை மட்டும் ஆன்லைனில் அனுப்பிவிட்டு தன்னிடம் பணம் இல்லை என்றும் பாக்கியை தவணை முறையில் அனுப்புவதாக தொழிலதிபர் தெரிவித்தார். அனுப் அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால், தொழிலதிபர் இது குறித்து பின்னர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரணை நடத்தி அனுப்பை ஆக்ராவில் கைது செய்தனர்.
http://dlvr.it/RtHXZT
Tuesday, 23 February 2021
Home »
» மும்பை: ஃபேஸ்புக் நட்பு; ஆபாச வீடியோ! - எம்.பி, எம்.எல்.ஏ-க்களை மிரட்டி பணம் பறித்த கும்பல்