படத்தில் வா மின்னல் என்று வருவதுபோல் முதலமைச்சர் மின்னல் வேகத்தில் வேலை செய்து வருகிறார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது... “அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 30 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கடைகோடி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற அம்மாவின் கனவை நிறைவேற்றி உள்ளோம். தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் 110 விதியின் கீழ் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி காட்டினார். ஆனால் திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் மன்றத்தை புறக்கணித்து சென்றனர். விவசாயிகளின் நலன் காக்க 16 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 12 ஆயிரத்து 110 கோடி மதிப்பில் பயிர்க் காப்பீடு கடனை ரத்து செய்தார். மின்னல் வேகத்தில் அரசு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்றால் அது எடப்பாடியால் தான் முடியும் என்றார். நீர் மேலாண்மையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டி உள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டத்தை தற்போது மக்கள் மத்தியில் கொண்டு வந்து செயல்படுத்தியவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கொரோனா காலத்தில் 38 வருவாய் மாவட்டங்களிலும் எனது உயிரை விட மக்கள் நலனே முக்கியம் என அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் கோட்டையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தார். மக்கள் குறை தீர்க்கும் முகாம் என்ற போர்வையில் பெட்டிக்குள், பெட்டி வைத்து பூட்டு போட்டு அதனை அறிவாலயத்தில் கொண்டுபோய் வைப்பார்களாம். அப்படி என்றால் அறிவாலயத்தில் இருக்கக்கூடியவர்கள் மீது நம்பிக்கை இல்லையா எதற்காகப் பூட்டு போடுகிறார்கள்" எனக் கேள்வி எழுப்பியவர் தொடர்ந்து... ராமநாதபுரம் மாவட்டத்தில் 5098 பயனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து துறைகளின் வாயிலாக 30 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என்று பேசினார்.
http://dlvr.it/Rt8Z1W
Sunday, 21 February 2021
Home »
» மின்னல் வேகத்தில் செயல்படுகிறார் முதல்வர் பழனிசாமி - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்