சக்கர நாற்காலி கருத்து குறித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தாம்பரத்தில் சில நாட்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில், ஆரோக்கியமாக இருக்கும் போதே மக்கள் பணியாற்ற விரும்புவதாகவும், சக்கர நாற்காலியில் வந்து யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றும் கமல்ஹாசன் பேசியிருந்தார். இந்த பேச்சு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முதுமையை கேலி செய்வதாக இருப்பதாகவும், கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன. இதற்கு விளக்கமளித்துள்ள அவர், தன்னுடைய முதுமையைப் பற்றி மட்டுமே பேசியதாகவும், கருணாநிதி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “யார் கோபப்பட்டாலும் அவர்கள் வயதில் சிறியவராகவும், அனுபவத்தில் சிறியவராகவும், அறிவில் சிறியவராகவும் இருப்பார்கள் என்று கருதுகிறேன். கருணாநிதி மீது எனக்கு இருக்கும் மரியாதை அதிகம். கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் நான் சொன்னதின் உள்ளர்த்தம் அவருக்கு புரிந்திருக்கும். சக்கர நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தபோது அதை பிடித்து தள்ளிக்கொண்டு வந்தவர்களில் நானும் ஒருவன். வயோதிகத்தையும் சக்கர நாற்காலியையும் கேலி செய்யும் விதமாக நான் பேசும் வாய்ப்பே கிடையாது. நான் என்னுடைய முதுமையை பற்றியும், நான் என்ன செய்வேன், செய்ய மாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்” எனத் தெரிவித்தார்.
http://dlvr.it/RtcLlC
Saturday, 27 February 2021
Home »
» “கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்