இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை 17 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒன்றரை லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 385 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. பிப்ரவரி 5ஆம் தேதி ஒன்றரை லட்சமாக இருந்த கொரோனா தொற்றுகள் பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து தற்போது ஒன்றரை லட்சம் என்ற எண்ணிக்கையை மீண்டும் கடந்துள்ளது. அண்டை மாநிலங்களான கேரளாவிலும் மகாராஷ்டிராவிலும் தொற்றுகள் உயர்வதை அடுத்து உஷாராகியுள்ள கர்நாடக மாநிலம் அம்மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தொற்று பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ளது. இதனால் மகாராஷ்ட்ரா, கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்குள் நுழைய நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துள்ளன. மகாராஷ்ட்ர மாநிலத்திலும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசும் கொரோனா தடுப்பு பணிகளை மீண்டும் தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி பணிகள் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு நடத்தினார். இக்கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தடுப்பூசி போடும் பணி தொடங்கி 38 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ஒரு கோடியே 14 லட்சம் பேர் ஊசி போட்டுக்கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/RtHXg3
Tuesday, 23 February 2021
Home »
» இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு..