கொரோனா வைரஸ் தொற்று சீனாவிலிருந்து பரவியதாக உலக நாடுகள் அனைத்தும் குற்றம் சாட்டிய நிலையில், கொரோனா வைரஸ் பரவலைச் சீனா கையாண்ட விதம் குறித்தும், சீன அதிபர் ஜின்பிங் குறித்தும் ஆட்சேபனைக்குரிய விதத்தில் செய்தி வெளியிட்டதாகக் கூறி பிபிசி வேர்ல்டு நியூஸ் (BBC WORLD NEWS) எனப்படும் பிபிசி'யின் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குச் சீனா தடை விதித்துள்ளது.
சீனாவின் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு ஆணையமான என்.ஆர்.டி.ஏ (NRTA - National Radio and Television Administration) பிபிசி வேர்ல்டு நியூஸ்'க்கு தடை விதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில், பிபிசி வேர்ல்டு நியூஸ் சேனலில் ஒளிபரப்பு செய்த சீனா தொடர்பான செய்திகள் உண்மைக்குப் புறம்பாக, உகந்த முறையில் இல்லை என்றும் செய்திகள் அனைத்தும் விதிமுறைகளைத் தீவிரமாக மீறப்பட்டுள்ளது என்றும், இத்தகைய செயல் சீனாவின் தேசிய எண்ணங்களைக் காயப்படுத்தியதுடன், தேசிய ஒற்றுமையை குறை மதிப்பிற்குத் தள்ளியுள்ளது. எனவே, சீனாவில் ஒளிபரப்பு செய்யும் வெளிநாட்டு சேனல்களின் தேவையை பிபிசி இழந்துவிட்டது. இனி ஒரு வருடத்திற்கு அதன் விண்ணப்பத்தையும் சீனா ஏற்காது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 4-ம் தேதியன்று பிரிட்டன் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சீனாவின் அரசு தொலைக்காட்சியான CGTN-ன் உரிமத்தை ரத்து செய்தனர். இந்த சேனலுக்கான உரிமத்தை ஸ்டார் சீனா மீடியா லிமிடட் (Star China Media Ltd) நிறுவனம் முறையற்ற வகையில் பெற்றதாகக் கூறப்பட்டது. அச்செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா இந்த நடவடிக்கையை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
பிபிசி மீதான குற்றச்சாட்டுகள்:
சீனா பிபிசி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.
சீனா அரசுக்குச் சொந்தமான CGTN இணையதளத்தில் “BBC World News is Ousted! Why?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்துள்ளது.
அதில் சீனாவின் ஷின்ஜியாங் பகுதி குறித்து தவறான கட்டுரைகளை வெளியிட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் பரவலில் சீனாவைத் தவறாக பிபிசி சித்தரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா விவகாரங்களை எப்போதும் ஒருபக்கச் சார்புடன் பிபிசி அணுகி உள்ளதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறான செய்திகளைப் பரப்பியதற்காகச் சீனா வெளியுறவுத் துறை பிபிசியை மன்னிப்பு கேட்கக் கோரியது. ஆனால், பிபிசி மறுத்துவிட்டது.
நாங்கள் எந்தப் பக்கச் சார்பும் இல்லாமல் நடுநிலையுடன் செய்திகளை வழங்குவதாக பிபிசி கூறி இருக்கிறது.
இதனை மேற்கோள் காட்டி, “பிபிசி பிரித்தானிய மனோபாவத்துடன், அதாவது ஏகாதிபத்திய மனோபாவத்துடன் இயங்குகிறது. அதற்கு சீனாவின் கலாசார மதிப்பீடுகள், விழுமியங்கள் குறித்து எந்த புரிதலும் இல்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உய்குர் முஸ்லீம் பிரச்னையும்,பிபிசியும்...!
சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் உள்ள உய்குர் முஸ்லிம்களை அந்நாடு நடத்தும் விதம் குறித்து சர்வதேச அளவில் பல கண்டனங்கள் எழுந்துவந்த நிலையில் தற்போது உய்குர் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து பிபிசி ஒளிபரப்பிய செய்தி ஒன்றால் அந்த ஊடகம் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு பிபிசி குறிப்பிட்ட அந்த செய்தி விதிகளை மீறியுள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது. மேலும் சீனாவின் தேசிய நலனையும், ஒற்றுமையையும் அது குலைப்பதாகவும் உள்ளது எனவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு ஊடகங்களுக்கான நடைமுறைகளில் பிபிசி பொருந்தவில்லை என்றும், அடுத்த ஒரு வருடத்திற்கும் அதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிபிசியும் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
``பிபிசி, ஒரு நம்பகத்தன்மை வாய்ந்து சர்வதேச செய்தி ஊடகம். சீன அதிகாரிகளின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. உலகமுழுவதும் பிபிசி தரும் செய்திகள், எந்த சார்பும் அற்று, எதற்கும் அஞ்சாமல் பிரசுரிக்கப்படும் செய்திகள்” எனத் தெரிவித்துள்ளது. சீனாவில் நடைபெறும் இந்த உய்குர் முஸ்லிம்கள் பிரச்னை என்பது நீண்டகாலமாக நடந்து கொண்டிருக்கும் ஒன்று. சீனா தனது நிலப்பரப்பிலிருந்து இந்த உய்குர் இன மக்களை ஒழித்துக் கட்ட வேண்டும் எனப் பல மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனச் சர்வதேச அளவில் தொடர் கண்டனங்கள் எழுந்த நிலையில் உள்ளன.
ஆனால் சீனா இதைப் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை என்று கூறி வருகிறது.முதலில் இந்த உய்குர் முஸ்லிம்கள் யார் என்று பார்ப்போம்!
சீனாவின் ஷின்ஜியாங் உய்குர் தன்னிலை பிராந்தியத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களுக்கென்று தனி மொழி உள்ளது. இவர்களின் கலாசாரம் மற்றும் இன ரீதியான பழக்கங்கள் மத்திய ஆசிய நாடுகளை ஒத்ததாக இருக்கும். சீனா, கிரீஸ், பெர்சியா மற்றும் அரேபியாவின் சாரம்சங்களைக் கொண்ட இவர்களின் உணவு பழக்கம் ஒரு சுவைமிக்கது என்கிறார்கல். மொத்தத்தில் இவர்களின் கலாசாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் என்பது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வசீகரமான ஒன்றாக உள்ளது.
ஷின்ஜியாங் பகுதியில் பாதியளவில் இந்த உய்குர் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். கடந்த சில வருடங்களுக்காகச் சீனாவின் பெரும்பான்மை இனமான ஹான் இனத்து மக்கள் ஷின்ஜியாங்கிற்கு இடம் பெயர்ந்து செல்வதால், உய்குர் முஸ்லிம்கள் தங்களின் கலாசாரமும், வாழ்வாதாரமும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாக உணர்கின்றனர்.
இனத்தை அழிக்கும் முயற்சியில் சீனா?
சீனா இந்த உய்குர் முஸ்லிம் இனத்தை அழிப்பதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த மக்களைத் தீவிரமாகக் கண்காணிப்பது, சித்ரவதை செய்வது, காரணமின்றி முகாம்களில் அடைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் சீனா உய்குர் முஸ்லிம் மக்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
உய்குர் இன மக்கள் நெடுங்காலமாகச் சீனாவிடமிருந்து விடுதலை கோருகின்றனர். ஆனால் சீனா இதைப் பல ஆண்டுகளாக மறுக்கிறது.
திபெத்தை போல ஷின்ஜியாங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற பிராந்தியம். ஆனால் நடைமுறையில் அது நிகழ்வதில்லை. சீன அரசுதான் ஷின்ஜியானை கட்டுப்படுத்தி வருகிறது. இது அதிகமாகப் பருத்தி விளையக்கூடிய ஒரு இடம். மேலும் எண்ணெய் வளம் மிகுந்த ஒரு பகுதியாகவும் உள்ளது. உய்குர் முஸ்லிம்கள் தங்களின் பகுதியை விடுதலை பெற்ற பகுதியாக அறிவித்திருந்தனர். ஆனால் 1949-ம் ஆண்டு மாவோ தலைமையில் சீனாவில் ஏற்பட்ட புதிய கம்யூனிஸ்ட் அரசு அதன் கட்டுப்பாட்டை முழுவதுமாக தனக்குள் கொண்டுவந்தது. சீன முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள்
சீன முகாம்களில் உய்குர் முஸ்லிம் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுத்தவதாகவும், உய்குர் பெண்களுக்குக் கட்டாயமாகக் குழந்தை பெறும் தன்மையை நீக்கும் நடைமுறைகளை மேற்கொள்வதாகவும் சில தினங்களுக்கு முன் பிபிசி செய்தி ஒன்றை வெளியிட்டது.
கம்யூனிச கோட்பாடுகளுடன் மத நம்பிக்கை ஒத்துப் போகாத காரணத்தால் மத நம்பிக்கைகளை அழித்தொழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சீன அரசின் உதவியோடு சீனாவின் பெரும்பான்மை இனமான ஹான் குழுவினர் 1950களில் உய்குர் மக்கள் வாழும் பகுதிகளுக்குக் குடிபெயரத் தொடங்கினர். ஹான் மக்கள் அவர்களுக்கென கட்டமைப்புகளையும், வர்த்தகங்களையும் உருவாக்கினர். தற்போது அங்கு 40 சதவீத அளவில் ஹான் மக்கள் உள்ளனர்.
படிப்படியாக தங்கள் இடங்களை ஹான் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பதைக் கண்டு உய்குர் மக்கள் அஞ்சுகின்றனர். மேலும் அவர்களை அழித்தொழிக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்கின்றனர்.
Also Read: பிபிசி வேர்ல்டு நியூஸ் சேனலுக்கு தடை விதித்த சீனா! - என்ன காரணம்?
ஒரு கட்டத்தில் ஷின்ஜியங்கில் ஹான் இனத்தவருக்கு எதிரான நிலைப்பாடுகள் அதிகரித்தன. இதனால் அவ்வப்போது ஷின் ஜியாங்கில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளன. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலில் 200 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இதற்கு உய்குர் முஸ்லிம்கள்தான் காரணம் எனச் சீனா தெரிவித்தது. அப்போதிலிருந்து சீனா உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உய்குர் முஸ்லிம்களைச் சீனா அதீநவின தொழில்நுட்பம் கொண்டு கண்காணித்து வருகிறது.
சீனா லட்சக்கணக்கான உய்குர் முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து வைத்துள்ளதாக ஐநா தெரிவித்தபோது, தீவிரவாதத்தைத் தடுக்கும் நடவடிக்கை அது எனச் சீனா கூறியது. மேலும் உய்குர் முஸ்லிம் மக்களுக்குத் திறன்களை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிகளை வழங்கும் பயிற்சி மையம் அது எனச் சீனா கூறுகிறது.
ஆனால் இந்த சிறைகளில் உய்குர் முஸ்லிம்களை மூளைச் சலவை செய்து வருகிறது சீனா என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. முஸ்லிம் மக்கள் வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் பன்றிக்கறியை உண்ண வேண்டும் என்ற விதிமுறைகள் அந்த சிறைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் `மூன்று தீய சக்திகள்; எனச் சீனாவால் குறிப்பிடப்படும் பிரிவினைவாதம், பயங்கரவாதம், மதரீதியான தீவிரவாதம் ஆகியவற்றை அழிக்கும் நடவடிக்கை என உய்குர் முஸ்லிம்கள் மீது அவிழ்த்துவிடும் கொடுமைகளுக்குச் சீனா பெயர் சூட்டியுள்ளது.
அங்கு உய்குர் பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது, ஆண்கள் தாடி வளர்க்கக் கூடாது, நோன்பு இருக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளையும் சீனா விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் அங்கு உய்குர் முஸ்லிம் மக்கள் பல்வேறு விதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும், அவர்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகள் அங்கு அழித்தொழிக்கப்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சீனா உய்குர் முஸ்லிம்களை எந்த காரணமுமின்றி முகாம்களில் வைத்து சித்ரவதை செய்வதாக பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில் அமெரிக்கா போன்ற நாடுகள், சீனா உய்குர் முஸ்லிம்களைக் கட்டாயமாக வேலை வாங்குவதால் ஷின்ஜியாங் பிராந்தியத்திலிருந்து வரக்கூடிய பருத்தி மற்றும் தக்காளிக்குத் தடை விதித்திருந்தது.
அதேபோல பிரிட்டனும், சீனா உய்குர் முஸ்லிம்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாலும், மனிதத் தன்மை அற்று நடந்து கொள்வதாலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில சரக்குகளுக்குத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிபிசி கூறுவது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக , "சீன அரசுத்துறையின் நடவடிக்கை தொடர்பான முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. சர்வதேச அளவில் உலக செய்திகளை வெளிப்படையாகவும் பக்க சார்பற்று அச்சமின்றியும் வெளியிடுவதில் உலகின் நம்பகமான சர்வதேச ஊடக ஒளிபரப்பாளராக பிபிசி உள்ளது," என்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்திய விவகாரங்களில் பிபிசி:
இந்திய விவகாரங்கள் குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பாகவும் பிபிசி எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளது. காஷ்மீர் பிரிக்கப்பட்டபோதும், சிஏஏ விவகாரங்களிலும் பிபிசி ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாக பிபிசி நிகழ்ச்சி ஒன்றுக்காக விடுக்கப்பட்ட அழைப்பை பிரசார் பாரதியின் தலைவர் நிராகரித்து இருந்தார். குறிப்பாகக் காஷ்மீர் விவகாரத்தில் பிபிசி செய்திகளைத் திரித்து வழங்குவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த சமயத்தில் பிபிசி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், “காஷ்மீர் விவகாரத்தில் பிபிசி துல்லியமாகவும், பாரபட்சமின்றியும் செய்தி வழங்குகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
Also Read: `உய்குர் மக்களை அழிக்க சீனா திட்டம்; இனப்படுகொலை!’- மைக் பாம்பியோ விமர்சனம்
http://dlvr.it/RsYwg1
Friday, 12 February 2021
Home »
» உய்குர் முஸ்லீம்; காஷ்மீர் விவகாரம்: பிபிசி, தொடர்ந்து சீன-இந்திய அரசின் எதிர்ப்பை சந்திப்பது ஏன்?