உடல் நலம் குறித்த விழிப்புணர்வால் பாரம்பர்ய நெல் ரக அரிசியைச் சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. மருத்துவர்களும் பாரம்பர்ய அரிசிகளில் சத்துகள் மிகுந்துள்ளன என்று சொல்லி அவற்றைப் பரிந்துரைத்து வருகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் பாரம்பர்ய நெல் சாகுபடி அதிகரித்து வருகிறது. இது விவசாயிகளுக்கும் நல்ல வருமானத்தைக் கொடுத்து வருகிறது. இதனால் தமிழ்நாடு தவிர்த்து இந்திய அளவிலும் பாரம்பர்ய நெல் சாகுபடி அதிகரித்து வருகிறது. நெல் அருங்காட்சியகம்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு நெல் ரகம் இருந்திருக்கிறது. `அப்படிப்பட்ட நெல் ரகங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தில் ஒரே இடத்தில் 1,350 பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி சையது கனி கான். சமீபத்தில் பாரம்பர்ய நெல் அருங்காட்சியகத்தை தன்னுடைய வீட்டிலேயே தொடங்கியிருக்கிறார்.
இதுகுறித்து அவரிடம் பேசியபோது, ``இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நெல் ரகங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் இப்போது 18,000 நெல் ரகங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. இந்தப் பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடித் தேடி பயிர் செய்து வருகிறேன். அந்த வகையில் 1,350 பாரம்பர்ய நெல் ரகங்களை விதைப் பெருக்கத்துக்காகச் சாகுபடி செய்து வருகிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்னர் 40 ரகங்களிலிருந்து தொடங்கிய பாரம்பர்ய நெல் சாகுபடி, இன்று 1,300 ரகங்களில் வந்து நிற்கிறது.சையது கனி கான்
எனக்கு 15 ஏக்கர் நிலமிருக்கிறது. அதில் ஒரு ஏக்கரில் பாரம்பர்ய நெல் விதைப்பெருக்கமும், ஒன்பது ஏக்கரில் வர்த்தகரீதியான நெல் சாகுபடியும், ஐந்து ஏக்கரில் மா சாகுபடியும் நடக்கின்றன. வீட்டுத் தேவைக்கான பாலுக்காகவும், இயற்கை உரத் தேவைக்காகவும் ஐந்து மாடுகள் வளர்க்கிறேன். நாடு முழுவதும் நடைபெறும் பாரம்பர்ய விதைத் திருவிழாக்களில் நெல் ரகங்களைக் காட்சிக்கு வைத்து அதன் சிறப்புகளைச் சொல்லிவருகிறேன்.
இதன் அடுத்தகட்டமாக என் வீட்டின் மொட்டை மாடியில் 1,350 நெல் ரகங்களையும் காட்சிக்கு (Rice Museum) வைத்திருக்கிறேன். இதை ஒரு அருங்காட்சியகம் போன்று அமைத்திருக்கிறேன். சமீபத்தில்தான் இதைத் தொடங்கினோம். யார் வேண்டுமென்றாலும் இங்கே அருங்காட்சியகத்தில் வைத்திருக்கும் நெல் ரகங்களைப் பார்வையிடலாம். பார்வையிட்டு விதைப் பெருக்கத்துக்காக நெல் விதைகளை இலவசமாகப் பெற்றுச் செல்லலாம். விதைகளின் இனத்தூய்மையைக் காப்பது எப்படி என்பதையும் சொல்லித் தருகிறேன். இதோடு இயற்கை விவசாய முறையில் பாரம்பர்ய நெல் சாகுபடியை எப்படிச் செய்வதென்றும் சொல்லிக் கொடுக்கிறேன்.நெல் விதைகள் விவரங்களுடன்
விதைகளை வாங்க வருபவர்கள் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்; கொடுக்கும் விதையைப் பெருக்கி, மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்பவராக இருக்க வேண்டும். அவ்வளவுதான் நிபந்தனை. என்னிடம் 1,350 ரகங்கள் இருக்கின்றன. ஒரு கிராமத்தில் ஒரு ரகம் விளைவிக்கப்பட்டாலும், பாரம்பர்ய நெல் ரகங்கள் எளிதாகப் பரவிவிடும். அப்படி விதைகளைப் பரப்ப ஆர்வமுள்ளவர்கள் என்னை அணுகலாம். விதைகள் 10 கிராம், 20 கிராம் என்ற அளவில்தான் கிடைக்கும். அதைப் பயிரிட்டு பெருக்கிக்கொள்ள வேண்டும். என்னுடைய பண்ணை பெங்களூருவிலிருந்து 135 கி.மீ. மாண்டியாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கிற கிரகவலு என்கிற கிராமத்தில் இருக்கிறது" என்றார்.
தொடர்புக்கு, சையது கனி கான்,
செல்போன்: 78926 92713, 99017 13351.
http://dlvr.it/Rvq3ft
Wednesday, 17 March 2021
Home »
» 1,350 நெல் ரகங்களை வைத்து வீட்டிலேயே அருங்காட்சியகம்... அசத்தும் கர்நாடக விவசாயி!