``தயவு செய்து எனக்கு நீதி வேண்டும்... தயவு செய்து'' என்று தொடங்கி பெண் ஒருவர் அழுது கொண்டே பேசியிருக்கும் வீடியோ இந்திய அளவில் கவனம் பெற்று வருகிறது. இந்த வீடியோவில் இருக்கும் பெண் உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது.கதறும் பெண், கைது செய்யப்பட்ட கெளரவ் ஷர்மாவின் உறவினர்
Also Read: உ.பி: வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண் - நடந்தது என்ன?அந்த வீடியோவில், ``தயவு செய்து எனக்கு நீதி வேண்டும்... முதலில் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தான். இப்போது என்னுடைய அப்பாவைச் சுட்டுக் கொன்றுவிட்டான்'' என்று சொல்லி அழுகிறார். `அவன் பெயர் என்ன?' என்று அங்கிருந்தவர்கள் கேட்கையில், ``கெளரவ் ஷர்மா.. கெளரவ் ஷர்மா'' எனச் சொல்லி கதறுகிறார்.
இந்த வீடியோ வெளியானதை அடுத்து இது குறித்து உத்தரப் பிரதேச காவல்துறையினர் சில தகவல்களை வெளியிட்டிருக்கின்றனர். ``தற்போது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் அந்தப் பெண்ணின் தந்தை, 2018 ஜூலையில் கெளரவ் ஷர்மாவுக்கு எதிராக புகார் அளித்தார். அந்தப் புகாரில் தன் மகளுக்கு கெளரவ் ஷர்மா பாலியல் தொல்லை தந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கில் ஒரு மாத காலம் சிறையிலிருந்தார் கெளரவ் ஷர்மா. பிறகு ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டார் அவர்.
தற்போது நேற்றைய தினம் (மார்ச் 1) கெளரவ் ஷர்மாவின் மனைவியும், சொந்தக்கார பெண் ஒருவரும் கோயிலுக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு 2018-ல் கெளரவ் ஷர்மாவால் பாதிக்கப்பட்ட பெண்ணும் வந்திருக்கிறார். அந்தப் பெண்ணை கெளரவ் ஷர்மாவின் சொந்தக்கார பெண் வம்புக்கிழுத்ததாகத் தெரிகிறது. பின்னர் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.உ.பி காவல்துறை
Also Read: போக்சோ: `பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்து கொள்கிறீர்களா?' - உச்ச நீதிமன்றத்தின் கேள்வியும் எதிர்வினையும்!
இது குறித்துத் தெரிந்து கொண்ட கெளரவ் ஷர்மா தனது உறவினர்களுடன் அந்தப் பெண்ணின் வயலுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அந்தப் பெண்ணிடமும் அவரது தந்தையிடமும் வாக்குவாதம் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணின் தந்தைக்கும் கெளரவ் ஷர்மாவுக்குமிடையே வாக்குவாதம் முற்றியிருக்கிறது. பின்னர் அங்கிருந்து கெளரவ் ஷர்மா சென்றிருக்கிறார். இரண்டு மணி நேரம் கழித்து 4 - 5 நபர்களுடன் அங்கே வந்த கெளரவ் ஷர்மா அந்தப் பெண்ணின் தந்தையைச் சுட்டுக் கொன்றுவிட்டார்'' என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
கெளரவ் ஷர்மா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தன்னை சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக அடையாளப்படுத்தியிருக்கிறார். இதையடுத்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜூகி சிங், ``கெளரவ் ஷர்மா எங்கள் கட்சியின் நிர்வாகி அல்ல. அவர் பாலியல் தொல்லையும் கொலையும் செய்த குற்றவாளி. தற்போதுள்ள ஆட்சியில் இதுபோன்ற கிரிமினல்கள் அதிகரித்துக் கொண்ட இருக்கின்றனர். இந்த சம்பவத்தை வைத்துப் பார்க்கும்போது, மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது'' என்று கூறியிருக்கிறார்.
अलीगढ़ के भाजपा सांसद के साथ हाथरस में बेटी के पिता की निर्मम हत्यारोपी गौरव शर्मा की तस्वीर प्रमाण है कि दुर्दांत हत्यारे को सत्ता का संरक्षण प्राप्त है।
कब तक गुनहगारों को बचाने के लिए विपक्ष पर आरोप लगाकर ध्यान भटकाएगी भाजपा?
हो कठोरतम कार्रवाई। pic.twitter.com/lom6LBWkTr— Aashish Yadav (@aashishsy) March 2, 2021
சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஆஷிஷ் யாதவ் என்பவர் இரண்டு புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ``அலிகார்க் பா.ஜ.க எம்.பியோடு கெளரவ் ஷர்மா எடுத்துக் கொண்ட புகைப்படம். அதிகாரத்தின் மூலம் கொலைகாரர்கள் எப்படிப் பாதுகாப்பு பெறுகிறார்கள் என்பதற்கான சான்று இது'' என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்த வழக்கில் கெளரவ் ஷர்மாவின் குடும்ப உறுப்பினர் ஒருவரைக் கைது செய்திருக்கிறது உ.பி காவல்துறை. மற்றவர்களைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்து கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார்.உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் `நீதி வேண்டும்' என்று கதறி அழுத வீடியோ உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
http://dlvr.it/RtpP5M
Tuesday, 2 March 2021
Home »
» `2018-ல் பாலியல் தொல்லை; 2021-ல் தந்தை கொலை' - ``நீதி வேண்டும்'' எனக் கதறும் பெண்... நடந்தது என்ன?