தொகுதி மக்களுக்கு செருப்பாக இருந்து உழைப்பேன் என்று மதுரை மேற்கு தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான செல்லூர் ராஜூ பேசியுள்ளார். மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் தேர்தல் அலுவலகத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் செல்லூர் ராஜூ பேசுகையில், “தேர்தல் காலம் மிகக்குறுகியதாக இருப்பதால் கட்சியினர் ஒவ்வொரு இல்லமாக சென்று இல்லத்தரசிகளை சந்தித்து பத்து, பதினைந்து முறை நம் ஆட்சியின் சாதனைகளை சொல்லவேண்டும். தேர்தல் நேரத்தை கவனமாக கையாள வேண்டும். கடந்து பத்தாண்டுகளாக சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளோம். ரவுடிசத்தை அடக்கி, கட்டப்பஞ்சாயத்தை ஒழித்து, நில அபகரிப்புக்கு இந்த ஆட்சியில் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். எதிர்க்கட்சிகள் ஜனநாயக கடமை ஆற்ற வாய்ப்பு கொடுத்துள்ளோம். நம் சாதனை இமாலயம் போன்றது. ஒரு நாள் முழுக்க சொல்லும் அளவுக்கு சாதனைகள் செய்துள்ளோம். திமுக ஆட்சியின் மின்வெட்டு குறித்து மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் அரசுத்திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் மக்களை சென்றடைந்துள்ளது. என்னை ஊருக்கும் உறவுக்கும் தெரிய வைத்தவர் தாய் என்றால் உலகறிய செய்தவர்கள் மேற்கு தொகுதி மக்கள். மேற்கு தொகுதிக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செய்துள்ளேன். பேவர் பிளாக், சமுதாயக் கூடம், நியாய விலைக்கடைகள் அமைத்து கொடுத்துள்ளோம். ஸ்மார்ட் கார்டு பயோ மெட்ரிக் முறையை கொண்டுவந்து நியாய விலைக்கடைகளில் முறைகேட்டை தடுத்துள்ளோம். எனது துறையின் சாதனையாக 21,000 கோடியாக இருந்த கூட்டுறவு வங்கி டெபாசிட்டை 69,000 கோடியாக உயர்த்தியுள்ளேன். கூட்டுறவுத் துறையின் சிறந்த செயல்பாட்டுக்காக 29 முறை ஜனாதிபதி விருதை பெற்றுள்ளேன். உங்களுக்கு செருப்பாக இருந்து உழைப்பேன். மேற்கு தொகுதி மக்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். தேவையானவற்றை செய்து கொடுப்பேன். பத்தாண்டுகள் நான் அமைச்சராக இருந்தபோது மதுரையில் யாருக்கும் ஒரு தொந்தரவும் செய்தது கிடையாது. நான் எப்போதும் ரவுடிகளை அருகில் வைத்துக்கொண்டது கிடையாது. ஒழுக்கத்தோடு உள்ளன்போடு இருந்தவன். மனதில் பட்டதை பேசக்கூடியவன். நான் வேட்பாளர் அல்ல. இங்கு நீங்கள்தான் வேட்பாளர். ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியம். எதையுமே விட்டு விடக்கூடாது. சிறு துளி பெரு வெள்ளம் போல. இங்கே தமாகவின் ஜி.கே.வாசன், எல்.முருகன், மோடி, ஜெயலலிதா உள்ளிட்டோர் வேட்பாளராக உள்ளதாக நினைத்து உழைக்க வேண்டும். திமுக ஆட்சிக்காலத்தில் மதுரையில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. இன்னும் மூன்றாண்டுகளில் மதுரை வெளிநாட்டைபோல மாறும். அதை கண்கூடாக மக்கள் பார்க்க போகின்றனர். புன்முறுவலோடு சிரிக்க முகத்தோடு மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அரசு உருவாக்க உள்ளது” என பேசினார்.
http://dlvr.it/RvbR8G
Sunday, 14 March 2021
Home »
» ''தொகுதி மக்களுக்கு செருப்பாக இருந்து உழைப்பேன்'' - செல்லூர் ராஜூ