அசாம் தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளின் இலக்காக இருப்பவர்கள் அம்மாநிலத்தின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். இதற்கான காரணம் என்ன? அசாம் மாநிலத்தில் விளையும் தேயிலைக்கு உலக அளவில் டிமாண்ட் அதிகம். அதே அளவு டிமாண்ட் தேர்தலின் போது அங்குள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கும் இருக்கும். காரணம், அசாம் மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் தேயிலைத் தோட்டத் தொழிலை சார்ந்தவர்கள். 126 சட்டமன்றத் தொகுதிகளில் 45 இடங்களில் வெற்றியை தீர்மானிப்பவர்கள் அவர்கள் தான். 60% இந்துக்கள், 15% கிறிஸ்துவர்கள், மற்ற மதத்தினர் 25% பேர், ஒடியா, கொண்டி, முண்டாரி, அஸ்ஸாமி என ஏராளமான மொழி பேசுபவர்களாக இருப்பதால் அவர்களை மதம் மற்றும் சாதி ரீதியில் ஒருங்கிணைப்பது இயலாத காரியம். அதனால் பல்வேறு திட்டங்கள் மூலமாக கவர முயற்சி செய்கின்றன அரசியல் கட்சிகள். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளில் முதன்மையானது தினசரி ஊதியத்தை 351 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதுதான். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என 2014 நாடாளுமன்றத் தேர்தலின் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற அசாம் அமைச்சரவை கூட்டத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் தினக்கூலி 50 ரூபாய், அதாவது 167இல் இருந்து 217 ரூபாயாக உயர்த்தி அறிவிப்பு வெளியானது. இது ஒரு புறம் இருக்க, அசாமில் பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேயிலை தொழிலாளர்களுக்கான தினக்கூலி 365 ரூபாயாக உயர்த்தப்படும் என்று உறுதி அளித்தார். அதிலிருந்து சரியாக ஆறாவது நாள் அசாம் அரசு தொழிலாளர்களின் தினக்கூலியை மீண்டும் உயர்த்தியது. இப்படி முழுக்க முழுக்க தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வட்டமிட்டு ஆளும் பாஜக, எதிர்கட்சியான காங்கிரஸ் காய்களை நகர்த்தி வருகின்றன. ஆனால் இரண்டு கட்சிகளின் கடந்த கால செயல்பாடுகளை ஆய்ந்து தீர்ப்பு எழுதக் காத்திருக்கிறார்கள் , அசாம் மாநிலத்தின் அசைக்கமுடியாத சக்தியாகவும், மிகப்பெரும் வாக்கு வங்கியாகவும் இருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்.
http://dlvr.it/Rts8J4
Wednesday, 3 March 2021
Home »
» அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!