கேரள மாநில சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் மற்றும் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிகள் என மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் சி.பி.எம் சார்பில் குற்றியாடி தொகுதியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்ற வேண்டும் எனப் போராட்டங்கள் நடந்தது பரபரப்பை கிளப்பியது. அதுபோல மானந்தவாடி தொகுதி பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இளைஞர், தான் போட்டியிட விரும்பவில்லை எனக் கூறி பின்வாங்கிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எல்லாவற்றுக்கும் மேலாக, காங்கிரஸ் கட்சியில் சீட் மறுக்கப்பட்டதால் மாநில மகிளா காங்கிரஸ் தலைவியாக இருந்த லத்திகா சுபாஷ் செய்த செயல், தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ஆம், தனக்கு சீட் கொடுக்காத கட்சியின் தலைமை அலுவலகம் முன் அமர்ந்து தன் தலையை மொட்டை அடித்துள்ளார் லத்திகா. 'அரசியலில் உள்ள பெண்களின் உண்மையான உருவம்' எனத் தலைப்பிட்டு, லத்திகா சுபாஷ் மொட்டை போட்டுக்கொண்ட புகைப்படம் வலைதளங்களில் பகிரப்படுகிறது.ஆதரவாளர்களுடன் லத்திகா சுபாஷ்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லத்திகா சுபாஷ். காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில மகளிரணி தலைவராக இருந்தவர். அவர் தனது சொந்த தொகுதியான ஏற்றுமானூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்து, அங்கு தேர்தல் பணி செய்தபடியே, சீட்டுக்காகக் காத்திருந்தார். ஆனால், காங்கிரஸ் தலைமை அவருக்கு சீட் வழங்காமல், ஏற்றுமானூர் தொகுதியைக் கூட்டணியில் உள்ள கேரள காங்கிரஸ் கட்சிக்கு (ஜோசப் அணி) அளித்தது.
இதனால் ஏற்றுமானூர் தொகுதியில் களப்பணியாற்றியபடி சீட்டுக்குக் காத்திருந்த லத்திகா சுபாஷ் ஏமாற்றத்துக்கு ஆளானார். சீட் கிடைக்காததால் ஆவேசமான அவர், திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைமை அலுவலகமான இந்திரா பவன் முன்பு அமர்ந்து தலையை மொட்டை அடித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். ஆனாலும் கட்சி மேலிடம் அசைந்துகொடுக்கவில்லை. இதனால் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஏற்றுமானூர் தொகுதியில் சுயேச்சையாகக் களம் இறங்கியிருக்கிறார் லத்திகா சுபாஷ்.சுயேச்சையாக களம் இறங்கிய லத்திகா
தன் ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய லத்திகா சுபாஷ், "மாணவர் பருவத்தில் இருந்தே காங்கிரஸில் 30 ஆண்டுகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நான், என் ஜென்ம இடமான ஏற்றுமானூரில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன். மரணிக்கும்வரை காங்கிரஸ்காரியாக இருப்பேன். மற்றொரு கட்சியில் சேரும் எண்ணம் இல்லை. என்றும் ஏற்றுமானூர் மக்களுடன் சேர்ந்து பணிபுரிவேன்" எனக் கண்ணீருடன் பேசினார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சுயேச்சையாகப் போட்டியிடுவது குறித்து பேசிய லத்திகா சுபாஷ், "தேர்தல் காலத்தில் கட்சியை வேதனைப்படுத்த நான் ஒருபோதும் விரும்பவில்லை. மிகவும் சங்கடமாகிப் போனதால்தான் நான் இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கினேன். உடலில் உள்ள பழுத்த கட்டியை அகற்றும்போது வலி ஏற்படுவது உண்மைதான். ஆனால், அதை அகற்றாமல் இருந்தால் எதிர்காலத்தில் மிகவும் மோசமாகிவிடும். ஒரு பெண்ணாக பொதுவெளியில் செயல்படுவதில் பல இடையூறுகள் உள்ளன" என்றார்.காங்கிரஸ்
லத்திகா சுபாஷ் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிடுவதைத் தடுக்க காங்கிரஸ் சார்பில் பலரும் பேசிப் பார்த்தனர். ஆனால், லத்திகா அசைவதாக இல்லை. இதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கேரள முதல்வருமான உம்மன்சாண்டி, "ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது தனிமனித சுதந்திரம். சுயேச்சை வேட்பாளராக ஒருவர் போட்டியிடுவதைத் தடுக்க முடியாது. லத்திகா போட்டியிடட்டும்" என்றார்.
அரசியல் கட்சிகளில் பெண்களுக்கான பகிர்வு கொடுக்கப்படுவதில்லை என்ற குரல்கள் வளர்ந்து வரும் நிலையில், கேரள காங்கிரஸில் லத்திகாவின் அதிரடி தேசத்தையே கவனிக்க வைத்துள்ளது.
http://dlvr.it/RvxZPK
Friday, 19 March 2021
Home »
» கேரளா: மொட்டை, கண்ணீர், சுயேட்சை முடிவு... தேசத்தையே கவனிக்க வைத்த லத்திகா!