மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் பெய்யும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. மழை வெள்ளத்தால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதைச் சமாளிக்க எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது பயனளிப்பதில்லை. கடந்த ஆண்டும்கூட மழையால் மூன்று முறை மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் இப்பிரச்னைக்கு தீர்வு காண ஆளும் சிவசேனாவால் எந்தத் தீர்வும் காண முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதனால் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தென்கொரியா, ஜப்பான், கனடா போன்ற நாடுகளில் இருப்பது போன்று பூமிக்கு அடியில் மழை நீரை சேமிக்க பிரம்மாண்ட தொட்டிகளைக் கட்ட மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. Floods
சிறிய குளங்கள் போன்று இவை பூமிக்கு அடியில் கட்டப்படும். ஜூன் மாதம் மழை தொடங்குவதற்கு முன்பு மழையால் அதிக அளவு பாதிக்கப்படும் இரண்டு இடங்களில் இது போன்ற தண்ணீர் தொட்டிகளைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொட்டியும் 100 மீட்டர் நீளமும் 50 மீட்டர் அகலமும், 6 மீட்டர் ஆழமும் கொண்டதாக இருக்கும். இவை 130 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் அதிக அளவில் பாதிக்கப்படும் பரேல் ஹிந்த் மாதா பகுதி மற்றும் தாதர் ஆகிய இரண்டு இடங்களில் சோதனை அடிப்படையில் முதலில் இரண்டு ராட்சத தொட்டிகள் பூமிக்கு அடியில் கட்டப்படும். இதற்கான மண் சோதனை பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதோடு மாநகராட்சி பொறியாளர்கள் ஜப்பானின் டோக்கியோவில் கட்டப்பட்டுள்ள பூமிக்கு அடியில் இருக்கும் தொட்டிகளை நேரில் சென்று பார்த்துவிட்டு வந்துள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி கூடுதல் கமிஷனர் வல்லரசு கூறுகையில், போர்க்கால அடிப்படையில் இரண்டு தண்ணீர்த் தொட்டிகள் கட்டப்படும். இதற்கான பணிகள் இந்த மாதமே தொடங்கி ஜூன் மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொட்டி மூலம் 4 மணி நேரம் பெய்யக்கூடிய 300 மிமீ அளவு மழை தண்ணீரை சேமிக்க முடியும். இத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் மும்பையில் மழையால் அதிக அளவில் பாதிக்கப்படும் இடங்களில் இது போன்ற தண்ணீர் தொட்டிகள் கட்டப்படும்'' என்றார்.Mumbai
இந்தத் தொட்டியில் சேமிக்கப்படும் தண்ணீர் மழை முடிந்த பிறகு கடல் கொந்தளிப்பு அடங்கிய பிறகு மீண்டும் வடிகால் கால்வாய்கள் மூலம் கடலுக்குள் அனுப்பப்படும். மும்பையை சுற்றி கடல் இருப்பதால் கடல் கொந்தளிப்பாக இருக்கும்போது, மழையும் பெய்யும் பட்சத்தில் கடல் நீர் கழிவு நீர் கால்வாய்களில் புகுந்துவிடுகிறது. இதனால் மழை நீர் கடலுக்குள் செல்ல முடிவதில்லை. இதனால் மும்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
அதோடு தற்போது இருக்கும் கழிவு நீர் கால்வாய்களில் மணிக்கு 50 மி.மீ அளவுக்கு பெய்யும் மழை நீரை மட்டுமே கொண்டு செல்லும் தன்மையுள்ளது ஆகும். ஆனால், மும்பையில் ஒரே நாளில் 100 முதல் 300 மி,மீ அளவுக்கு மழை பெய்துவிடுகிறது. இதனால் கழிவு நீர் கால்வாய்களும் மழை நீரைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மும்பையில் ஒரே நாளில் 293 மி.மீ அளவுக்கு மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மும்பை மாநகராட்சியைக் கடந்த 20 ஆண்டுகளாக சிவசேனாதான் ஆட்சி செய்து வருகிறது.
http://dlvr.it/RvLy9w
Wednesday, 10 March 2021
Home »
» பூமிக்கு அடியில் கான்கிரீட் குளங்கள்... மழை வெள்ளத்தில் இருந்து விடுபடுமா மும்பை?