சட்டமன்றத் தேர்தலையொட்டி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, கிராமத்தில் யூடியூப் சமையல் கலைஞர்களுடன் சாப்பிட்டது, ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொண்டது, ஒற்றை கையில் புஷ் அப்ஸ் போட்டி எனத் தமிழ்நாட்டை கலக்கிவிட்டு கேரளா சென்றுள்ளார். கொச்சியில் உள்ள புனித தெரசா பெண்கள் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, ஆண்களும் பெண்களும் சமூகத்தில் சமமானவர்கள் எனக் கூறிய மாணவியின் கருத்தை மறுத்து, ''பெண்கள் ஆண்களைவிட சக்தி வாய்ந்தவர்கள். அவர்களுக்குத் தங்கள் சக்தியை பயன்படுத்துவது எப்படி எனப் புரியவில்லை" எனக் கூறினார்.Rahul Gandhi
இந்தியச் சமூகத்தில் பெண்கள் மறைமுகமாக ஒடுக்கப்படுவது பற்றியும், பெண்களுக்கு எதிராக சமூகத்தின் சூழ்ச்சிகளையும் மாணவிகளிடையே உரையாடிய ராகுல் காந்தி,
"ஆண்கள் எப்போதும் பெண்களுக்குச் சொல்லாத ஒரு ரகசியத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆண்களைவிட பெண்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள். ஆனால், ஆண்கள் பெண்களை முட்டாள் ஆக்குகின்றனர். பெண்களுக்கு அவர்களின் சக்தி எவ்வாறு இயங்குகிறது, எங்கிருந்து வருகிறது என்று புரியவில்லை என்பதுதான் பிரச்னை. இந்தப் புரிந்துணர்வுதான் உங்களுக்கு அதிகாரம் அளிக்கும்" என்றார். இதோடு ஒரு மாணவி, தற்காப்புக்காக ஏதாவது கற்றுத் தருமாறு கேட்டதற்கு, ராகுல் காந்தி ஒரு தற்காப்புக் கலை செய்கையை செய்துகாட்டினார். பின்னர், இதுபோல சமூகத்தால் அழுத்தப்படும்போது எதிர்ப்பதற்கு பெண்கள் மன வலிமையை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறினார்.
"சமூகம் எதிர்காலத்தில் உங்களை ஒடுக்கப்போகிறது. நான் வெளிப்படையாகக் கூறுகிறேன், இந்தியச் சமூகம் பெண்களை மிகவும் மோசமாக நடத்துகிறது. ஒவ்வொரு நாளும் பெண்கள் அறிவிலிகள்போல அவமதிக்கப்படுகிறார்கள். நீங்கள் விரும்பியதைச் செய்ய சமூகம் அனுமதிக்காது. தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலிருந்து மீள நீங்கள் மன உறுதி உள்ளவர்களாக உள்ளிருந்து உங்கள் சக்தியை உருவாக்க வேண்டும். அதற்கு, நீங்கள் எந்த விதங்களில், எதனை காரணமாகச் சொல்லி கட்டிவைக்கப்படுகிறீர்கள் எனப் புரிந்துகொள்ள வேண்டும். பின்னர், அதிலிருந்து மீண்டு உங்களை நிலைநிறுத்த வேண்டும்" என ராகுல் காந்தி கூறினார். ராகுல் காந்தி
``சமூகம் நீங்கள் பலமற்றவர்கள் என உங்களை நம்பவைக்க முயலும். அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதேபோல நீங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என உணரும்போது அதனை தவறாக உபயோகப்படுத்தாமல் இருக்க வேண்டும்" என அவர் கல்லூரிப் பெண்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நாட்டில் பெண்களின் நிலை குறித்து வெளிப்படையாகவும், பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடக்கும் இழிவுகளையும் சமூகம் நடத்தும் நாடகங்களையும் சுட்டிக்காட்டியும் ராகுல் காந்தி பேசியுள்ளது சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
http://dlvr.it/RwCb2J
Tuesday, 23 March 2021
Home »
» ``பெண்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன்..!" - வைரலாகும் ராகுல் காந்தியின் பேச்சு