கேரளாவின் முதல் திருநங்கை வானொலி தொகுப்பாளராக சாதனை படைத்த அனன்யா குமாரி அலெக்ஸ், அங்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கையாக வரலாறு படைத்துள்ளார்.
``திருநங்கைகளுக்கும், ஆண்கள், பெண்களைப்போல திறமைகள் உள்ளன. அதனை மதித்து எங்களை சமமாக நடத்த வேண்டும். எங்களுக்கு வேறு எந்த அனுதாபமும் தேவை இல்லை. இனி வரும் காலங்களில் திருநங்கைகளின் திறமை எல்லா துறைகளிலும் வெளிப்படும்" என்கிறார் 28 வயது இளம் வேட்பாளரான அனன்யா. திருநங்கை அனன்யா
மலப்புறம் மாவட்டம், வெங்கரா தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் பி.கே. குனாலிகுட்டி மற்றும் இடது ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் பி. ஜிஜி ஆகிய நட்சத்திர வேட்பாளர்களுடன் தேர்தல் களம் காணும் அனன்யா, பெண் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம், கல்வி மேம்பாடு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவது பற்றி பேசிய அனன்யா, ``இந்த தேர்தல் வெற்றி, தோல்வியை குறித்ததன்று! நான் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக, அவர்களின் சார்பாக தேர்தலில் பங்கேற்கிறேன். அவர்களுக்காக உழைக்கத் தயாராக உள்ளேன்" எனக் கூறியுள்ளார். மேலும், தனது கடந்த காலத்தில் கடந்து வந்த களங்கங்கள், சோதனைகளை நினைவுகூர்ந்த அனன்யா, ``உலகில் ஓர் ஓரமாக இருந்துவிட்டுச் செல்ல மாட்டேன், என் வாழ்வுக்கான அடையாளத்தை உருவாக்குகிறேன். போராடுவதும் வெல்வதுமே என் வாழ்வு. அதற்காகக் கடுமையாக முயல்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
Also Read: மேற்கு வங்கம்: பணிப்பெண் டு பி.ஜே.பி வேட்பாளர்... மோடி பாராட்டிய கலிதா மஜி யார்?
``திருநங்கைகள் தயக்கமோ பயமோ இன்றி சமூகத்தை எதிர்கொண்டு அதன் முக்கியப் பகுதியாகச் செயல்பட வேண்டும். எல்லா துறைகளிலும் பிரகாசிக்க வேண்டும். வாய்ப்புகளுக்குக் காத்திராமல் முன்னேறிச் சென்று வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும்" என சக திருநங்கைகளை கேட்டுக்கொண்ட அனன்யா, ``மக்கள் பிரச்னைகளை எதிரொலிப்பதே அரசியல் களத்தில் என் லட்சியம். நான் வெற்றி பெற்றால் தலைமை பொறுப்பில் இருந்து தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக உழைப்பேன்" எனவும் கூறியுள்ளார்.
கேரள சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல் திருநங்கையாகப் போட்டியிடும் அனன்யாவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், எதிர்கட்சி வேட்பாளரான குனாலிகுட்டியும் அவரை வரவேற்றுப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RwQwhP
Friday, 26 March 2021
Home »
» ரேடியோ ஜாக்கி டு எம்.எல்.ஏ வேட்பாளர்... கேரளாவில் கலக்கும் இளம் திருநங்கை அனன்யா!