மும்பையில் கடந்த வாரம் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு வெளியில் வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று அனாதையாக நின்றிருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த கார் நள்ளிரவில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த கார் தானேயைச் சேர்ந்த மன்சுக் கிரண் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. அவர் தானேயில் கடை வைத்திருக்கிறார். அவரது காரை யாரோ திருடிச் சென்று அதில் வெடிபொருள்களுடன் அம்பானி வீட்டுக்கு அருகில் விட்டுசென்றிருக்கிறார்கள். இது தொடர்பாக ஏற்கெனவே கிரணிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருந்தனர். காரைச் சோதிக்கும் வெடிகுண்டு நிபுணர்
விசாரணையில், தனது காரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த மாதம் 18-ம் தேதி மும்பை புறநகர்ப் பகுதியிலுள்ள விக்ரோலியில் நிறுத்திவிட்டுச் சென்றதாகவும், அதை யாரோ திருடிவிட்டதாகவும், இது குறித்து உடனே விக்ரோலி போலீஸில் புகார் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில், இரண்டு நாள்களாக கிரணைக் காணவில்லை. இது குறித்து அவர் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்திருந்தனர். போலீஸார் அது பற்றி விசாரித்துவந்த நிலையில், தானே அருகிலுள்ள கல்வா கழிமுகப்பகுதியிலிருந்து கிரணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
கடலில் மிதந்த உடல்...
கழிமுகப்பகுதியில் ஒருவரின் உடல் கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்த நபரின் உடலை மீட்டு விசாரித்தபோது, அவர் காணாமல்போன கிரண் என்பது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது அவரை யாராவது கொலை செய்து கடலில் தூக்கிப் போட்டார்களா என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே இது குறித்துத் தெரியவரும். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கும் பொறுப்பை தேசியப் புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக பட்னாவிஸ் சட்டமன்றத்தில் பேசுகையில், ``அம்பானிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வெடிகுண்டுகளுடன் காரைக் கொண்டு வந்து நிறுத்தியதில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனால் இந்த வழக்கு விசாரணையை மாநில உள்துறை அமைச்சர் தேசியப் புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும். பட்னாவிஸ்
கார் உரிமையாளரும், போலீஸ் சச்சின் வாக்கும் தொலைபேசியில் பேசியிருக்கின்றனர். அதோடு கார் வெடிகுண்டுடன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் உள்ளூர் போலீஸார் வருவதற்கு பதில் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தானேயைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியான சச்சின் வாக்தான் முதலில் சம்பவ இடத்துக்குச் சென்றிருக்கிறார். மேலும் கார் உரிமையாளர் தனது காரை தானேயில் நிறுத்திவிட்டு மும்பை வந்து கமிஷனர் அலுவலகம் இருக்கும் இடத்தில் ஒருவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர் யார் என்று விசாரிக்கப்பட வேண்டும். இது போன்ற பல சந்தேகங்கள் இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை தேசியப் புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று மாநில அரசிடம் பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அம்பானி வீடு இருக்கும் பகுதியில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கின்றனர்.
Also Read: மும்பை: நள்ளிரவு 1 மணிக்கு வந்த கார்; 20 ஜெலட்டின் குச்சிகள்! - அம்பானியின் வீட்டைத் தாக்க முயற்சி?
http://dlvr.it/Rv4gj6
Saturday, 6 March 2021
Home »
» அம்பானி வீடு அருகில் வெடிபொருள்களுடன் நின்ற கார்! - உரிமையாளர் கடலில் குதித்துத் தற்கொலை?