கேரள மாநிலத்தில், வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டசபைத் தொகுதிகளில் 115 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடுகிறது. அவற்றில் 85 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன், கோணி மற்றும் மஞ்சேஸ்வரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். திருவனந்தபுரத்தில் நடிகர் கிருஷ்ணகுமார், திருச்சூரில் நடிகர் சுரேஷ்கோபியும், சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த மெட்ரோமேன் ஸ்ரீதரன் பாலக்காடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். பா.ஜ.க ஏற்கெனவே வென்ற ஒரே தொகுதியான நேமம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ ஓ.ராஜகோபாலுக்கு சீட் வழங்கப்படவில்லை. அங்கு முன்னாள் கவர்னர் கும்மனம் ராஜசேகரன் போட்டியிடுகிறார்.
இந்தநிலையில் வயநாடு மாவட்டம், மானந்தவாடி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மணிகண்டன் என்கிற மணிக்குட்டன் தனக்குத் தெரியாமலேயே வேட்பாளராக அறிவித்துவிட்டதாகவும், ஓர் அரசியல் கட்சி சார்பில் போட்டியிட விரும்பவில்லை எனக் கூறி பா.ஜ.க தலைமைக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார்.பா.ஜ.க
கேரள வெட்னரி அண்ட் அனிமல் சயின்ஸ் யுனிவர்சிட்டியில் டீச்சரிங் அசிஸ்டென்ட் வேலை செய்துவருகிறார் 31 வயதான மணிகண்டன். இது பற்றி மணிகண்டன் என்ற மணிக்குட்டன் கூறுகையில், `` ஓர் அரசியல் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. பி.ஜே.பி என்னை வேட்பாளராக அறிவித்ததே எனக்குத் தெரியாது. வயநாடு மாவட்டத்தில் அதிகமாக வசிக்கும் பணிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரது பெயரை பி.ஜே.பி அறிவித்ததில் பெருமைகொள்கிறேன்.
தொலைக்காட்சி பார்த்துத்தான் என்னை வேட்பாளராக அறிவித்ததைத் தெரிந்துகொண்டேன். மணிக்குட்டன் என்ற எனது முகநூல் பெயர், வேட்பாளர் பட்டியலில் வந்தது. அதன் பிறகு மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஜே.பி நிர்வாகிகள் எனக்கு தொடர்ச்சியாக போன் செய்த பிறகுதான் முழு விவரமும் தெரியவந்தது.மணிகண்டன் என்ற மணிக்குட்டன்
சட்டசபைத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எனது கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை செய்து, குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகிறேன். நான் பி.ஜே.பி அனுதாபி அல்ல. எனவேதான் பி.ஜே.பி அறிவிப்பை மகிழ்ச்சியோடு நிராகரித்தேன்" என்றார். மானந்தவாடியில் பி.கே.ஜானு என்ற வேட்பாளரை பா.ஜ.க அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்சித் தலைமை திடீரென மணிகண்டனை வேட்பாளராக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் போட்டியிட விருப்பமே தெரிவிக்காதபோது மணிக்குட்டன் எப்படி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது பற்றி கேரள பா.ஜ.க இன்னும் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.
http://dlvr.it/RvgQC4
Monday, 15 March 2021
Home »
» கேரளா: ``நான் பாஜக வேட்பாளரானது எனக்கே தெரியாது” - போட்டியிட முடியாது என நிராகரித்த இளைஞர்