”234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கு நாங்கள் பாடுபடுவோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘’ தமிழகத்தில் மாற்று ஆட்சி அமைய வேண்டும். அதிமுக – பாஜக கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்பதே எங்களது பிரதானமான நோக்கம். தெரிந்தோ தெரியாமாலோ தமிழகத்தில் பாஜக காலூன்ற அனுமதித்து விடக்கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறோம். அதிமுக ஆட்சியை படுதோல்வியை அடையச் செய்ய வேண்டும்; சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்கிற கடமைகளை நிறைவேற்ற வேண்டிய சூழலில், 6 தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை ஏற்றுக்கொண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டு இருக்கிறோம். புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களை கொண்டு பாஜக அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்தது. அப்படியொரு சூழலில் தமிழக சட்டப்பேரவையில் ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் நுழைந்தால் கூட அது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும். எனவே, கூடுதல் தொகுதிகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நம்முடைய அரசியல் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற காரணத்திற்காக இந்த உடன்பாட்டுக்கு சம்மதித்துள்ளோம். 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கு நாங்கள் பாடுபடுவோம். போட்டியிடும் உத்தேசப் பட்டியலை இன்னும் அளிக்கவில்லை. இனிதான் அளிக்கப் போகிறோம்'' என்றார்.
http://dlvr.it/RvCNJW
Monday, 8 March 2021
Home »
» ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட சட்டப்பேரவையில் நுழைந்துவிடக் கூடாது: மார்க்சிஸ்ட்